‘சைபர் கிரைம்’ எனப்படும் இணைய குற்றங்கள் மூலம் கடந்த ஆண்டில் ரூ.24,630 கோடிக்கு மோசடிகள் நடந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இணைய மோசடி தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் கீதா மிட்டல், ஜே.ஆர்.மிதா அடங்கிய அமர்வு ஒரு குற்ற வழக்கை விசாரித்து முடிக்க அரசுக்கு எவ்வளவு செலவாகிறது என்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி டெல்லி சட்ட உதவி மையத்துக்கு உத்தரவிட்டது.
கூடுதல் மாவட்ட நீதிபதி சுரீந்தர் எஸ்.ரதி தலைமையில் நடந்த ஆய்வு அறிக்கை சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய விவரங்கள் வருமாறு:
நாடு முழுவதும் 12,700 காவல் நிலையங்கள் உள்ளன. இதில் 15.70 லட்சம் காவலர்கள் பணிபுரிகின்றனர். தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளி விவரப்படி, நாடு முழுவதும் கடந்த ஆண்டு மட்டும் 66.40 லட்சம் குற்ற வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. டெல்லியில் உள்ள 177 காவல் நிலையங்களில் 86 ஆயிரத்து 800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புகார் குறித்து 89 லட்சம் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. கடந்த ஆண்டு மட்டும் ரூ.24,630 கோடி அளவுக்கு ‘சைபர் குற்றங்கள்’ நடந்துள்ளன.
குற்றம் குறித்த வழக்குகளை விசாரித்து நீதி வழங்கும் நடை முறை முற்றிலும் குழப்பமான நிலையில் உள்ளது. நீதிமன்றங்கள் தாங்க முடியாத சுமையை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காவல் நிலையங்களில் அறிவியல் பூர்வமான குற்றத் தடுப்பு நடவடிக் கைகள் பின்பற்றப்படாததால் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
குற்றங்களை தடுக்கத் தேவையான தொழில்நுட்ப வசதிகள், காவலர்கள், அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக இல்லை. இந்த வசதிகளை உருவாக்கவிடாமல் ஊழல் தடையாக உள்ளது.
ஒரு குற்ற வழக்கு காவல் நிலையத்தில் பதிவானதில் இருந்து அந்த வழக்கு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும் வரை அரசுக்கு எவ்வளவு செலவாகிறது என்ற கணக்கு எங்கும் இல்லை. தண்டிக்கப்பட்ட பின் தண்டனை அளிக்க செலவாகும் தொகை போன்றவற்றை கணக்கிட அறிவுப்பூர்வமான கணக்கீட்டு முறை உருவாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 7 லட்சம் வழக்குகள்
வாய்வழி புகார் 56,066, எழுத்து மூலம் புகார் 3,52,470, எண் ‘100’க்கு வந்த அழைப்புகள் 3,066, காவல்துறையே நடவடிக்கை எடுத்த வழக்குகள் 2,85,076, பதிவான மொத்த வழக்குகள் 6,96,678. இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள் 2,03,579. சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள் 4,93,099, மொத்தம் 6,96,678. இது அகில இந்திய அளவில் பதிவான வழக்குகளில் 10.49 சதவீதம் ஆகும்.
தேசிய அளவில் பதிவான வழக்குகள்
புகார்கள் 1,86,84,289, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள் 26,47,722, சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டத் தின் கீழ் பதிவான வழக்குகள் 39,92,656, மொத்தம் 66,40,378.
No comments:
Post a Comment