| ஜூலை 29: சர்வதேச வேங்கைப் புலி நாள் |
ஆசியாவைச் சேர்ந்த வேங்கைப் புலிகள் ஐரோப்பாவில் பிரபலமடைய முக்கியக் காரணமாக இருந்தது பிரபல ஆங்கில எழுத்தாளர் ருட்யார்ட் கிப்ளிங் எழுதிய ‘தி ஜங்கிள் புக்' கதைகள். 1893-ல் அந்தக் கதைகளை அவர் எழுதிய காலகட்டத்தில் ஆசியக் கண்டம் முழுக்க ஒரு லட்சத்துக்கும் அதிகமான புலிகள் இருந்ததாகத் தகவல் உள்ளது. ஆனால், இன்றைக்கு 13 நாடுகளில் 3,200-யைவிடக் குறைவான எண்ணிக்கையிலேயே புலிகள் உள்ளன என்கின்றன சமீபத்திய கணக்கெடுப்புகள்.
பூமியில் உயிரினச் சமநிலை பேணப்படப் புலிகள், திமிங்கிலங்கள் போன்ற இரைகொல்லிகள் (Predator) அத்தியாவசியம். நிலத்தில் வாழும் முக்கிய இரைகொல்லிகளில் ஒன்றான கம்பீர வேங்கைப் புலிகள், நவீன கால நெருக்கடிகளுக்கு வேகமாகப் பலியாகிவருகின்றன.
பலியாகும் புலிகள்
புலி பாதுகாப்புக்காகச் செயல்பட்டுவரும் ‘இந்தியக் காட்டுயிர் பாதுகாப்புக் கழகம்' (Wildlife Protection Society Of India) வெளியிட்டுள்ள கணக்குப்படி, 2013-ம் ஆண்டில் மட்டும் கள்ளவேட்டை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாடு முழுக்க 80 புலிகள் பலியாகியுள்ளன. இந்த ஆண்டு இதுவரை 41 புலிகள் மடிந்துள்ளன. இப்படி இயற்கைக்கு மாறான காரணங்களால் புலிகள் உயிரிழப்பதை, புலிக் காப்பகங்களை அதிகரிப்பதன் மூலம் மட்டும் தடுத்துவிட முடியுமா?
‘முடியும்' என்கிறது அரசு. எப்படி?
கடந்த 2010-ம் ஆண்டு தேசிய அளவிலான புலி கணக்கெடுப்பின் இரண்டு சுற்றுகளாக நடந்தது. அதன்படி, 1,706 புலிகள் இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 1,520 ஆகவும் அதிகபட்சம் 1,909 ஆகவும் புலிகளின் எண்ணிக்கை இருக்கக்கூடும்.
காப்பகங்களும் பாதுகாப்பும்
இத்தனை புலிகள் இறப்பதற்கு முக்கியக் காரணமாகச் சுட்டிக்காட்டப்படுவது புலி காப்பகங்கள் அதிகளவில் அமைக்கப்பட்டதுதான். நாட்டில் தற்போது 18 மாநிலங்களில் 68,518 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவில் 47 புலி காப்பகங்கள் உள்ளன. தமிழகத்தில் களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம் ஆகிய நான்கு இடங்களில் புலிக் காப்பகங்கள் உள்ளன. இவற்றில் 163 புலிகள் இருக்கின்றன.
இவற்றுடன் தேசியப் புலி காப்பக ஆணையத்தின் ஒப்புதலுடன் ரதபனி (மத்தியப் பிரதேசம்) மற்றும் சுனபேதா (ஒடிஸா), பிலிபிட் (உத்தரபிரதேசம்) ஆகிய பகுதிகளில் புலி காப்பகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே, தேர்வு செய்யப்பட்ட குதிரேமுக் (கர்நாடகம்), ராஜாஜி (உத்தரகண்ட்) ஆகிய பகுதிகளில் புலி காப்பகம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
வில்லிப்புத்தூர் அணில்கள் சரணாலயம், மேகமலை காட்டுயிர் சரணாலயம், வருஷநாடு பள்ளத்தாக்கு (தமிழகப் பகுதி) உள்ளிட்ட பகுதிகளிலும் புலிக் காப்பகம் அமைக்கத் திட்ட மதிப்பீட்டை அனுப்பக் கோரி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
என்ன பலன்?
புலி காப்பகங்களை அதிகரிப்பது எப்படிப்பட்ட பலன்களைத் தரும்? "புலி காப்பகங்களை அதிகரிப்பது வரவேற்கத்தக்கதுதான். உலகச் சந்தையில் புலிகளின் எல்லாப் பாகங்களுக்கும் பெரும் தேவை இருப்பதால், தொடர்ச்சியாக அவை கள்ளவேட்டையாடப்படுகின்றன. கடுமையான சட்டங்கள் இயற்றப்படுவதன் மூலமே புலிகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க முடியும்" என்கிறார் சுற்றுச்சூழல் கண்காணிப்பு, விழிப்புணர்வு முன்னெடுப்பு (Environment Monitoring & Awareness Initiative) அமைப்பைச் சேர்ந்த த. முருகவேள்.
இனப்பெருக்க காலம் நீங்கலாகப் புலிகள் தனிமை விரும்பிகள். அவை வாழ்வதற்குப் பெரும் நிலப்பரப்பு அவசியம். மனிதத் தேவைகள், வளர்ச்சிப் பணிகளுக்காக அவற்றின் வாழிடம் அழிக்கப்படுகிறது அல்லது துண்டாக்கப்படுகிறது.
மனித-விலங்கு எதிர்கொள்ளல்
தவிர, புலிகளின் எண்ணிக்கை குறைவதற்கு அவை வேட்டையாடி உண்ணும் மான் போன்ற இரைவிலங்குகள் எண்ணிக்கை குறைவதும் முக்கியக் காரணம். ஓர் ஆண்டில் 50 மான்கள் வேட்டை அல்லது வேறு காரணங்களால் கொல்லப்பட்டால், அது ஒரு புலியைக் கொல்வதற்குச் சமம். அத்துடன் இயற்கையான உணவு அழிக்கப்படுவது, காடுகளுக்கு அருகில் மேய்ச்சலுக்காகச் செல்லும் கால்நடைகளைப் புலி வேட்டையாடுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
“இது போன்ற தருணத்தில்தான் மனித - விலங்கு எதிர்கொள்ளல் (Man - Animal conflict) அதிகரிக்கிறது. அதனால் புலிகளின் வாழ்விடத்தையும் அவற்றின் இரைவிலங்குகளையும் புலிக் காப்பகம் போன்ற நடவடிக்கைகளால் பாதுகாப்பது மிகவும் அவசியம்” என்கிறார் முருகவேள்.
பழங்குடி அறிவு
ஆனால், இப்படிப் புலி காப்பகங்களை அதிகரிப்பதால் மட்டும் புலி வேட்டையாடப்படுவது குறைந்துவிடாது என்கிறார் சத்தியமங்கலம் பகுதியில் இயற்கை பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இயற்கை ஆர்வலர் சு.சந்திரசேகரன்:
“காட்டைப் பற்றிய அறிவைக் கொண்டவர்களால்தான் காட்டைப் பாதுகாக்க முடியும். அதேபோல, காடுகளிலேயே வசிக்கும் பழங்குடியினரால்தான் புலி வேட்டையாடப்படுவதைத் தடுக்க முடியும். புலிகளைப் பாதுகாப்பதில் அவர்களுக்கும் முக்கியக் பங்கு இருக்கிறது. அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியம்” என்கிறார்.
No comments:
Post a Comment