Thursday, 24 July 2014

எது ஆட்கொல்லி உயிரினம்? சட்டம் சொல்லும் விளக்கம் - தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய விதிமுறை விவரம்

சில மாதங்களுக்கு முன்பு நீலகிரி பகுதியில் ஆட்கொல்லி புலியை அதிரடிப் படையினர் சுட்டுக் கொன்ற சம்பவம் பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியது. இதனால், திம்பம் பகுதியில் வனக்காப்பாளர் உட்பட 2 பேரைக் கொன்ற சிறுத்தை பிடிபட்டாலும் கூட அதை என்ன செய்வது என்று வனத்துறையினர் குழப்பம் அடைந்துள்ளனர்.
ஆனால், ஒரு வன உயிரினம் ஆட்கொல்லியாக மாறிவிட்டால் அதை கொன்றுவிட வேண்டும் என்று தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெளிவான விதிமுறைகளை வகுத்துள்ளது.இதுகுறித்து தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகள்:
• 1972-ம் ஆண்டு வன உயிரினப் பாதுகாப்பு சட்டம் பிரிவு 9 (1)-ன் கீழ் வன உயிரினங்களுக்கு பாதுகாப்பை உறுதிசெய்வது கட்டாயமாகும். ஆனால், அதே வன உயிரினம் மனிதர்களைக் கொல்வதாக மாறினால் அல்லது தன்னையே பராமரித்துக்கொள்ள முடியாத இயலாமை நிலையை அடைந்தால் அல்லது மீட்க முடியாத, பிற வன உயிரினங்களுக்கும் பரவக் கூடிய நோயால் பாதிக்கப்பட்டிருந் தால் அதை வனப் பாதுகாப்பு சட்டம் பிரிவு 11(1) (ஏ)-ன் கீழ் கொல்லலாம். தகுந்த காரணங்களுடன் இந்த முடிவை எடுக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட தலைமை வனப் பாதுகாவலருக்கு மட்டுமே உண்டு.
• ஒரு புலி அல்லது சிறுத்தை உண்மையிலேயே ஆட்கொல்லி யாக மாறிவிட்டதா என்பதை அறிவியல்பூர்வமான சோதனைகள் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். கால்தடம் சேகரிக்கப்பட வேண்டும். அது உலவும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். கால்தடம் மற்றும் உடல் வரிகள் அல்லது புள்ளிகளைக் கொண்டு அந்த உயிரினத்தை அடையாளம் கண்டு கொல்வது முக்கியம். ஆட்கொல்லி அல்லாத ஒரு உயிரினம் கொல்லப்பட்டு விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
• ஆட்கொல்லி உயிரினங்களில் 2 வகை உண்டு. ஒன்று, மனிதர் என்று உணராமல் கொல்வது. இது விபத்து. உதாரணத்துக்கு, ஒரு பெண் புலி தனது குட்டிகளுடன் இருக்கும்போது அதன் எல்லைக்குள் சென்றாலோ, புதருக்குள் இருக்கும் புலியை மனிதன் அறியாமல் மிக நெருக்கமாக எதிர்கொண்டாலோ, மனிதன் குனிந்திருக்கும் நிலையில் ஏதோ இரை விலங்கு என்று புலி தவறாக கணித்தாலோ இதுபோன்ற விபத்துகள் நடக்கும். இதுபோன்ற முதல் சம்பவங்களில் புலி அதிர்ச்சி அடைந்து மனித உடலை சாப்பி டாமல் ஓடிவிடலாம் அல்லது சாப்பிட்டி ருக்கலாம். எனவே, அடித்துக் கொன்றுவிட்டு உடலை சாப்பிடாமல் சென்ற புலியை கொல்லலாமா, அல்லது வனத்தில் விடலாமா என்பதை சம்பந்தப்பட்ட தலைமை வனப் பாதுகாவலர் முடிவு செய்ய வேண்டும். அதை சுட்டுக்கொல்லவும் அவருக்கு அதிகாரம் உண்டு.
• ஒரு புலி அல்லது சிறுத்தை நேராக நின்றிருக்கும் மனிதரைப் பார்த்த பிறகும் - அது தனது வேட்டை குணாதிசயத்தில் இருந்து மாறாமல் பதுங்கி, திட்டமிட்டு தாக்க முற்பட்டால், சந்தேகம் இல்லாமல் அதை ஆட்கொல்லி புலி என்று அதி காரபூர்வமாக அறிவித்து, அது உலவும் பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை தடை செய்ய வேண்டும்.
• ஆட்கொல்லி உயிரினத்தை சுட்டுக்கொல்லும் பொறுப்பு ஏற்கெனவே இதுபோன்ற ஆட்கொல்லியை சுட்டுக் கொன்ற அதிகாரியிடம் மட்டுமே அளிக்க வேண்டும். அவருக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
• வனத்தை ஒட்டிய மக்கள் வசிப் பிடங்களில் ஆட்கொல்லி புலிகள் இருக்கின்றன என்று அடிக்கடி தகவல்கள் கிளம்பும். இந்த தகவலுக்கும் உள்நாடு, வெளிநாட்டு வேட்டை கும்பலுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? அரசியல் அழுத்தங்கள் இருக்கிறதா என்பதை தலைமை வனப் பாதுகாவலர் கண்டு பிடிப்பது மிக அவசியம். ஏனெனில் இந்தியாவைப் பொறுத்தவரை இப்படியான சூழல்கள் வேட்டை சமூ கங்களுக்கு சாதகமாகவே அமை கின்றன.
• வன உயிரினங்களை வேட்டையாடும் ஆர்வத்தை ஊக்குவிக்கக் கூடும் என்பதால் ஆட்கொல்லி உயிரி னத்தை சுட்டுக் கொன்றவருக்கு வெகுமதி அளிக்கக் கூடாது. மிகவும் அவசியம் எனில் அவரை கவுரவப்படுத்துவது குறித்து அரசு பரிசீலிக்கலாம்.
• கொல்லப்பட்ட ஆட்கொல்லி உயிரினத்தை சம்பந்தப்பட்ட பகுதியின் வன அதிகாரிகள், கிராம வனக்குழுத் தலைவர், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும். பின்பு அதை எரித்து, அது சாம்பலானதை உறுதி செய்வது அவசியம்.

No comments:

Post a Comment