Tuesday, 8 July 2014

தமிழின் முதல் சூழலியல் எழுத்தாளர்

மா. கிருஷ்ணன் பிறந்த நாள்: ஜூன் 30
இயற்கையையும் சுற்றுச்சூழலையும் பற்றிய நவீனப் புரிதல் பரவலாவதற்கு முன்பே நாட்டின் தலைசிறந்த இயற்கையியலாளராகத் திகழ்ந்தவர் மா. கிருஷ்ணன். 1995-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் கழகம் (UNEP) தேர்ந்தெடுத்த ‘உலக ஐநூற்றுவரி’ல் ஒருவர் என்ற பெருமை பெற்றவர்.
பள்ளி ஆசிரியர், நீதிபதி, மக்கள் தொடர்பு அலுவலர், மன்னரின் அரசியல் செயலாளர் என்று பல பதவிகளில் பணிபுரிந்திருந்த அவர், சுதந்திர இந்தியாவில் உயர்ந்த அரசுப் பதவி தேடி வந்தும், அதை ஏற்கவில்லை. தன்னை ஈர்த்த இயற்கை, கானுயிர்களைப் பற்றி எழுதுவது, புகைப்படமெடுப்பது என காடு, கானுயிர் ஆய்வில் நாட்டம் கொண்ட வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். தமிழின் முதல் நாவலாசிரியர்களில் ஒருவரான அ. மாதவையாதான் இவருடைய அப்பா.
கானுயிர் எழுத்து
‘சில்பஸ்ரீ’ என்ற இதழில் ரா.பி. சேதுபிள்ளை போன்ற தமிழறிஞர்களின் எழுத்துகளுடன் இவரின் சிறுகதைகளும் வெளி வந்தன. இவற்றைப் படித்த கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜ.வின் ஊக்குவிப்பில் ‘கலைமகளி’லும், பின்னர் ‘கல்கி’யிலும் கானுயிர் பற்றிய கட்டுரைகளை எழுதினார். கானுயிர்களின் வாழ்வை எளிய தமிழில் துல்லியமாக எழுதினார்.
தன் நண்பர் பெரியசாமி தூரனின் அழைப்பின் பேரில் கலைக் களஞ்சியத்தில் உயிரினங்கள் பற்றி மிக அதிக எண்ணிக்கையிலான கட்டுரைகளை எழுதினார். இதில் அவர் செய்த முக்கியமான பணி பாலூட்டிகளுக்கும், பறவைகளுக்கும் புழக்கத்திலிருக்கும் சரியான பெயர்களைப் பயன்படுத்தியதுதான். எளிய மக்களிடம் இருக்கும் பாரம்பரிய அறிவுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான முதல் படி அது.
ஆங்கிலத்தில்கூட இயற்கை பற்றியோ, கானுயிர் பற்றியோ ஆர்வம் காட்டாத காலத்தில் அறிவியல் நோக்கில் கானுயிர் பற்றித் தமிழில் முதலில் எழுதியவர் மா.கிருஷ்ணன். தான் எழுதிய கட்டுரைகளுக்கு அவரே கோட்டோவியங்களும் வரைந்தார். சத்திமுத்தப் புலவரின் “நாராய், நாராய்....” பாடலையும் தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த் திருக்கிறார். ‘கதிரேசஞ்செட்டியாரின் காதல்’ என்ற துப்பறியும் நாவலையும் எழுதியுள்ளார்.
இயற்கை பாதுகாப்பு
தமிழகம், கர்நாடகம் , கேரள மாநிலங்கள் இணைந்த முதுமலை-பந்திப்பூர்-வயநாடு வன உயிர்ச் சரணாலயமான ஆசிய யானைகளின் வாழ்விடம் உருவாக யோசனை தந்தவர். கானுயிர்களின் பாதுகாப்புக்காக, எல்லைகள், நீர் ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை 14 மாநிலங்களில் வரையறுத்து வனத்துறைக்குப் பெருமளவில் உதவியவர்.
இந்தியக் கானுயிர் வாரியத்தில் (Indian Board of WildLife) முப்பதாண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். புலிகளைக் காக்க 1970-ல் உருவாக்கப்பட்ட ‘Project Tiger’ திட்டத்தில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு.
“சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு நம் நாட்டிலோ உலக அளவிலோகூடத் தோன்றியிருக்காத 1940களிலும் 1950களிலும் எளிய தமிழில் கானுயிர் பற்றியும், இயற்கை பற்றியும் கட்டுரைகள் எழுதிச் சூழலியல் சார்ந்த கருதுகோள்களை விளக்க முற்பட்டவர் மா. கிருஷ்ணன்" என்கிறார் சூழலியல் அறிஞர் சு. தியடோர் பாஸ்கரன். தன் வாழ்வின் முக்கியத் தாக்கத்தைச் செலுத்தியவர் என்று மா.கிருஷ்ணனை பாஸ்கரன் குறிப்பிடுகிறார். கானுயிர் புகைப்பட வல்லுநர் டி.என்.ஏ. பெருமாள் போன்றவர்களுக்கு இத்துறையில் பெரும் ஆர்வத்தைத் தூண்டியவர் கிருஷ்ணனே.
தேசியமும் பண்பாடும் இயற்கையும் பின்னிப் பிணைந்தது என்பதை எடுத்துரைத்த முதல் இயற்கை ஆர்வலர்களில் ஒருவரான மா. கிருஷ்ணன், மண் மீதும் மனிதர்கள் மீதும் காட்டும் பற்று மட்டுமல்ல; இயற்கையின் மீதும் கானுயிர்களின் மீதும் காட்டும் பற்றும் நாட்டுப்பற்றுதான் என்கிறார்.
கட்டுரையாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர், 
தொடர்புக்கு: senthamilkannu@gmail.com

No comments:

Post a Comment