இணையம் வருவதற்கு முன்பு மாணவர்கள் தங்களது படிப்புக்கான புத்தகங்களையும் கலைக் களஞ்சியங்களையும் பெற அரசு நூலகங்களை மட்டுமே நம்பிக் கிடந்தார்கள். ஆனால், இன்று அந்த நிலையை இணையம் மாற்றியிருக்கிறது. அதிலும் குறிப்பாக விக்கிபீடியா எனும் இணையக் கலைக்களஞ்சியம் அறிவைத் தேடுவோருக்கான அற்புத வாய்ப்பாக உள்ளது.
விக்கிபீடியா என்பது பல மொழிகளில் தொகுக்கப்பட்டு வருகிற இணையக் கலைக்களஞ்சியம். ஹவாய் மொழியில் விக்கி என்றால் ‘விரைவு’ என அர்த்தம்.இது ஜிம்மி வேல்ஸ், லாரி சாங்கர் எனும் அமெரிக்கர்களால் ஜனவரி 15, 2001-ல் ஆரம்பிக்கப்பட்டது.
சரியான முறையில் பயன்படுத்தினால் மாணவர்கள் அறிவுத் தேடலுக்கு மிகவும் பயன்படக்கூடியது இந்தக் கலைக்களஞ்சியம்.
தற்போது விக்கிபீடியா 285 மொழிகளில் செயல்படுகிறது. 3 கோடியே 25 லட்சம் கட்டுரைகள் உள்ளன. கட்டுரைகளின் உலகளாவிய தரவரிசையில் ஆறாம் இடத்தில் உள்ளது. 36 கோடியே 50 லட்சம் வாசகர்கள் உலக அளவில் உள்ளனர்.
உலகெங்கும் சேவை மனப்பான்மை யோடு உள்ள லட்சக்கணக்கான தன்னார்வலர் களால் கூட்டாக இந்தக் கட்டுரைகள் எழுதப்படுகின்றன. விக்கிபீடியாவில் மேலும் மேலும் புதிய புதிய தகவல்களைக் கொண்டுவந்து சேர்ப்பதே கடமையாகக் கொண்ட கிட்டத்தட்ட ஒரு லட்சம் முனைப்பான பங்களிப்பாளர்களும் இதில் செயல்படுகின்றனர்.
உலகம் முழுவதும் 3கோடியே 50 லட்சம் பேர் பயனர்களாக இதில் பதிவு செய்துள்ளனர். இதில் ஒரு பயனராக நீங்கள் சேர்ந்தும் பயன்பெறலாம். சேராமலும் பயன்பெறலாம்.
யார் வேண்டுமானாலும் இதற்கு உள்ளே நுழைந்து பல தலைப்புகளில் கட்டுரைகளை உருவாக்கலாம்; சேர்க்கலாம்; நீக்கலாம் என்று அறிவிக்கப் பட்டிருந்தாலும் அதற்குச் சில வழி முறைகள் இருக்கவே செய்கின்றன. ஒரு கட்டுரையில் சேர்க்கப்படும் கருத்துக்கு ஆதாரங்கள் இணைக்கப்பட்டால்தான் அது நம்பிக்கைக்குரியதாக மாற்றப்படுகிறது. போதுமான ஆதாரங்கள் இல்லாத கருத்துகளைச் சேர்க்கும்போது அவற்றுக்கு ஆதாரங்கள் தேவை என்ற அறிவிப்பு அதில் பதியப்படுகிறது. அந்த கருத்தைத் திருத்த விரும்புகிற யாரும் தகுந்த ஆதாரங்களோடு அதைச் செய்யலாம். எது சரியான கருத்து என்பதற்கான விவாதமும் கட்டுரைகளை ஒட்டிப் பதிவு செய்யப்பட்ட முறையில் நடைபெறுகிறது.
அடிக்கடி தாக்குதலுக்குள்ளாகும் கட்டுரைகளுக்கு அரைப் பாதுகாப்பு வழங்கப்பட்டு, குறிப்பிட்ட பயனர்கள் மாத்திரமே தொகுக்கும் வகையில் பாதுகாக்கப்படுகின்றன. குறிப்பிடத்தக்க, சர்ச்சைக்குரிய கட்டுரைகள் பூட்டப்பட்டு நிர்வாகிகள் மட்டுமே மாற்றங்களை மேற்கொள்ளும் வகையில் காக்கப்படுகின்றன.
கட்டுரைகளில் முன்வைக்கப்படும் விவாதங்களுக்கும் விவரங்களுக்கும் எத்தகைய ஆவணங்கள் சான்றாகத் தரப்பட்டுள்ளன என்பதைக் கூர்ந்து கவனிக்கிற ஆற்றல் உங்களுக்கு வேண்டும். நீர் நீக்கிப் பால் அருந்தும் அன்னப் பறவையின் பக்குவம் உங்களுக்கு வந்துவிட்டால் விக்கிபீடியா உங்களின் அறிவுப் பசிக்குப் பெரும் விருந்து படைக்கும்.
ஆங்கில விக்கிபீடியாவில் தான் அதிகபட்சமாக 45 லட்சத்துக்கும் அதிகமான கட்டுரைகள் இருக்கின்றன.தமிழ் மட்டுமே தெரிந்தவர்களும் விக்கிபீடியாவைப் பயன்படுத்தலாம். தமிழ் விக்கிபீடியா செப்டம்பர் 2003-ல் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அதில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன.
நாம் தேடுகிற எந்த ஒரு விஷயமும் நாம் கேட்டதும் கணினித் திரையில் உடனே காணக்கூடியதாக விக்கிபீடியா ஆக்கி உள்ளது.
விக்கிபீடியா ஒரு தனி வழங்கியில் (சர்வரில்) 2004 வரை இயங்கிவந்தது. தற்போது 100 மேற்பட்ட வழங்கிகள், உலகின் நான்கு பகுதிகளில் விக்கி பீடியாவை வழங்குகின்றன.
வெறும் கட்டுரைகள் மட்டுமல்ல. இதில் விக்சனரி என்ற பெயரில் அகராதி உள்ளது. விக்கி நூல்கள் எனும் பகுதியில் இலவச மின் நூல்களும் கையேடுகளும் உள்ளன. விக்கி மூலம் என்ற பெயரில் ஒரு நூலகம் உள்ளது. விக்கி மேற்கோள் எனும் பகுதியில் புகழ் பெற்ற தலைவர்களின் மேற்கோள்கள் உள்ளன. விக்கி பல்கலைக்கழகம் எனும் பகுதியில் ஒரு இணையப் பல்கலைக்கழகம் உள்ளது. அதில் ஏராளமான கல்வி நூல்களை நாம் பார்க்கலாம்.
சரியாகப் பயன்படுத்தும் புரிதலும், அனுபவமும் பெற்றவருக்கு விக்கிபீடியா அள்ள அள்ள அதிகரிக்கும் அட்சய பாத்திரமே.
No comments:
Post a Comment