Thursday, 31 July 2014

ஜூலை 31, 1964 - ரேஞ்சர்- 7 விண்கலம் நிலவைப் புகைப்படம் எடுத்த நாள்

நிலவுக்கு மனிதர்களை அனுப்பி ஆய்வுசெய்ய வேண்டும் என்று திட்டமிட்ட அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா, நிலவின் மேற்பரப்பைப் படமெடுக்கத் தொடங்கியது. பூமியில் இருந்து எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்கள் அத்தனை துல்லியமாக இல்லை.
அதன் பின்னர், ‘ரேஞ்சர்' விண்வெளித் திட்டத்தில் ஆளில்லா விண்கலங்களை நிலவுக்கு அனுப்பிப் படமெடுக்க முயன்றது நாஸா. சில முயற்சிகள் தோல்வி அடைந்தாலும் ரேஞ்சர்-6 எனும் விண்கலம் நிலவில் வெற்றிகரமாக இறங்கியது. ஆனால், அதன் கேமராக்கள் சரிவர இயங்காததால், படங்கள் தெளிவாக அமையவில்லை.
அடுத்தபடியாக, 1964 ஜூலை 28-ல் ரேஞ்சர்-7 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. வெற்றிகரமாகச் செயல்பட்ட ரேஞ்சர்-7, ஜூலை 31-ல் நிலவின் மிகத் தெளிவான படங்களை எடுத்து அனுப்பியது. முன்பு எடுக்கப்பட்ட படங்களைவிட, இவை ஆயிரம் மடங்கு தெளிவாக இருந்தன. மொத்தம் 4,308 படங்களை ரேஞ்சர்-7 எடுத்தது.
இந்த ஆய்வின் மூலம் முன்பு கணித்ததுபோல் அவ்வளவு தூசி மண்டலமாக நிலவு இல்லை என்பது தெரியவந்தது. நிலவில் தரையிறங்குவதில் உள்ள சாத்தியங்களையும் புரிந்து கொள்ள முடிந்தது. அதன் தொடர்ச்சியாக, 1969-ல் மனிதர்கள் நிலவில் வெற்றிகரமாக இறங்கியது மற்றொரு வரலாறு.

No comments:

Post a Comment