Thursday, 10 July 2014

பொருளாதார ஆய்வறிக்கை 2013-14: முக்கிய அம்சங்கள்

நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜிடிபி) 5.4 சதவீதம் முதல் 5.9 சதவீதம் இருக்கும் என்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இருந்தாலும், குறைவான பருவமழை, முதலீட்டு சூழ்நிலை ஆகியவற்றை பொறுத்துதான் இந்த வளர்ச்சி இருக்கும் என்று ஆய்வறிக்கை கூறியிருக்கிறது.
கடந்த இரண்டு நிதி ஆண்டுகளாக நாட்டின் வளர்ச்சி 5 சதவீதத்துக்கு கீழே இருந்தது குறிப்பிடத்தக்கது.
இருந்தாலும் நாட்டின் வளர்ச்சி 2016-17-ம் ஆண்டுகளில் 7 முதல் 8 சதவீத அளவுக்கு உயரும் என்று அறிக்கையில் கணிக்கப்பட்டிருக்கிறது. அதாவது 12ம் நிதி ஆண்டு முடியும் தருவாயில் இந்த வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
முதலீட்டுக்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று இந்த அறிக்கை அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறது. 2007-08ம் ஆண்டு வரை இந்தியாவில் முதலீடு அதிகமாக இருந்தது. இதற்கு தனியார் துறையின் பங்களிப்பும் ஒரு காரணம். ஆனால் அதன்பிறகு தனியார் துறை பங்களிப்பு குறைந்து, பொருளாதாரத்தை சுணங்கச்செய்துவிட்டது.
நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்து வந்ததன் காரணமாக நிதிப்பற்றாக்குறை குறைந்தது. கூடவே குறைவான பணவீக்கம், பேரியல் பொருளாதாரம் நன்றாக இருக்கும்போது முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் முதலீடு செய்வார்கள் என்றும் அறிக்கை கூறியிருக்கிறது.
பணவீக்கம் முன்பு இருந்த நிலையைவிட குறைந்துகொண்டே வந்தாலும், சௌகரியமான அளவுக்கு அது குறையவில்லை. இதற்கு காரணம் உணவுப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதுதான்.
பணவீக்கம் குறையும் போதுதான் வட்டி குறைப்பு உள்ளிட்ட நிதிக்கொள்கைகளில் மாற்றம் கொண்டுவர முடியும். அப்போதுதான் முதலீட்டாளர் களிடையே நம்பிக்கை அதிகரிக் கும். சர்வதேச பொருளாதாரம், குறிப்பாக வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கை இருப்பதால், இந்தியாவும் 2014-15ம் ஆண்டுகளுக்கு பிறகு நல்ல வளர்ச்சியை எதிர்பார்க்க லாம்.
தவிர நிதி ஒழுங்கு, நிலையான வர்த்தகப் பற்றாக்குறை போன்றவை முதலீட்டை மேலும் ஊக்கப்படுத்தும். நிலப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கொள்கைளை அறிவிக்கும் போது கட்டுமான துறை வளர்ச்சி அடையும். விவசாய உற்பத்தியை அதிகரிக்க சீர்திருத்தங்கள் தேவையாகும்.
இருந்தாலும் பருவமழை, வெளிநாட்டு சூழ்நிலைகள் உள்ளிட்ட பாதகமான சூழ்நிலையும் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த வருடங்களில் இருந்த மந்த நிலை உற்பத்தி துறையை கடுமையாக பாதித்திருப்பதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. 2013-14ம் ஆண்டில் 26.4 கோடி டன் அளவுக்கு உணவு தானிய உற்பத்தி இது கடந்த ஐந்து வருடத்தின் சராசரியை விட 2 கோடி டன் அதிகம்.
வேலைக்கு தயாராக இருக்கும் இளைஞர்கள் அதிகமாக இருப்பது இந்தியாவுக்கு சாதகமாகும். 2001-ம் ஆண்டு 58 சதவீத இந்தியர்கள்தான் வேலைக்கு சென்றனர். இது 2021ம் ஆண்டு 64 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அதே சமயத்தில் சில சவால்களும் உள்ளன. இளைஞர்களை சரியாக பயன்படுத்தும் அளவுக்கு கொள்கை வகுப்பாளர்கள் சரியான கொள்கையை உருவாக்கி, அதை செயல்படுத்த வேண்டும் என்று அறிக்கை தெரிவிக்கிறது.
* நடப்பு நிதி ஆண்டின் வளர்ச்சி 5.4 முதல் 5.9 சதவீதமாக இருக்கும்
* 2016-17ம் நிதி ஆண்டில் 7 முதல் 8 சதவீத வளர்ச்சி இருக்கும்
* இந்தியா நிதிபற்றாக்குறையை குறைக்க வேண்டும்
* மானியங்களில் சீர் திருத்தம் தேவை
* வெளிநாட்டு கடன் கட்டுக்குள் இருக்க வேண்டும்.
* வரி ஜிடிபி விகிதத்தை அதிகரிக்கும் நடவடிக்கை வேண்டும்
* 2014ம் ஆண்டு இறுதியில் பணவீக்கம் குறையும்
* வரி விலக்குகள், எளிமையான வரி விதிப்பு முறைகள் வேண்டும்
* பருவமழை, வெளி சூழ்நிலைகள் பாதகமாக மாறலாம்
* மானியங்களுக்கு பயோமெட்ரிக் முறை வேண்டும்.
* 2014-15 நிதி ஆண்டின் நடப்பு கணக்குப்பற்றாக்குறை 2.1 சதவீதமாக குறைக்கப்படும்.
* நேரடி வரிவிதிப்பு முறை மூலம் அதிக அளவு வரியைத் திரட்ட முடியும்

No comments:

Post a Comment