பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கிறார் நாமக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலர் அ.கருப்பையா.
#தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை யாருக்கு வழங்கப்படுகிறது?
அரசு, அரசு நிதி உதவி பெறும் கல்வி நிலையம் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சுயநிதி தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிலையங்களில் படிப்பவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது. எம்பிஏ, எம்சிஏ படிப்பவர்களுக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதைப் பெற பிளஸ்2, மூன்று ஆண்டு பாலிடெக்னிக் படிப்பு அல்லது பட்டப் படிப்பு இறுதியாண்டு தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
#கல்லூரியில் படிப்பவர்கள் இந்த உதவித் தொகை பெற ஒவ்வோர் ஆண்டும் விண்ணப்பிக்க வேண்டுமா?
அவசியம் இல்லை. ஆண்டுதோறும் புதுப்பித்தால் போதும். எனினும், முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். முந்தைய ஆண்டில் இத்துறை மூலம் கல்வி உதவித்தொகை பெற்றிருந்தால் மட்டுமே புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை பெற முடியும். இல்லாவிட்டால், புதிதாக விண்ணப்பம் செய்ய வேண்டும். கல்வி உதவித் தொகை பெற பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
#கல்வி உதவித் தொகை அதிகபட்சம் எவ்வளவு வழங்கப்படும்?
தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான உதவித் தொகையைப் பொறுத்தவரை மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்ட 5 கல்வி நிலையங்களில் படிப்பவர்களுக்கு முழுமையான கல்விக் கட்டணமும் வழங்கப்படும். இதர தொழிற்கல்வி நிலையங்களில் படிப்பவர்களுக்கு சேர்க்கை, கற்பிப்பு, தேர்வு, நூலகம் மற்றும் இதர கட்டாயக் கட்டணங்கள் ஆகியவற்றில் செலுத்திய தொகை மட்டும் வழங்கப்படும். இதில் அதிகபட்சம் ரூ.20 ஆயிரம் வரை வழங்கப்படும். விடுதியில் தங்கிப் படிப்பவர்களுக்கு விடுதியில் சேர்ந்த நாள் முதல் கணக்கிட்டு மாதந்தோறும் ரூ.1000 வரையும், வீட்டில் இருந்து சென்று படிப்பவர்களுக்கு மாதம் ரூ.500 வீதமும் 10 மாதங்களுக்கு வழங்கப்படும்.
#மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்ட 5 கல்வி நிலையங்கள் எவை?
சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.), திருச்சி மற்றும் சென்னையில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (என்.ஐ.டி.), காஞ்சிபுரத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி, டிசைன் அண்ட் மேனுபேக்சரிங் (ஐ.ஐ.டி.& டீ.எம்.), திருச்சியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் ஆகியவை.
No comments:
Post a Comment