பணக்காரக் குழந்தைகளும் ஏழைக் குழந்தைகளும் ஒன்றாகப் படிக்கக் கூடாதா?
கட்டாய இலவசக் கல்வித் திட்டம் அமலானவுடனேயே சென்னை நகரத்திலிருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் இப்படிச் சுற்றறிக்கை அனுப்பினாராம்: “இனி உங்கள் பிள்ளைகள் உங்களது வேலைக்காரர்கள் பிள்ளைகளுடன் சேர்ந்துதான் உட்கார வேண்டும். அப்பிள்ளைகளிடமுள்ள தீய குணங்கள் பள்ளியில் உங்கள் பிள்ளைகளுக்கும் ஒட்டிக்கொண்டுவிடும்” என்று எச்சரிக்கை விடுத்தார். எத்தகைய திமிர் இருந்தால் இப்படியொரு அறிக்கை அனுப்ப இயலுமென்று எல்லோரும் ஆத்திரப்பட்ட சூழ்நிலையில் அத்தகைய இக்கட்டுகளிலிருந்து விடுபடப் பள்ளிக் கல்வித்துறை ஒரு புதிய உத்தியைக் கண்டுபிடித்துள்ளது.
கட்டாய இலவசக் கல்வி கற்கும் குழந்தைகளுக்கான உரிமைச் சட்டம்-2009-ஐ எதிர்த்து சுயநிதிப் பள்ளி நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. அவ்வழக்கில் அவர்கள் முக்கியமாக அச்சட்டத்தின் 12(1)(சி) என்ற பிரிவைத்தான் எதிர்த்து வாதாடினார்கள். ஒவ்வொரு தனியார் பள்ளியிலும், சமூகத்தில் வசதியற்ற சூழலில் வாழும் குழந்தைகளுக்கும், நலிவுற்ற பிரிவு களிலிருந்து வரும் குழந்தைகளுக்கும் 25% கட்டாய ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று அப்பிரிவு வலியுறுத் தியது. அதே சமயத்தில் அவ்விடங்களுக்கான கட்டணத் தொகையை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தனியார் பள்ளிகளுக்கு வழங்குமென்றும் அச்சட்டம் கூறியது.
சோகக் கதை
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த, ‘உதவிபெறாத தனியார் பள்ளிகள்’ சங்கத்தின் சார்பில் போடப்பட்ட அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் 2012-ம் ஆண்டு தள்ளு படிசெய்து அந்தச் சட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதல்ல என்று அறிவித்தது. நலிவுற்ற பகுதி களிலிருந்து வரும் குழந்தைகளுக்கு ஒரு சிறிய விகிதத்தில் இடங்களை ஒதுக்குவது நியாயமான கட்டுப்பாடு என்றும், அது எவ்விதத்திலும் தனியார் பள்ளிகளின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்றும், ஏற்கனவே டி.எம்.ஏ.பை அறக்கட்டளை வழக்கில் 11 நீதிபதிகளடங்கிய உச்ச நீதிமன்றம் அமர்வு கொடுத்த தீர்ப்பில் ஒரு சிறிய விழுக்காடு இடங்களை நலிவுற்ற பகுதியினருக்கு ஒதுக்குவதால் பள்ளி நிர்வாகங்களின் உரிமை பறிபோகாது என்று சொல்லப்பட்டிருப்பதன் அடிப்படையில் அத்தீர்ப்பு வழங்கப்பட்டது. அதே சமயத்தில் சிறுபான்மை நிறுவனங்களுக்கு, அவை உதவி பெற்றாலும், (அ) சுயநிதி நிறுவனங்களென்றாலும் இந்தச் சட்டப்பிரிவு பொருந்தாதென்று உச்ச நீதிமன்றம் விதிவிலக்கு அளித்தது ஒரு சோகக் கதை.
2009-ம் ஆண்டு நாடாளுமன்றம் இயற்றிய அச்சட்டம் 2012 முதல் அமலுக்கு வந்தது. அச்சட்டத்தின் 2(டி) பிரிவின்கீழ் சமூகத்தின் வசதியற்ற பிரிவிலிருந்து வரும் குழந்தைகள் யாவரென்று விளக்கம் கொடுக் கப்பட்டுள்ளது. அதன்படி பட்டியல் இன சாதியினர், பட்டியல் இன மலைசாதியினர், சமூக மற்றும் பொருளா தாரரீதியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் அரசு அறிவிக்கையின் மூலம் தெரிந்தெடுக்கப்பட்ட சமூக, கலாச்சார, பொருளாதார, புவியியல்ரீதியாக மொழி, பாலினம் போன்ற காரணங்களினால் பிரதிகூலம் அடைந்த வர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் 2(ஈ) பிரிவின்கீழ் நலிவுற்ற பகுதியிலிருந்து வரும் குழந்தைகள் என்பதற்கான விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு அறிவிக்கையின்படி குறைந்தபட்ச வரு மானத்துக்குக் கீழ் ஊதியம் பெறும் பெற்றோர்கள் (அ) காப்பாளர்களின் குழந்தைகள் என்று குறிப்பிடப் பட்டுள்ளது,
இச்சட்டத்தின் கீழ் 8.11.2011 தேதியன்று வெளியிடப் பட்ட பள்ளிக்கல்வித் துறையின் தமிழக அரசாணை எண் 174 ன்படி சமூகத்தின் வசதியற்ற பிரிவின்கீழ் வரும் குழந்தைகள் யாவரென்பது கூறப்பட்டுள்ளது. அதன்படி, ஆதரவற்றோர், எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், திருநங்கைகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் குழந்தைகள் என்பது கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல், நலிவுற்ற பகுதியினரின் குழந்தைகள் என்பதற்கு அவர்களின் பெற்றோர்கள் (அ) காப்பாளர்களின் ஆண்டு வருமானம் இரண்டு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக இருக்கக் கூடாதென்று கூறப்பட்டுள்ளது.
சமூகநீதியில் இடைவெளி
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (சிறுபான்மை பள்ளிகள் தவிர) 1994-ம் ஆண்டு முதல் கட்டாய இடஒதுக்கீடு சட்டம் அமலில் உள்ளது. அதன்படி தற்பொழுது 69% இடங்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அப்பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள இடஒதுக்கீட்டுக்கும் தற்போது சுயநிதிப் பள்ளிகளில் கொண்டு வரப்பட்டுள்ள 25% ஒதுக்கீட்டுக்கும் பெருத்த வித்தியாசம் உள்ளது. சமூகநீதி அடிப்படையில் கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீட்டில் உரிமை பெற்றுள்ள பட்டியல் இன சாதியினருக்கும், சமூக மற்றும் பொருளாதாரப் பிரிவினருக்கும் அப்பாற்பட்டு இப்புதிய ஒதுக்கீட்டில் சமூகத்தின் வசதியற்ற பிரிவினரும், நலிவுற்ற பிரிவினரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
1 கி.மீ. சுற்றளவிலுள்ள அருகமை பள்ளிகளில் மாணவர்கள் சேரும் உரிமையை இச்சட்டம் வழங் கினாலும், அச்சுற்றளவிலுள்ள எந்தப் பள்ளியில் சேர உரிமையுள்ளதென்பது தெளிவுபடுத்தப்படவில்லை. இடம் கிடைக்காத மாணவர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களிடம் முறையிட வேண்டுமென்று கூறப் பட்டுள்ளதால், புதிதாக ஏற்படுத்தப்பட்ட அதிகாரப் பங்களிப்பில் பல நகராட்சித் தந்தைகள் தங்களுக்கு வேண்டியவர்களின் குழந்தைகளுக்குத் தரமான பள்ளிக் கூடங்களில் அனுமதி வழங்க சிபாரிசுக் கடிதங்களை வழங்கிவருவதோடு, அரசின் அதிகார மட்டத்தில் இருப் பவர்களின் உற்றார் உறவினருக்கும் இந்த இடஒதுக்கீட்டு இடங்கள் கொடுக்கப்பட்டுவருகின்றன.
ஆக்கிரமிப்பு
நலிவுற்ற மற்றும் சமூதாயத்தில் வசதியற்ற குழந்தை களைத் தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டுமென்று கட்டாய இலவசக் கல்விச் சட்டத்தில் கூறப்பட்டிருப்பினும் இன்றளவில் அந்த இடஒதுக்கீட்டு இடங்களை ஆக்கிரமித்து வருபவர்கள் வசதிபடைத்தோரும் அதிகார வர்க்கத்தினரின் குழந்தைகளும்தான். அதை நியாயப்படுத்தும் வகையில், தற்போது மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர் அந்த ஒதுக்கீட்டில் சேரும் குழந்தைகளின் பெற்றோர்களிடம் வருமானச் சான்றிதழ்களைக் கேட்க வேண்டாமென்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது அச்சட்டத்தையே கேலிக் குரியதாக்கியதோடு மட்டுமின்றி இந்தப் பிரச்சினையில் உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை உதாசீனப்படுத்து வதாகவும் உள்ளது. மேலும், சுயநிதிப் பள்ளிகள் சட்டவிரோதமாக ஏற்கெனவே செய்துள்ள மாணவர் சேர்க்கைகளை நியாயப்படுத்துவதாகவும் உள்ளது.
இந்தப் பிரச்சினைகுறித்து 2012-ம் வருடம் ஒரு வழக்கு உயர் நீதிமன்றத்தில் போடப்பட்டது. அதில் குழந்தையின் தாய், மென்பொருள் நிறுவனமொன்றில் நிர்வாகியாக வேலைசெய்து ஆண்டுக்கு 12 லட்ச ரூபாய் ஊதியம் பெறுபவர். அவரது கணவர் மற்றொரு மென்பொருள் நிறுவனத்தில் ஆண்டுக்கு 18 லட்ச ரூபாய் வருமானத்தில் பணிபுரிபவர். அவர்களின் குழந்தைக்கு ஒரு சுயநிதிப் பள்ளியில் மழலையர் பிரிவில் சேர்ப்பதற்கு முயற்சி செய்தனர். அங்கு அனுமதி கிடைக்காததால் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்குண்டான இடஒதுக்கீடு அடிப்படையில் தங்களது குழந்தையைச் சேர்க்க வேண்டுமென்று கோரினர். பிறகு அவர்கள் உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்து, பிற்பட்ட பிரிவி னருக்கு வருமான வரம்பு கிடையாதென்று வாதிட்டனர்.
அவர்கள் வழக்கை ஜுலை 2012-ல் தள்ளுபடிசெய்த உயர் நீதிமன்றம், பட்டியல் இன சாதியினர் தவிர மற்ற அனைத்துப் பிரிவினரும் இரண்டு லட்ச ரூபாய் ஆண்டு வருமான வரையறைக்குள் இருந்தாலொழிய அவர்களை நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கக் கூடாதென்று உத்தரவிட்டது. இந்த உத்தரவையும் மீறிச் செயல்பட்டுவரும் பள்ளிக்கல்வித் துறையினருக்குச் சமூகப் பொறுப்பும் நீதிமன்ற உத்தரவுக்குத் தலைவணங்கும் போக்கும் இல்லாதது தெரியவருகிறது.
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்தவர் கள் சுமார் 80% இருப்பார்கள். அதில் வசதிபெற்றவர் களும், வறுமையில் வாடுபவர்களும் உண்டு. அரசு விதித்த வருமான வரையறைக்குள் வருவதற்கான சான்றிதழ் பெறாதவர்கள் இந்த ஒதுக்கீட்டில் சலுகை பெறுவார்களேயானால் இலவச கல்விச் சட்டத்தையே அது கேலிக்கூத்தாக்கிவிடும். உடனடியாக, அரசு இவ் விஷயத்தில் தலையிட்டு, அடுத்த கல்வியாண்டிலாவது உண்மையிலேயே சமூகத்தில் வறியவர் மற்றும் நலிந்த பிரிவினர்களுக்கு 25% இலவச இடங்களை சுயநிதித் தனியார் பள்ளிகளில் பெற்றுத்தந்தாலொழிய, இலவசக் கல்வித் திட்டம் என்பது ஒரு ஏமாற்று வித்தையாக மாறிவிடும்.
இலவசக் கல்வி பெற இலவு காத்த கிளிகளாக நலிவுற்ற பிரிவின் பெற்றோர்கள் காத்திருப்பது ஒருபுறம். காற்றில் பறந்த இலவம்பஞ்சைச் சேகரித்து அதைத் தங் களுக்கு சொகுசான தலையணையாக மாற்றிக்கொண்டு படுக்க முயலும் பணம் படைத்தோரின் சூழ்ச்சி மறுபக்கம். இதில் அரசு எந்தப் பக்கம் என்பதை அறிவிக்குமா?
- கே. சந்துரு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி (ஓய்வு)
No comments:
Post a Comment