மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழகத்தில் விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ரூ.1.98 கோடியில் குழந்தைகளுக்கான செவித்திறன் பரிசோதனை மையம் தொடங்கப்படுகிறது.
செவித்திறன் குறைபாடு என்பது இளங்குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கும் பிறவிக் குறைபாடுகளில் ஒன்று. ஆயிரம் குழந்தைகளில் 5 குழந்தைகள் பிறவியிலேயே செவித்திறன் குறைபாடுடன் பிறக்கின்றன. இருப்பினும், இக்குறைபாடுள்ள குழந்தைகள் 1 முதல் 3 வயதுக்குள் கண்டறியப்படுவதில்லை. ஆனால், பேச்சு மற்றும் மொழித்திறன் வளர்ச்சிக்கு குழந்தைகளின் இந்த வயது மிக முக்கியமானது.
நடுக்காதில் பாதிப்பு
மேலும், நான்கில் 3 குழந்தைகளுக்கு நடுக்காதில் ஏற்படும் நோயால் (Otitis medis) பாதிக்கப்படுகின்றனர். காதில் நோய் ஏற்பட்டால் தற்காலிகமாக செவித்திறன் குறைபாடு ஏற்படும். இதனால் பேச்சுத்திறனும் மொழித்திறனும் பாதிக்கப்படும். இந்நோயை குணப்படுத்தாவிடில் இக்குறை நிரந்தரமாகிவிடும். இதன் காரணமாக குழந்தை பிறந்தவுடனேயே செவித்திறன் குறையைக் கண்டறிய பரிசோதனை யும், பின்னர் குழந்தை பருவம் முழுவதும் தொடர்ந்து செவியை பரிசோதித்துக்கொள்வதும் மிக முக்கியமானதாகும்.
ஆரம்ப நிலையில் கண்டறிதல்
பிறந்த குழந்தைக்கு செவி ஒலி வெளிக்கொணர் பரிசோதனை (Oto Acoustic Emission) மற்றும் மூளை தண்டுவடம் மறுபதில் செவி பரிசோதனை (Auditory Brainstem Response) போன்ற பரிசோதனை களைச் செய்வது செவித்திறன் குறையை ஆரம்ப நிலையிலேயே கண்டறியவும், பயிற்சியளிப் பதற்கும் முதல் படியாகும்.
மேலும், தமிழகத்திலுள்ள குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடு அதிகமாக காணப்படுகிறது. எனவே, செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பது அத்தியாவசியம் என்பதால் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் பரிசோதனை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு நிறுவனங்கள், உள்ளூர் மருத்துவமனைக்கு மட்டுமே ஊனத்தின் சான்றிதழ் வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகளின் செவித்திறன் குறையைக் கண்டறிய ஆரம்பநிலை பரிசோதனை மையங்களை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.
பேச்சுப் பயிற்சியாளர்கள்
இதற்காக தற்போது 16 பேச்சுப் பயிற்சியாளர்கள் மற்றும் கேட்டல் நிபுணர்கள் பணியமர்த் தப்பட்டுள்ளனர். மும்பையிலுள்ள செவித்திறன் குறைவுடையோ ருக்கான தேசிய மையத்தின் நிதி உதவியுடன் சென்னையிலும், தமிழக அரசின் நிதி உதவியோடு கோவை, திருச்சியிலும் இந்த மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து, வேலூர், நாமக்கல், மதுரை, திருவள்ளூர், கன்னியாகுமரி, தேனி, காஞ்சிபுரம், தருமபுரி, ஈரோடு மற்றும் விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களிலும் இந்த மையங்கள் அமைக்க மாவட்டத்துக்கு ரூ.19.80 லட்சம் வீதம் ரூ.1.98 கோடி அரசு நிதி ஒதுக்கீடு அளித்துள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவ லகத்தில் குழந்தைகளுக்கான செவித்திறன் பரிசோதனை மையத்தை மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். இங்கு காது, மூக்கு, தொண்டை பரிசோதனை, தூய ஒலி செவிமானியுடன் பார்த்தல், மூளை தண்டுவடம் மறுபதில் செவி பரிசோதனை, பேச்சு மற்றும் மொழித்திறன் வளர்ச்சிப் பரிசோதனை, செவித்திறன் கருவி பொருத்துதல், ஆரம்பநிலை பயிற்சிகள், பேச்சு பயிற்சி போன்றவை அளிக்கப்படும் என்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment