நீல் ஆர்ம்ஸ்டிராங் ‘நிலா நிலா ஓடி வா’ எனப் பாட்டுப் பாடவும், குழந்தைகளுக்கு வேடிக்கைக் காட்டி சோறு ஊட்டவும், பெரியவர்கள் அண்ணாந்து பார்த்து அதிசயிக்கவும் வைத்தது நிலவு. ஆனால், அங்கே மனிதன் காலடி பதித்தபோது அறிவியல் விண்ணைத் தொட்டுவிட்டது.
அப்பல்லோ 11 விண்கலத்தில் சென்று நிலவில் முதல் காலடி வைத்தவர் நீல் ஆர்ம்ஸ்டிராங். வருடம் 1969 ஜூலை 20 இரவு 10.56 மணிக்கு (கிழக்கத்திய பகல் நேரப்படி).
அப்படிக் கால் பதித்தபோது அவர் சொன்ன வார்த்தைகள்தான், “மனிதனைப் பொறுத்தவரை இது சிறிய காலடி, ஆனால் மனித இனத்துக்கு இது மிகப் பெரிய பாய்ச்சல்”.
உண்மையில், நிலவில் நீல் ஆர்ம்ஸ்டிராங் முதல் காலடியை எடுத்து வைக்கும் திட்டம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதல்ல. அந்த விண்கலத்தைத் தலைமையேற்றுச் செலுத்தும் பொறுப்பே அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், தரைக் கட்டுப்பாட்டு தளத்தில் இருந்து வந்த உத்தரவை, அவருடைய சக விண்வெளி வீரர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. உத்தரவைப் புரிந்துகொண்ட ஆர்ம்ஸ்டிராங் முதலில் காலடி எடுத்து வைத்தார். நிலவில் கால் பதித்த முதல் மனிதராக மாறி வரலாறும் படைத்தார். அதிலும் முதலில் பதித்தது வலது காலை அல்ல, இடது காலை.
ஆர்ம்ஸ்டிராங்கும் அவருடைய சக விண்வெளி வீரர் பஸ் ஆல்டிரினும் நிலவில் பதித்த காலடிகள் இன்னமும் அங்கே அப்படியே பதிந்துள்ளன. அதன் மீது தூசி படிந்திருந்தாலும்கூட, நிலவில் காற்று பலமாக வீசாததால் இத்தனை ஆண்டுகள் கழித்தும், அது அழியாமல் அப்படியே இருக்கிறது.
பிறகு அவர்கள் இருவரும் அங்கே ஒரு நினைவுக் கல்லை நட்டனர். ‘இங்கேதான் மனிதர்கள் முதன்முதலில் காலடி வைத்தார்கள். மனிதக் குலத்துக்கு அமைதி ஏற்படுத்தும் நோக்கத்துடனே நாங்கள் இங்கு வந்தோம்' என்று பொறிக்கப்பட்டிருக்கிறது.
அப்பல்லோ 11 விண்கலம் நிலவைத் தொட்டுப் பூமி திரும்பிய பிறகு, நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் பல்வேறு பதவிகளை ஆர்ம்ஸ்டிராங் வகித்துள்ளார். சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.
யூரி ககாரின்
ஆர்ம்ஸ்டிராங் நிலவைத் தொடுவதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு, விண்வெளியில் முதலில் பறந்தார் ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின். 1961-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி வாஸ்டாக் 1 என்ற விண்கலம் மூலம் உலகைச் சுற்றி வந்து அவர் சாதனை படைத்தார். அவர் விண்வெளியில் பறந்தது, வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனை.
விண்ணில் பறந்த முதல் மனிதரான அவர், அப்படிப் பறந்தபோது ஏற்பட்ட பதற்றத்தை ‘வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தது' போல இருந்தது என்று கூறியிருந்தார்.
அவரைச் சுமந்து சென்ற விண்கலம் வெறும் 108 நிமிடங்களில் உலகை வலம் வந்தது. அப்படியானால் அது எவ்வளவு வேகத்தில் சுற்றியிருக்கும்? அப்படிச் சுற்றியிருந்தால், வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி என்ன, ஹெலிகாப்டரே பறந்திருக்கும்! ககாரின் அதை அழகாகச் சொல்லியிருக்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம்.
"பூமி ஒரு நீல நிறக் கோள்" என்று முதலில் சொன்னவரும் ககாரின்தான். இதற்குக் காரணம், அவரால் தானே முதன்முதலில் பூமிப் பந்தை மேலிருந்து பார்க்க முடிந்தது.
இன்றைக்கு ‘விண்வெளியில் பறப்பது' ஆச்சரியத்துக்கு உரிய ஒரு விஷயமாக இல்லை. கடந்த 53 ஆண்டுகளில் 38 நாடுகளைச் சேர்ந்த 536 பேர் விண்வெளிக்குச் சென்றுள்ளனர்.
ராகேஷ் சர்மா
விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய வீரர் ரகேஷ் சர்மா, இப்போது எங்கு வாழ்ந்துகொண்டிருக்கிறார் தெரியுமா? ஊட்டிக்கு அருகில் உள்ள குன்னூரில்தான்.
ஆறு வயதிலேயே உறவினர் ஒருவருடன் இந்திய விமானப் படை கண்காட்சிக்குப் போய் விமானங்களைப் பார்த்தபோது ராகேஷ் சர்மாவுக்குப் பறக்க வேண்டும் என்ற ஆசை துளிர்விட்டது. 35 வயதில் அவர் விண்ணுக்குச் சென்றார்.
இந்திய விமானப் படையில் விங் கமாண்டராக இருந்த ராகேஷ் சர்மா, உலக அளவில் விண்வெளிக்குச் சென்ற 128-வது மனிதர். தற்போது கஸகஸ்தானில் உள்ள பைகானூர் ஏவுதளத்தில் இருந்து 1984 ஏப்ரல் 2-ம் தேதி விண்ணுக்குப் பாய்ந்தார். பைகானூர்தான் உலகின் முதலாவது மற்றும் மிகப் பெரிய விண் ஏவுதளம். யூரி ககாரின் விண்ணுக்குச் சென்றதும் இங்கிருந்துதான்.
சோயுஸ் டி 11 என்ற விண்கலத்தில் இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்களுடன் ராஜேஷ் விண்ணுக்குச் சென்றார். சால்யுட் 7 என்ற விண்வெளி நிலையத்தில் ஏழு நாள் 21 மணி 40 நிமிடங்கள் இருந்த பின் அவர் பூமி திரும்பினார்.
நாடு திரும்பிய பிறகு பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் தலைமை பரிசோதனை விமானியாகப் பணிபுரிந்த அவர், இலகு ரகப் போர் விமானமான தேஜஸை மேம்படுத்தும் திட்டத்திலும் இருந்தார்.
சரி, விண்வெளிக்குப் பறந்தபோது அவருக்குப் பயமாக இருக்கவில்லையா? “விண்வெளியில் பறப்பதைவிடவும் இந்திய விமானப் படையில் பயங்கரமான ஆபத்துகளை எல்லாம் ஏற்கெனவே எதிர்கொண்டிருந்தேன். அதனால், விண்வெளியில் பறந்தது பெரிய விஷயமாக இல்லை” - இதுதான் ராகேஷ் சர்மாவின் பதில்.
No comments:
Post a Comment