ஜோதிபாசு பிறந்த நாள் ஜூலை 8
கல்கத்தா நகரில் மருத்துவரா யிருந்த நிஷிகண்ட பாசு, ஹேமலதா பாசு தம்பதிக்கு 1914-ம் ஆண்டு ஜூலை 8 அன்று மூன்றாவதாக ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இந்தியாவில் அதிக ஆண்டுகள் சேவையாற்றிய முதலமைச்சராகப் பின்னாளில் அந்தக் குழந்தை மாறும் என்பது அப்போது யாருக்கும் தெரியாது.
அந்தக் குழந்தைதான் மேற்கு வங்காளத்தில் 28 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்து சாதனை படைத்த ஜோதிபாசு. உயர் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ஜோதிபாசு 1920ல் அங்கிருந்த லோரெடா பள்ளியிலும் பின்னர் புனித சவேரியார் பள்ளியிலும் பயின்றார்.
தற்போது பிரசிடென்ஸி கல்லூரி என அழைக்கப்படும் இந்து கல்லூரியில் தனது ஆங்கிலப் பட்டப் படிப்பைத் தொடர்ந்தார். 1935-ல் பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக இங்கிலாந்து நாட்டிற்குச் சென்றார். அங்கு படித்த காலத்தில் இந்திய மாணவர்களை ஒருங்கிணைக்கும் வேலையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 1937-ல் இங்கிலாந்தில் செயல்பட்ட இந்திய மாணவர்களுக்கான அமைப்பான இந்தியா லீக்கில் உறுப்பினரானார். லண்டன் மாஜிலிஸ் இயக்கத்திலும் சேர்ந்தார். இந்திய விடுதலைக்காக மாணவர்களை அணி திரட்டிப் போராடினார்.
1938-ல் ஜவஹர்லால் நேரு லண்டன் சென்றபோது அவரைச் சந்தித்தார் ஜோதிபாசு. இந்திய மாணவ நண்பர்கள் உதவியுடன் இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஜோதிபாசுவுக்குத் தொடர்பு ஏற்பட்டது. ஒரு குழுவை ஏற்படுத்திக்கொண்டு கிழக்கு லண்டனிலிருந்த படிப்பறிவற்ற எளிய இந்தியர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்தார்.
1940-ல் கல்கத்தா திரும்பிய ஜோதிபாசு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தான் சேரப்போவதாகத் தெரிவித்தார். அவரது அறிவிப்பால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் பேச்சிழந்துபோனார்கள். ஆனால் அவரது விருப்பத்திற்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாமல் போனது. 1940-ல் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டது. ஆனாலும் தலைவர்களுடன் தொடர்புகொண்டார் ஜோதிபாசு. கட்சியின் முழுநேர ஊழியர் ஆனார். இதை அடுத்து தலைமறைவாக இருந்த தலைவர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் பணி ஜோதிபாசுவின் தோளுக்கு வந்தது. அதை நேர்த்தியாக செய்துமுடித்தார் அவர்.
1940-ல் பாஸாந்தி கோஷ் என்பவரைத் திருமணம் புரிந்துகொண்டார். ஆனால் திருமண வாழ்வில் ஜோதிபாசுவுக்குப் பலத்த அடியாக அவரது மனைவியின் மரணம் அமைந்தது. 1942-ம் ஆண்டு மே 11 அன்று அவரது மனைவி அகால மரணம் அடைந்தார். மகனின் திருமண வாழ்வில் ஏற்பட்ட சோகம் ஜோதிபாசுவின் தாயாரைக் கடுமையாகப் பாதித்தது. சில மாதங்களுக்குள் அவரும் காலமானார். 1944-ல் வங்காள அஸ்ஸாம் ரயில்வே தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் பணிக்குப் பொறுப்பேற்றுக்கொண்டார். 1946-ல் வங்காள சட்டசபைக்கு ரயில்வே தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படார்.
பின்னர் 1948-ல் கமல் பாசுவைத் திருமணம் செய்துகொண்டார். 1951-ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை நீக்கப்பட்டது. அதே வருடம் ஜோதிபாசுவுக்கு குழந்தை பிறந்து சில தினங்களில் நோயால் மரித்தும்போயிற்று. 1953-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பிரிவு ஏற்பட்டபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்பது பொலிட்பீரோ உறுப்பினர்களில் அவரும் ஒருவரானார்.
1967, 1969 ஆண்டுகளில் தேசிய முன்னணி ஆட்சியின்போது மேற்கு வங்காள மாநிலத்தின் துணை முதலமைச்சராக இருந்தார். 1977-ம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சி அமைந்தபோது முதலமைச்சரான ஜோதிபாசு 2000 ஆண்டுவரை தொடர்ந்து பதவி வகித்தார். அந்த ஆண்டில் உடல்நிலை காரணமாகப் பதவியிலிருந்து விலகிக்கொண்டார். தொடர்ந்து கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஜோதிபாசு 2010-ம் ஆண்டு ஜனவரி 17 அன்று காலமானார்.
No comments:
Post a Comment