மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல் ஆகிய தொழிற்படிப்புகள் போல வேளாண் ஆராய்ச்சி படிப்புக்கும் இன்று முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இந்தப் படிப்பில் படிக்கவும் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மேற்கூறிய படிப்புகளுக்கு அங்கீகார கவுன்சில்கள் செயல்பட்டு வருவது போல, வேளாண் ஆராய்ச்சி படிப்புக்கும் தனி கவுன்சில் உள்ளது. அது, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில்.
மத்திய அரசின் வேளாண் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி பெற்ற அமைப்பு இது. இதற்கு முன்னர் இக்குழுமம், உயர் அதிகாரம் படைத்த ஆய்வுக் குழுமமாகவே இருந்தது. 1929-ம் ஆண்டில் சமூகப் பதிவுச் சட்டத்தின் கீழ் இது பதிவு செய்யப்பட்டு செயல்படத் தொடங்கியது. வேளாண் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்துச் செயல்படுவதற்கான தலைமை அமைப்பாகத் தற்போது இந்த அமைப்பு இயங்கி வருகிறது. இதன் தலைமையகம் டெல்லியில் உள்ளது. இதன் தலைவர் மத்திய வேளாண் துறை அமைச்சர்.
நாடு முழுவதும் 49 வேளாண் ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள், 4 நிகர் நிலை பல்கலைக்கழங்கள், 17 தேசிய ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இக்கவுன்சிலின் கீழ் தோட்டக்கலை, மீன்வளம், பால்வளம் மற்றும் விலங்கியல் துறைகள் செயல்படுகின்றன. இந்த துறைகளை ஒருங்கிணைக்கும் அமைப்பாக இது செயல்படுகிறது.
அகில இந்திய அளவில் வேளாண் கல்வி நிறுவனங்களில் உள்ள 15 சதவீத இடங்களைப் பூர்த்தி செய்வதற்கான அகில இந்திய வேளாண் நுழைவுத் தேர்வை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலே நடத்துகிறது. இக்கவுன்சில் பற்றிய விவரங்களை www.icar.org.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment