Wednesday, 23 July 2014

துடிப்பான தனுஷ்கோடியைத் தெரியுமா?

காலங்காலமாகத் தமிழ்க் கடலோடிகளுக்கு வணிகத்தில் முக்கியமான கேந்திரம் கொழும்பு. தவிர, கலாச்சாரரீதியாகவும் நம் கடலோர மக்களின் வாழ்வில் கொழும்பு பிணைந்திருந்தது. ஒருமுறை எழுத்தாளர் ஜோ டி குரூஸிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்ன வார்த்தைகள் அந்த நாட்களின் நெருக்கத்தை நமக்கு உணர்த்தும்: "அன்றைக்கெல்லாம் ஊரில் ஒரு பிள்ளை நல்ல சட்டை போட்டிருந் தால், அது கொழும்பு சட்டையாக இருக்கும். நல்ல மிட்டாய் சாப்பிட்டால், அது கொழும்பு மிட்டாயாக இருக்கும். கடற்கரையில் அதுவரைக்கும் பார்த்திராத ஒரு வண்ணத்துப்பூச்சியைப் பார்த்தால், அதுவும்கூட கொழும்பு வண்ணத்துப்பூச்சியாக இருக்குமோ என்று பேசிக்கொள்வோம்."
இலங்கையுடனான இந்த உறவில் ஏனைய பகுதியினரை விடவும் கூடுதல் நெருக்கம் தனுஷ்கோடி தீவுக்காரர்களுக்கு இருந்தது. பல ஆண்டுகளாகவே தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே படகுகள் வாயிலாகச் சரக்குப் போக்கு வரத்து நடந்துவந்தது. மலையகத் தொழிலாளர்களும் தமிழ்நாடு வந்துபோக இந்தத் தடத்தைப் பயன்படுத்திவந்தனர்.
தனுஷ்கோடி ஈர்த்த பெரும் கூட்டம்
இந்துக்களிடம் காசிக்கு எப்படி ஒரு மரியாதை உண்டோ, அப்படி ஒரு மரியாதை, அந்தக் காலந்தொட்டு தனுஷ்கோடிக் கும் உண்டு. சீதையை மீட்க இலங்கைக்குக் செல்ல கடலில் வானரங்கள் கட்டியதாகச் சொல்லப்படும் 'ராமர் பாலம்' தொடங்குமிடம் தனுஷ்கோடி. இந்தப் பாலக் கட்டுமானப் பணியை ராமர் தன்னுடைய வில்லால் தொட்டு அடையாளப் படுத்திய முனை என்பதாலேயே தனுஷ்கோடி (வில் - தனுஷ், முனை - கோடி) என்ற பெயர் வந்தது என்றும் கதை உண்டு. எல்லாவற்றுக்கும் மேல் காசியில் நீராடியவர்கள் தனுஷ்கோடியில் நீராடினால்தான் யாத்திரை பூர்த்தி அடையும் என்று நிலவும் நம்பிக்கை பல்லாண்டு காலமாக இங்கு ஆயிரக் கணக்கான யாத்திரிகர்களை ஈர்த்துவருகிறது.
ஆங்கிலேயர்கள் போட்ட திட்டம்
இந்தப் பின்னணியில் 19-ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே சென்னை - தனுஷ்கோடி- தலைமன்னார் - கொழும்பு போக்குவரத்துத் திட்டத்தை யோசித்துக்கொண்டிருந்தார்கள் ஆங்கிலேயர்கள். சர் ஹென்றி கிம்பர் தென் இந்திய ரயில்வே பொறுப்பில் அமர்ந்தபோது, இந்தத் திட்டம் செயலாக்கம் பெற ஆரம்பித்தது. அதாவது, சென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை ரயில் பயணம். அங்கிருந்து தலைமன்னாருக்குக் கப்பல் பயணம். அங்கிருந்து கொழும்புக்கு ரயில் பயணம். இதுதான் அந்தப் போக்குவரத்துத் திட்டம்.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே பாம்பன் பாலம் கட்டப்பட்டது. இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டதால், இரு ஊர்கள் நகரங்கள் ஆயின. தனுஷ்கோடியும் தலைமன்னாரும்.
தனுஷ்கோடியின் புது அழகு
இந்தப் பயணத்துக்கெனப் பிரத்யேகமாக 'கர்ஸான்', 'தி எல்ஜின்', 'ஹார்டிஞ்' எனும் மூன்று நீராவிக் கப்பல்கள் கட்டப்பட்டன. 'போட் மெயில்' என்ற ரயில் விடப்பட்டது. 1914 பிப்ரவரி 24-ம் தேதி பயணம் தொடங்கியது. இந்த விரைவு ரயில் தவிர, பயணிகள் ரயிலும் இயக்கப்பட்டது. மண்டபம் முதல் தனுஷ்கோடி படகுத்துறை வரை.
தனுஷ்கோடியில் இதற்காக உருவாக்கப்பட்ட படகுத்துறை, ரயில் நிலையம், பெரிய அஞ்சல் நிலையம், சுங்கத் துறை அலுவலகம், மருத்துவமனை, பள்ளிக்கூடம் போன்ற புதிய கட்டுமானங்கள் அந்த ஊரின் அழகையும் செல்வாக்கையும் இன்னும் மேலே கொண்டுசென்றன.
போட் மெயில் சுவாரசியங்கள்
வெகு சீக்கிரம் சென்னை - தனுஷ்கோடி - தலைமன்னார் - கொழும்பு பயணம் பல்வேறு தரப்பினரையும் ஈர்க்கும் பயணம் ஆகிவிட்டது. காரணம், விசேஷமான சில அனுபவங்கள். சென்னையிலிருந்து ஒரு ரயில் பயணம், அப்புறம் ஒரு கப்பல் பயணம், திரும்பவும் இன்னொரு ரயில் பயணம்… இது மூன்றுக்கும் சேர்த்து ஒரு டிக்கெட் எடுத்தால் போதும். 'போட் மெயில்' ரயில் பெட்டிகள் இன்றைக்கு உள்ளதைப் போல அன்றைக்கே உள்ளுக்குள் நடந்து செல்லும் வசதியைப் பெற்றிருந்தன. ரயிலுக்குள்ளேயே ஒரு பெட்டியில் கேன்டீன் இருந்தது. இதேபோல, இந்தப் பயணத்துக்கென வடிவமைக்கப்பட்ட கப்பல்களும் விசேஷ அனுபவங்களைத் தந்தன.
சுமார் 260 அடி நீளமும் 38 அடி அகலமும் கொண்ட இந்த நீராவிக் கப்பல்கள் நல்ல இரும்பால் கட்டப்பட்டவை. கப்பலின் மேற்பகுதியில் மாலுமிகள் பயன்படுத்தும் இடத்தையொட்டி, நடைமேடை. அதில் கூரை வேயப்பட்ட பகுதியில் உட்கார்ந்து பயணிகள் கடலை ரசிக்கலாம். ஐரோப்பியப் பயணிகளுக்கு அவர்கள் கலாச்சாரத்துக்கேற்ற வசதிகளும் இந்தியப் பயணிகளுக்கு நம் கலாச்சாரத்துக்கேற்ற வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. மூன்றாவது வகுப்புப் பயணிகளுக்குக்கூடத் திருப்தியான வசதிகள் உண்டு. முக்கியமாக, நம்மாட்கள் ஆடு, மாடுகளை ஏற்றிச் செல்ல கப்பலில் தனியிடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
என்னே உபசரிப்பு!
இந்த சுவாரசியங்களையெல்லாம் தாண்டி, தனுஷ்கோடி மக்கள் தங்கள் உபசரிப்பால் வெளியூர் மக்களின் உள்ளங்களைக் கொள்ளையடித்திருந்தனர். 'ராம விலாஸ்' இட்லி - வக்ரிணி சாம்பாருக்காகவே தனுஷ்கோடி செல்லலாம் என்று சொல்லும் அளவுக்கு அருமையான உணவகங்கள் தனுஷ்கோடியில் தோன்றியிருந்தன.
தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்குச் செல்ல கப்பல் பயணம் ஒன்றே கால் மணி நேரம். ஏற இறங்க எல்லாம் சேர்த்து இரண்டரை மணி நேரம் ஆகும். அதற்குள்ளாகவே பலருக்கு வாந்தி வந்துவிடும். ராம விலாஸ்காரர்கள் என்ன செய்தார்கள் என்றால், வக்ரிணி சாம்பார் என்று ஒரு சாம்பார் வைத்தார்கள். தேங்காய் தவிர்த்த சாம்பார் இது. அதேபோல, இஞ்சி சட்னி. பயணிகளுக்குச் செரிமானத் தொந்தரவு தராத உணவாகத் தர வேண்டும் என்று இப்படிப் பார்த்துப் பார்த்து பக்குவமாகச் செய்த அயிட்டங்களுக்கு ஒரு பெரிய கூட்டமே மயங்கிக்கிடந்தது. ஒருகட்டத்தில் ஐந்தடி அண்டாவில் சாம்பார் வைக்க வேண்டிய சூழல் உருவானதாம். அப்படியும் சாம்பார் போதாமல், அடுத்த அடுப்பில் பருப்பைப் போடுவார்களாம். இதேபோல, அப்போதே பிடித்த மீனைச் சமைத்துத் தந்த அசைவ உணவகங்களும் கொடி கட்டிப் பறந்திருக்கின்றன. அதில் விசேஷம் என்னவென்றால், எண்ணெய் சேர்த்தால், கடல் பயணத்தில் தொந்தரவு வரலாம் என்பதற்காக மீனைப் பொரிக்காமல் சுட்டும் அவித்துப் புட்டுவைத்தும் கொடுத்திருக்கிறார்கள். இதையெல்லாம் தவிர, சத்திரங்கள் வேறு தனியே வாரி வழங்கியிருக்கின்றன. தஞ்சாவூர் ராஜா சத்திரம் அவற்றில் புகழ்பெற்ற ஒன்று.
ஒரு சாட்சியம்
இப்போது எண்பதுகளில் இருக்கும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளில் ஒருவரான மன்னார்குடி எஸ். ரங்கநாதன், தனுஷ்கோடியின் தீவிர ரசிகர்களில் ஒருவர். சிறுவனாக இருந்த காலத்தில் தொடங்கி போட் மெயிலில் சுற்றியவர். தனுஷ்கோடி பற்றிப் பேச ஆரம்பித்தால், இளமைப் பருவத்தில் சென்னை ஜாலி ரோவர்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் தன்னுடைய நண்பரும் உறவினருமான எஸ். ரங்கராஜனுடன் கொழும்புக்கு விளையாடச் சென்றபோது அடித்த லூட்டிகளை நினைவுகூர்கிறார். இந்தியா முழுக்கச் சுற்றியிருந்தாலும் தனுஷ்கோடி பயண அனுபவமே தனி என்கிறார். அங்குள்ள மீனவ மக்களின் அன்பு ஒப்பிட முடியாதது என்கிறார். மிகச் சமீபத்தில் தனுஷ்கோடி போய்விட்டு வந்ததாகச் சொல்லும் அவர், அன்றைய நாளுடன் இன்றைய நாளை ஒப்பிட்டுக் கண்ணீர் வடிக்கிறார்.
பொன்விழா ஆண்டில் நடந்த கொடுமை
1964 தனுஷ்கோடி ரயில் நிலையத்துக்கும் படகுத் துறைக்கும் பொன்விழா ஆண்டு. இடைப்பட்ட 50 ஆண்டுகளில் துடிப்பான நகரமாக தனுஷ்கோடியை வளர்த்தெடுத்திருந்தார்கள் அங்குள்ள மீனவ மக்கள். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்தனர். பயணிகள் போக்குவரத்தைத் தாண்டி சரக்குப் போக்குவரத்தையும் வளர்த்தெடுத்திருந்தனர் தனுஷ்கோடி கடலோடிகள். இந்திய - இலங்கை உறவுச் சங்கிலி யில் முக்கியமான கண்ணியாக தனுஷ்கோடி உருவெடுத்திருந் தது. இதையெல்லாம் பிப்ரவரியில் நடந்த பொன்விழாவில் விமரிசையாகக் கொண்டாடினார்கள் தனுஷ்கோடிவாசிகள். அடுத்து பத்தே மாதங்கள். அவர்கள் வாழ்வின் ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் உருக்குலைத்துச் சென்றது கடல்.
சூறையாடிய புயல்
தெற்கு அந்தமான் கடல் பகுதியில், 1964 டிசம்பர் 17-ம் தேதி புயல் சின்னம் உருவானது. டிசம்பர் 19-ல் அது புயலாக உருவெடுத்தது. இந்தியக் கடல் பகுதியில் பூமத்திய ரேகைக்கு மிக அருகில் அப்படியொரு புயல் உருவாவதும் வலுவடைவதும் மிகமிக அபூர்வம் என்கிறார்கள் வானிலையாளர்கள். டிசம்பர் 21 அன்று அப்படியே மேற்காக நகர்ந்த அந்தப் புயல், டிசம்பர் 22 அன்று மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் வவுனியாவைக் கடந்து, அன்றிரவு அப்படியே தனுஷ்கோடிக்குள் புகுந்தது. புயலின் வேகம் அதிகரித்த சூழலில், ஊருக்குள் புகுந்தது கடல். 20 அடி உயரத்துக்கு மேல் அலைகள் எழுந்தன. கன மழை, சூறைக்காற்று, கடல் தாக்குதல். "ஊழித் தாண்டவம்போல இருந்தது" என்று அந்த நாளை நினைவுகூர்கின்றனர் தப்பிப் பிழைத்த தனுஷ்கோடிவாசிகள். ஒட்டுமொத்த ஊரையும் கடல் சூழ்ந்தது. பாதி ஊரைக் கடல் கொண்டுவிட்டது. எச்சங்களும்கூட நிர்மூலமாயின. கடலில் அடித்துச் செல்லப்பட்ட பட்டியலில், அன்றிரவு 11.55 மணிக்கு தனுஷ்கோடி ரயில் நிலையத்தை எட்ட சில நூறு கெஜங்களே மிச்சமிருக்கும்போது புயலில் சிக்கிய பாம்பன் - தனுஷ்கோடி பயணிகள் ரயிலும் அடக்கம்.
உலகுக்குத் தெரியாத மூன்று நாட்கள்
தனுஷ்கோடியில் டிசம்பர் 22 அன்று நடந்த இந்த ஊழித்தாண்டவத்தின் கதை 25-ம் தேதிதான் வெளியுலகுக்குத் தெரியும். மண்டபத்தின் கடல் கண்காணிப்பாளர் அனுப்பிய தகவலில், புயலில் ஊர் சிக்கிக்கொண்டதாகவும் அடித்துச்செல்லப்பட்ட ரயில் இன்ஜினில் ஆறு அங்குலம் மட்டுமே நீருக்கு மேல் தெரிகிறது; அவ்வளவு நீர் சூழ்ந்திருக்கிறது என்றும் தகவல் அனுப்பினார். ராமேஸ்வரம் இந்தப் புயலில் தப்பித்தது என்றாலும், பாம்பன் சிக்கியது. பாம்பன் பாலம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. அரசுக்குத் தகவல் சென்றதும், கடற்படைக் கப்பல்கள் மீட்புப் பணிக்கு வந்தன. தனுஷ்கோடிக்குள்ளேயே பாலம் அமைந்திருந்த மேட்டுப் பகுதியை நோக்கிச் சென்றவர்கள் மட்டும் உயிரைக் கையில் பிடித்துத் தத்தளித்துக்கொண்டிருந்தனர். ஊரைவிட்டு வெளியேற முயன்றவர்களும் அடித்துச்செல்லப்பட்டிருந்தனர். மிஞ்சியவர்கள் மீட்கப்பட்டு, மண்டபம் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மரணங்கள் எத்தனை?
தனுஷ்கோடி அழிவுகள் தொடர்பாக நம் அரசிடம் சரியான கணக்குகள் கிடையாது. உதாரணமாக, உயிரிழந்த ரயில் பயணிகள் என்று அரசு தரும் எண்ணிக்கை 115. அதாவது, 110 பயணிகள், 5 ஊழியர்கள். அன்றைக்குப் பயணத்தில் டிக்கெட் எடுத்தவர்களின் எண்ணிக்கையை வைத்துச் சொல்லப்படும் எண்ணிக்கை இது. வெளியூர்க்காரர்கள் மட்டுமே இரவு ரயிலில் டிக்கெட் எடுக்கும் வழக்கம் அன்றைக்கு தனுஷ்கோடியில் இருந்திருக்கிறது. உள்ளூர்க்காரர்கள் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் ரயிலில் தினமும் வருவார்கள் என்று சொல்கிறார்கள். உயிரிழந்த உள்ளூர் மக்களின் எண்ணிக்கை என்று அரசு சொல்லும் கணக்கும் இப்படித்தான்.
1961 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தனுஷ் கோடியின் மக்கள்தொகை 3,197. இதைத் தவிர, தனுஷ் கோடியை நம்பிப் பிழைத்த சுற்றுப்புற ஊர் மீனவ மக்கள் உண்டு. நாட்டுப்புறப் பாடல்கள் சொல்லும் தரவுகள்படி, புயலில் சிக்கிய மக்கள் எண்ணிக்கை 'ஐயாயிரம் ஜனத்துக்கு மேல்' இருக்கலாம். பக்தவச்சலம் அரசு மிகச் சொற்ப எண்ணிக்கையோடு தன் கணக்கை முடித்துக்கொண்டது. விரைவில், 'வாழத் தகுதியற்ற ஊர்' என்றும் அறிவித்தது. அரசாலும் ஊடகங்களாலும் வெகுவிரைவில் தனுஷ்கோடி 'பேய் நகரம்' ஆனது. வரலாற்றின் புத்தகங்களிலிருந்து தனுஷ்கோடி எனும் உயிர்ப்பான ஒரு பக்கம் கிழித்து வீசப்பட்டது.
சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

No comments:

Post a Comment