ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடி நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டதில் தமிழக வீரர்களின் பங்கு கணிசமானது.
தமிழகத்தில் சுதந்திரத் தீயை மக்கள் மத்தியில் வளர்த்த வீரச் செம்மல்களின் பட்டியலை எடுத்துக் கொண்டால் நீட்டிக் கொண்டே போகலாம்.
அத்தகையோர் வரிசையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு புரட்சியாளரும், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்று பின்னர் தன்னையும் சுட்டுக் கொண்டு மரணம் அடைந்தவர் வாஞ்சிநாதன். இவர் தமிழகத்தின் பகத்சிங் என அழைக்கப்பட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை. சொல்லப் போனால், பகத்சிங்கின் முன்னோடி என்று கூறலாம்.
பிறப்பு: திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில், ஜூன்.17.1886 ஆம் ஆண்டு ரகுபதி ஐயர், ருக்மணி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் வஞ்சிநாதன். இவரது இயற்பெயர் சங்கரன். எனினும் இவர் வாஞ்சி என்றே அழைக்கப்பட்டார்.
கல்வி: வாஞ்சி செங்கோட்டையில் பள்ளிப் படிப்பை முடித்ததும், திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பி.ஏ. படித்தார். கல்லூரியில் படிக்கும் போதே முன்னீர் பள்ளம் சீதாராமய்யரின் மூத்த புதல்வியான பொன்னம்மாளை மணம் முடித்தார்.
பணி: கல்லூரி படிப்பு முடிந்ததும் புனலூர் வனத்துறையில் பணியாற்றினார்.
புரட்சிப் பாதையில் தீவிரம்: இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாதிகளுக்கு பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரியில் உதவிகள் கிடைத்தன. அங்குள்ள தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டார். காலப்போக்கில் தனது சுதந்திர தாகத்திற்கு இடையூறாக இருந்த அரசுப் பணியை உதறித் தள்ளி விட்டு முழு மூச்சாக புரட்சிப் பாதையில் தீவிரமானார். நண்பர்களுடன், ஆங்கிலேயே ஆட்சியை ஒழித்துக்கட்ட ரகசியக் கூட்டங்களைக் கூட்டினார். நண்பர்களையும் தீவிரமடையச் செய்தார்.
ஆங்கிலேய அரசாங்கத்தை எதிர்த்து நாடெங்கும் நடத்தப்பட்ட போராட்டம் உச்சகட்ட நிலையிலிருந்தது. வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோரின் மேடைப் பேச்சுக்களால் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமான வாஞ்சிநாதன், புதுவையில் புரட்சியாளர் வ.வே.சு. ஐயர் வீட்டில் தங்கினார். அங்கு மகாகவி பாரதியாரின் சந்திப்பு அவருக்கு ஊக்கத்தை தந்தது.
எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரியின் இரத்தப் புரட்சி பிரமாணங்களினால் வாஞ்சியின் மனம் மேலும் தீவிரம் அடைந்தது.
ஆஷ்துரை கொலை: தான் மிகவும் மதித்துப் போற்றி வந்த வ.உ.சி., சுப்ரமணிய சிவா ஆகியோரை, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ராபர்ட் வில்லியம் டி எஸ்கார்ட் ஆஷ் துரை கைது செய்து சிறையில் தள்ளினார்.
இச்சம்பவம் வாஞ்சியின் மனதை புரட்டிப் போட்டது. தாங்க முடியாத துயரமடைந்த அவர், இதற்குக் காரணமான ஆஷ் துரையை பழிவாங்க உறுதி பூண்டார். அவரை கொலை செய்வதற்கான நாளையும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
சரியான தருணம் பார்த்து காத்திருந்த வாஞ்சி, 1911 ஜூன் 17 ஆம் தேதி காலை 10.45 மணிக்கு மணியாச்சி புகைவண்டி சந்திப்பில் திருநெல்வேலி ஆட்சியர் ஆஷ்துரை தனது மனைவியோடு கொடைக்கானலுக்குச் செல்ல வண்டியின் முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்திருந்தார். அந்நேரம் வெளியில் உலாவிக் கொண்டிருந்த வாஞ்சி, புகைவண்டியில் அமர்ந்திருந்த ஆட்சியர் ஆஷ்துரையைத் தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.
சம்பவ இடத்தில் ஆங்கிலேய அதிகாரிகள் வாஞ்சியை சூழ்ந்து கொண்டனர். அப்போது எதிரிகளின் கையில் சிக்கி உயிரை விடுவதைவிட, தானே தன் உயிரைப் போக்கிக் கொள்வது மேல் என்று கருதிய வாஞ்சி, நொடிப் பொழுதையும் வீணடிக்காமல் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு, வீர மரணம் அடைந்தார்.
வாஞ்சியின் பிரேத பரிசோதனை விசாரணையில், அவர் போட்டிருந்த சட்டையின் உள் பையிலிருந்த துண்டுக் கடிதத்தில் ஆட்சியரை சுட்டுக் கொன்றதற்கான காரணமும், சென்னையில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் தன்னுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டு ஆர். வாஞ்சி ஐயர், செங்கோட்டை என்றெழுதி இருந்தது.
திருநெல்வேலி ஆட்சியர் ஆஷ் கொலை வழக்கு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியமானதாகும்.
இளம் வயதிலேயே தான் கொண்ட லட்சியத்திற்காக தனக்குத்தானே முடிவுரை எழுதிக் கொண்டார் வாஞ்சிநாதன். ஆனால், தமிழகத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களிடம் உறங்கிக் கொண்டிருந்த சுதந்திர வேட்கை, அன்று தனது துயிலைக் கலைத்தது.
அரசு கெளரவிப்பு: மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி மணியாச்சி என்று பெயரிட வேண்டுமென்று பாராளுமன்றத்தில் காங்கிரஸ் பிரமுகர் குமரி அனந்தன் வலியுறுத்தினார்.
இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி வாஞ்சி மரணம் அடைந்த மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி-மணியாச்சி ரயில் சந்திப்பு என்று பெயர் சூட்டினார்.
வாஞ்சி பிறந்த செங்கோட்டையில் அவருக்கு வெண்கலத் திருவுருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது. மேலும், செங்கோட்டையில் டிசம்பர் 23,2013 ஆம் தேதி ஒரு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment