தேசப்பிதா மகாத்மா காந்திக்கு லண்டனில் உள்ள நாடாளுமன்றச் சதுக்கத்தில் சிலை அமைக்கப்படுகிறது. அடுத்த ஆண்டுக்குள் இந்த சிலையை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புது டெல்லிக்கு அரசு முறைப்பயணமாக வந்துள்ள பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக், நிதித்துறை அமைச்சர் ஜார்ஜ் ஆஸ்பார்ன் ஆகியோர் இந்த தகவலை தெரிவித்தனர்.
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியவரான மகாத்மா காந்தி இந்தியாவை முன்னேறிய நாடாக மாற்ற விரும்பியவர்களில் ஒருவர். அவர் கையாண்ட அறவழிப் போராட்டம் அவர் வாழ்ந்த போது எப்படியோ அப்படியே இன்றும் நமது வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டதாக உள்ளது. நாடாளுமன்ற சதுக்கத்தில் உள்ள நெல்சன் மண்டேலா, ஆபிரகாம் லிங்கன் உள்ளிட்ட தலைவர்களின் சிலைக்கு அருகில் காந்தி சிலை நிறுவப்படும் என்றார் ஹேக்.
ஆஸ்பார்ன் கூறியதாவது: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தந்தை என போற்றப்படுபவர் காந்தி. நாடாளுமன்றங்களின் தாய் என வர்ணிக்கப்படும் பிரிட்டன் நாடாளுமன்றத்தின் முன் அவரது சிலை அமைப்பது சரியானதாகும். பிரிட்டன், இந்தியாவுக்கு மட்டும் அல்லாமல் உலகுக்கே ஊக்கம் தரும் உன்னத தலைவராக காந்தி விளங்குகிறார்.
காந்தியின் நினைவாக பிரிட்டனில் அமைக்கப்படும் நினைவிடம் அவருக்கு அளிக்கப்படும் சரியான அஞ்சலியாகும். இந்தியாவுடனான பிரிட்டனின் நட்புறவுக்கு அழியா சின்னமாக அது விளங்கும் என்றார் ஆஸ்பார்ன். டெல்லியில், காந்தி சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திய பிறகு பேசும்போது இருவரும் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். பிரிட்டிஷ் தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சிலை நிறுவும் திட்டத்துக்கு பிரிட்டிஷ் அரசு முழு ஆதரவு கொடுத்துள்ளது, பிரிட்டன் கலாசாரத்துறை செயலர் சாஜித் ஜாவித் தலைமையில் சிறப்பு ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற சதுக்கத்தில் அமையும் 11-வது சிலை இது.
No comments:
Post a Comment