ராஜீவ் கொலையாளிகள் விடுதலைக்கு எதிரான வழக்கு விசாரணையின்போது ஆயுள் கைதிகளை விடுவிப்பது தொடர்பான விவகாரத்தில் அனைத்து மாநில அரசுகளுக்கும் இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளும் 18 ம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 18-ம் தேதி உத்தரவிட்டது. இதை அடுத்து அவர்கள் உட்பட ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சிபிஐ விசாரணை நடத்திய வழக்கில், தமிழக அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.
தண்டனை குறைப்பு அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் பயன்படுத்திய பின், தமிழக அரசு இரண்டாவது முறையாக அரசியல் சாசன அதிகாரத்தை பயன்படுத்த முடியாது என்று கூறி, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதன்படி, ராஜீவ் கொலையாளிகள் விடுதலை நிறுத்தி வைக்கப்பட்டது.
நளினி மனு விசாரணை
மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி, நளினி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுக்கள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் ஆஜராகி, ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஆயுள் கைதிகள் ஏழு பேரை தமிழக அரசு விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்தார். சிபிஐ விசாரிக்கும் வழக்கில் மாநில அரசு முடிவெடுக்க முடியாது என்ற வாதத்தையும் முன்வைத்தார்.
இதுகுறித்து மாநில அரசுகள் வரும் 18-ம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்த விசாரணை இம்மாதம் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதுவரை, எந்த மாநில அரசும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்கக் கூடாது என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
No comments:
Post a Comment