Thursday, 3 July 2014

மண்வளம் காத்து சிறந்த விளைச்சல் பெற ‘ஹெல்த் கார்டு’: நாடு முழுவதும் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்

நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயனடையும் வகையில் மண் வளம் காத்து சிறந்த விளைச்சல் பெற வழிவகுக்கும் ‘ஹெல்த் கார்டு’ வழங்கும் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
புதிய அரசின் முதல் பட்ஜெட் டில் விவசாயிகளுக்காக பல புதிய திட்டங்களை மத்திய விவசாயத் துறை அமைச்சர் ராதாமோகன் சிங் அறிமுகப்படுத்த உள்ளார்.
இதன்படி, மண்ணின் தன்மையை அறிந்து பயிரிட்டு அமோக விளைச்சலைப் பெறும் வகையில் ‘ஹெல்த் கார்டு’ திட்டம் அறிவிக்கப்பட உள்ளது. இந்த அட்டை வைத்துள்ள விவசாயிகள், தங்களது வயலின் மண் மற்றும் நீரை அருகிலுள்ள அரசு மண் பரிசோதனை நிலையத்தில் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம். இதன்மூலம் மண்ணின் தன்மைக்கு ஏற்ற பயிர், உரங்களின் வகை மற்றும் அளவுகள் குறித்த ஆலோசனைகளையும் விவசாயிகள் பெற முடியும்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் மத்திய விவசாயத்துறை அமைச்சக வட்டாரம் கூறுகையில், ‘‘குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, இதுபோன்ற திட்டத்தை அம்மாநில விவசாயிகளுக்கு கட்டாயமாக்கினார். நிலத்துக்காக பெறப்படும் சிட்டா, பட்டாவை போல் அங்கு இந்த ஹெல்த் கார்டும் அவசியம். அதன் பலன் இனி நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கும் கிடைக்கும். மேலும் விவசாயிகளுக்கு உர மானியமாக அரசு வழங்கும் ரூ.60,000 கோடியில் பெருமளவு தொகையை மிச்சப்படுத்தவும் முடியும்’’ என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆட்சியில் இந்த திட்டம், தமிழகம், உ.பி. பிஹார் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சோதனை முறையில் அறிமுகப் படுத்தப்பட்டது. ஆனால் உபி மற்றும் பிஹாரில் இந்தத் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை எனவும், வடகிழக்குப் பகுதிகளில் மிகவும் சிறந்த முறையில் செயல்பட்டு வருவதாகவும் விவசாயத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்மூலம், நாடு முழுவதிலும் உள்ள விவசாய நிலங்களின் அளவுகள் மற்றும் அதன் விளைச்சல் பற்றிய முழு விவரங்களும் அரசுக்கு கிடைக்கும் எனவும் கருதுகின்றனர். தமிழகத்தில் மண்வள அட்டை என்ற பெயரில் அமலில் உள்ள இந்த திட்டத்தில் அவ்வப்போது புகார்கள் வந்தபடி இருப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கால்நடை வளர்ப்பு குறைந்து வருவதால் அதை மேம்படுத்துவது குறித்த அறிவிப்பும் பட்ஜெட்டில் வெளியாக உள்ளது. இதற்காக, விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்புக்கான மானியம் வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment