சிப்கோ இயக்கத்துக்கு வித்திட்டவர்களில் ஒருவரான சூழலி யலாளரும் காந்திய வாதியுமான சண்டி பிரசாத் பட்டுக்கு 2013-ம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருது சமீபத்தில் வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த விருதை வழங்கினார். சண்டி பிரசாத் பெறும் மூன்றாவது மிகப் பெரிய கவுரவம் இது.
முன்னோடி
சண்டி பிரசாத் பட், இந்தியச் சுற்றுச்சூழல் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். ஜெயப்பிரகாஷ் நாராயணின் சர்வோதய இயக்கத்தால் உத்வேகம் பெற்ற பட், கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், காடுகள் மீதான அரசு ஒடுக்குமுறைக் கொள்கைகளுக்கு எதிராகவும் போராடினார். அதற்காக, சிப்கோ இயக்கத்தின் தாய் இயக்கமான தாஷோலி கிராம சுயராஜ்ய மண்டல் என்ற அமைப்பை நிறுவினார்.
அந்த அமைப்பின் மூலம் சூழலியலைப் பாதுகாப்பதன் அவசியத்தை, கிராம மக்களுக்கு அவர்களது பாரம்பரிய அறிவின் மூலமாகவே எடுத்துரைத்தார். மக்களோடு மக்களாக எளிமையாக வாழ்ந்த அவர், இயற்கையைச் சிதைக்காமல் அவர்களை உய்விக்கும் வழிகளையும் கண்டறிந்தார்.
சுய விழிப்புணர்வு
1970 ஜூலை 20-ம் தேதி சமோலி மாவட்டம் அலக்நந்தா நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், திடீரென 60 அடி உயரத்துக்கு நீர்மட்டம் உயர்ந்ததால் ஏற்பட்ட ஆபத்தைச் சண்டி பிரசாத் நேரில் கண்டிருந்தார்.
கிட்டத்தட்ட 400 சதுர கிலோ மீட்டர் பரப்பு வெள்ளத்தில் மூழ்கியது, சாலைகளும் பாலங்களும் அடித்துச் செல்லப் பட்டன, கானா என்ற 330 அடி ஆழ ஏரியில் இடிபாடுகள் சிக்கிக்கொண்டன. இந்த வெள்ளத்தின் காரணமாக மேற்கு உத்தரப் பிரதேசத்தில் 10 லட்சம் ஏக்கர் வயல்களுக்குப் பாசனம் தந்துகொண்டிருந்த வாய்க்கால்கள் தடுக்கப்பட்டன.
அடுத்தடுத்த வெள்ளத்தால் வீடுகள், கால்நடை, மக்கள் தொடர்ந்து மடிந்தனர். 1978-ல் அப்பகுதியில் ஏற்பட்ட கடந்த நூற்றாண்டின் மிகப் பெரிய நிலச்சரிவு, கிட்டத்தட்ட 2 மைல் நீளத்துக்குப் பாகீரதி நதியை அடைத்தது. இவை அனைத்துக்கும் பெருமளவு மரம் வெட்டப்பட்டதே காரணம் என்பதை சண்டி பிரசாத் உணர்ந்தார்.
புதிய அமைப்பு
1964-ல் தாஷோலி கிராமச் சுயராஜ்ய மண்டல் என்ற அமைப்பைக் கோபேஸ்வர் கிராமத்தில் உருவாக்கி, அருகே இருந்த கிராம மக்களுக்குக் காட்டை மையமாகக் கொண்ட தொழில்களை அவர் உருவாக்கினார். ஆயுர் வேத மருத்துவத் தாவரம் சேகரிப்பு, மரப்பொருள் தயாரிப்பு போன்றவற்றை உருவாக்கிக் காட்டைச் சுரண்டும் நடவடிக்கைகளைத் தடுத்தார்.
பொது மக்கள் காட்டுப் பொருள்கள், மரப்பொருள்கள் சேகரிப்பதைத் தடுக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டு, தனியார் நிறுவனங்களுக்குக் காட்டு வளம் திறந்துவிடப்பட்டபோது, சிப்கோ இயக்கத்தைச் சண்டி பிரசாத் பட் உருவாக்கினார்.
காட்டைக் காப்பதற்கு மரங்களை அணைத்துக் கொள்வோம் என்று அந்த அமைப்பு முழங்கியது. காட்டில் விறகு சேகரித்துக்கொண்டிருந்த சாதாரணப் பெண்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினர். மரம் வெட்ட முயற்சிகள் நடந்தபோது, மரங்களை அணைத்துக்கொண்டு அந்தப் பெண்கள் போராடினர்.
முதல் இயக்கம்
சிப்கோ இயக்கம் இந்தியச் சுற்றுச்சூழல் போராட்டத்தின் தொடக்கத்தை அறிவித்தது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை இந்தியாவில் மிகப் பெரிய அளவில் உணர்த்திய, விழிப்புணர்வை ஏற்படுத்திய போராட்டமாக அது அமைந்தது.
காட்டைப் புத்திசாலித் தனமாகப் பயன்படுத்துவதுடன், பாதுகாக்கவும் வேண்டும் என்பதை வலியுறுத்திப் போராடிய தனித்தன்மை கொண்ட, பெண்களை மைய மாகக் கொண்ட சுற்றுச் சூழல் இயக்கம்தான் சிப்கோ இயக்கம்.
காட்டில் சூழலியல் சமநிலையைப் பராமரிப்பதன் அவசியத்தை உணர்ந்து மலைச்சரிவுகளில் பாறை களுக்கு ஆதாரமாகச் சுவரைக் கட்டுவது, மரங்களை நட்டு வளர்ப்பது போன்ற பணிகளை அந்த அமைப்பு மேற்கொண்டது. அரசு நட்ட மூன்றில் ஒரு மரக்கன்றுகளே பிழைத்தபோது, கிராம மக்கள் நட்ட 88 சதவீதக் கன்றுகள் பிழைத்தன.
சுதந்திர இந்தியாவின் முதல், வெற்றிகரமான சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான மக்கள் இயக்கத்தைக் கட்டமைத் ததற்காக ராமன் மகசேசே விருது, பத்ம பூஷன் ஆகிய விருதுகளைச் சண்டி பிரசாத் ஏற்கெனவே பெற்றுள்ளார். தற்போது காந்தி அமைதி விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதில் முரண் என்ன வென்றால், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்திச் சிப்கோ இயக்கத்தைத் தாண்டி தீவிரமான போராட்டங்கள் இன்றைக்கு நடக்கும்போதும், அரசு கண்டுகொள்வதில்லை. மேலும் சண்டி பிரசாத் போன்றோர் வலியுறுத்தும் பேரணைகள் கட்டுவதைத் தேஹ்ரி போன்ற பகுதிகளில் அரசு தடுக்கவும் இல்லை. அதேநேரம், அவருக்கு விருதையும் வழங்கிக் கவுரவிக்கிறது.
No comments:
Post a Comment