Wednesday, 9 July 2014

ஜூலை 8, 1497- இந்தியாவை நோக்கி வாஸ்கோடகாமாவின் பயணம் தொடங்கிய நாள்

பல நூற்றாண்டுகளுக்கு முன், இந்தியாவின் வளம் ஐரோப்பியர்களின் கண்களை உறுத்திக்கொண்டிருந்தது. பல ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியா என்பது பெரிய இலக்காக இருந்தது. கடல் மார்க்கமாக, அதிலும் அந்நியர்களால் அதிகம் பயன்படுத்தப்படாத ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் உருவானது. அதைச் செய்து முடித்தவர் போர்த்துகீசியரான வாஸ்கோடகாமாதான். இந்தியாவுக்கான ஒரு புதிய கடல்வழியைக் கண்டுபிடித்த வாஸ்கோடகாமா, தனது பயணத்தைத் தொடங்கிய நாள் இன்று.
ஆப்பிரிக்காவின் கடலோரம் உள்ள நன்னம்பிக்கை முனையை வாஸ்கோடகாமா 1497-ல் அடைந்தார். பின்னர், கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவின் மலிந்தி பகுதியைச் சென்றடைந்தார். இந்தியப் பெருங் கடலைப் பற்றிய தகவல்களை அறிந்த கென்ய மாலுமியான அஹ்மத் இபின் மஜித்தின் துணையைப் பெற்றார் வாஸ்கோடகாமா. 1498-ல், அவருடன் ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டார். அப்போது வீசிய தென் மேற்குப் பருவக்காற்றால் பயணம் சாதகமாக அமைந்தது. அவரது கப்பல்கள் 23 நாட்களிலேயே இந்தியாவின் மலபார் கடற்கரையைத் தொட்டு விட்டன. 1498-ம் ஆண்டு மே மாதம் 20-ம் தேதி இந்தியாவின் கேரளத்தில் உள்ள கோழிக்கோட்டை அடைந்தார் வாஸ்கோடகாமா.
அந்தப் பகுதியினை ஆண்ட சாமரின் மன்னர் அவரை வரவேற்றார். அவரிடம் சில சலுகைகளை வாஸ்கோடகாமா பெற்றார். இந்தியாவில் மூன்று மாதங்கள் தங்கியிருந்த அவர் திரும்பிச் செல்லும்போது, விலை யுயர்ந்த பொருட்கள் பலவற்றைக் கொண்டுசென்றார். 1501-ம் ஆண்டு இரண்டாம் முறையாக வாஸ்கோடகாமா இந்தியா வந்தார். அப் போது கேரளத்தில் கண்ணனூர் என்ற இடத்தில் போர்த்துகீசிய வணிகத் தலம் ஒன்றை நிறுவினார். இந்தியாவில் காலனியாதிக்கத்துக்கு வித்திடப்பட்டது அப்படித்தான்.

No comments:

Post a Comment