# நாம் நினைப்பதற்கு மாறாக வேங்கைப் புலி மிகவும் கூச்சச் சுபாவம் கொண்ட ஓர் உயிரினம். உள்ளடங்கிய காட்டுப் பகுதியிலேயே வாழும்.
# Tigris என்ற கிரேக்கச் சொல்லில் இருந்துதான் Tiger என்ற பெயர் வந்தது. அதற்கு அம்பு என்று அர்த்தம். பாய்ந்து செல்லும் அம்பைக் குறிக்கும் வகையில் இந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கலாம்.
# நமது கைரேகைகள் ஒவ்வொரு வருக்கும் மாறுபடுவதைப் போல, ஒவ்வொரு வேங்கைப் புலியின் உடலில் உள்ள வரிகளும் வித்தியாசமானவை. இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு புலியையும் அடையாளம் காணவும், கணக்கெடுக்கவும் முடியும்.
# வேங்கைப் புலியின் காலடித் தடத்தை Pugmark என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். அதைக்கொண்டு ஒரு வேங்கையின் வயது, பாலின வேறுபாடு, எடை, உயரம் போன்ற விஷயங்களைக் கணிக்க முடியும்.
# வேங்கைப் புலிகள் நடந்து செல்லும்போது, தங்கள் உகிர்களை (கூர்நகங்களை) உள்ளிழுத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை. இதனால் அவற்றின் காலடித் தடத்தில் நகங்கள் இருக்காது.
# அழகான சிவப்பு ஆரஞ்சு மயிர்ப்போர்வையின் (Furcoat) மீதான வரிகளைக் கொண்ட தோலே, வேங்கைக்கு எதிரியாகிவிட்டது. ராஜாக்கள், வெள்ளைக்காரர்கள் முதல் சாமியார்கள், பணக்காரர்கள்வரை இந்தத் தோலுக்கு அடிமை. வேங்கைகளின் அழிவுக்கு அழகான மயிர்ப்போர்வையும் முக்கியக் காரணம்.
# தோலில் நிறமிக் குறைபாடு காரணமாக, சில புலிகள் வெள்ளை பின்னணியில் சாம்பல் நிற வரிகளைக் கொண்டிருக்கும். இவை வெள்ளைப் புலிகள். உயிரினக் காட்சியகங்களில் இவற்றைப் பார்க்கலாம். சென்னை வண்டலூர் உயிரினக் காட்சியகத்தில் இருக்கிறது.
# வயது, இரை கிடைக்கும் தன்மை, காட்டின் சூழல் காரணமாகச் சில வேங்கைப் புலிகள் ஆட்கொல்லிகளாக மாறிவிடுகின்றன. இப்படிப்பட்ட புலிகள் அரிதானவை. சாதாரண மாக எந்தத் தனிப்பட்ட காரணமும் இல்லாமல், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் நோக்கத்துடனேயே வேங்கைப் புலிகள் மனிதனைத் தாக்குகின்றன.
# இந்தியாவைத் தவிர, வங்கதேசத்தின் தேசிய விலங்கும் வேங்கைப் புலிதான்.
# ஒரு வேங்கையின் உறுமலை 3 கி.மீ. சுற்றளவுக்குக் கேட்க முடியும்.
# வேங்கைகள் இரவில் வேட்டை யாடும். இரவில் அவற்றுக்குப் பார்வை நன்றாகத் தெரியும்.
# வேங்கைகளுக்குத் தண்ணீர் ரொம்பவும் பிடிக்கும், நன்றாக நீந்தும். ஓடைகள், குட்டைகளில் இறங்கி உடல் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளும்.
# வெப்பமண்டலம், குளிர்க் காடுகளில் மட்டுமல்லாமல் சதுப்புநிலங்களிலும் (எ.கா. மேற்கு வங்கச் சுந்தரவனக் காடுகள்) வேங்கைகள் வாழும். எப்போதும் தண்ணீருக்கு அருகிலேயே இருக்கும்.
# ஒரு வேங்கைப் புலி ஒரு முறைக்கு அதிகபட்சம் 27 கிலோ வரை உண்ணக்கூடும். சராசரியாக 5 கிலோ இரையை உண்ணும். இரை பெரிதாக இருந்தால் மறைத்து வைத்து, பசிக்கும்போது உண்ணும்.
# காட்டெருமை, மான் போன்ற குளம்புள்ள உயிரினங்கள் மட்டுமின்றி ஆமை, தவளை போன்ற சிறிய உயிரினங்களையும் வேங்கைப் புலிகள் உண்ணும்.
# வேங்கைப் புலிகளில் வங்கம், தென்சீனம், இந்தோசீனம், சுமத்ரா, சைபீரியா என்று ஐந்து உள்ளினங்கள் உண்டு. இதுதவிரக் காஸ்பிய, பாலி, ஜாவா புலி உள்ளினங்கள் முற்றிலும் அற்றுப் போய்விட்டன.
# பூமியின் வடக்கு குளிர் பகுதிகளில் வாழும் புலிகள் பெரிதாகவும், எடை மிகுந்தும் இருக்கின்றன. வெப்பமண்டலப் பகுதிகளில் வாழ்பவை, அவற்றைவிட அளவில் சிறியவை. வேங்கைகளில் மிகப் பெரியது இந்தோ-சீனப் புலியே.
# உயிரினக் காட்சியகங்களில் வேங்கைப் புலி 26 ஆண்டுகள்வரை வாழ்ந்துள்ளது.
No comments:
Post a Comment