1. இந்தியாவில் பிறந்த சஞ்சய் ராஜாராம் 2014 ம் ஆண்டுக்கான உலக உணவு விருது பெற்றுள்ளார். இவர் எந்த நாட்டின் குடிமகன்?
அ) இந்தியா
ஆ) இங்கிலாந்து
இ) அமெரிக்கா
ஈ) மெக்ஸிகோ
2. இங்கிலாந்தில் உள்ள கிழக்கிந்திய கம்பனி கிரிக்கெட் வீரர் டெண்டுல்கரின் சாதனையைப் பெருமைப்படுத்தும் வகையில் சமீபத்தில் எத்தனை ‘லீகல் டெண்டர்’ தங்க நாணயங்களை வெளியிட்டுள்ளது?
அ) 100
ஆ) 200
இ) 110
ஈ) 210
3. சமீபத்தில் ஒட்டகத்தை மாநில விலங்காக அறிவித்துள்ள இந்திய மாநிலம் எது?
அ) மத்தியப் பிரதேசம்
ஆ) ராஜஸ்தான்
இ) குஜராத்
ஈ) ஒடிசா
4. அமெரிக்க-இந்திய விஞ்ஞானி அக்ஹௌரி சின்ஹாவின் பெயர் அண்டார்டிகாவில் உள்ள மலை ஒன்றுக்குச் சூட்டப்பட்டுள்ளது. அவர் எந்தத் துறையில் பங்களிப்பு செய்துள்ளார்?
அ) இயற்பியல்
ஆ) வேதியியல்
இ) உயிரியல்
ஈ) தாவரவியல்
1. ஈ) மெக்ஸிகோ. சஞ்சய் ராஜாராம் 1943-ம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறந்தார். கோதுமை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் சஞ்சய் ராஜாராம் மெக்ஸிகோ நாட்டின் குடியுரிமை பெற்றுள்ளார். இவர் 480 விதமான வீரிய ரக கோதுமைகளைக் கண்டறிந்துள்ளார். இவை ஆறு கண்டங்களில் உள்ள 51 நாடுகளில் அறிமுகமாகியுள்ளன. பிரேசில் நாட்டின் அமிலத் தன்மையான நிலத்தில் அலுமினியத்தைத் தாங்கிக்கொள்ளும் கோதுமை ரகத்தை உருவாக்கியது இவரது முக்கியமான பங்களிப்பாகக் கொள்ளப்படுகிறது. பசுமைப் புரட்சிக்குப் பின்னான 25 ஆண்டுகளில் உலகம் முழுவதிலும் 200 மில்லியன் டன்னுக்கும் அதிகமாகக் கோதுமை உற்பத்தி ஆவதற்கு இவர் பங்களித்துள்ளார். கோதுமைப் பயிரின் வளர்ச்சிக்கு இவர் தந்த பங்களிப்பு காரணமாகவே இவர் 2014-ம் ஆண்டுக்கான உலக உணவு விருதுக்குத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். இந்த விருது வரும் அக்டோபர் மாதம் இவருக்கு வழங்கப்பட உள்ளது.
2. ஈ) 210. டெண்டுல்கரின் 24 ஆண்டுகள் சாதனையைப் பெருமைப்படுத்தும் வகையில் கிழக்கிந்திய கம்பனி 24 கேரட் தங்கத்தில் மொத்தம் 210 லீகல் டெண்டர் தங்க நாணயங்களை வெளி யிட்டுள்ளது. லீகல் டெண்டர் தங்க நாணயங்கள் என்பது வரலாற்றுச் சாதனை புரிந்த குறிப்பிட்ட தனிநபர்களைக் கௌரவப்படுத்தும் வகையில் வெளியிடப்படுபவை. உயர்தர பாலீஷ் செய்யப்பட்டு இவை வெளியிடப்படுகின்றன. 200 கிராம் எடையுள்ள இந்தத் தங்க நாணயம் ஒன்றின் மதிப்பு 12 ஆயிரம் பவுண்டுகள், அதாவது ரூ. 12,28,950. இந்தத் தங்க நாணயத்தின் ஒரு பக்கத்தில் மும்பையில் உள்ள கேட் வே ஆஃப் இந்தியாவின் படமும், 200வது டெஸ்ட் மேட்ச் என்னும் வாசகமும், டெண்டுல்கர் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட், ஹெல்மெட் ஆகிய படங்களும் 200-ம் டெஸ்ட் போட்டியின் போது அவர் அணிந்திருந்த டி ஷர்ட்டில் இடம்பெற்றிருந்த 187 என்னும் எண்ணும் பொறிக்கப்பட்டுள்ளன. மறு பக்கத்தில் இங்கிலாந்து ராணி எலிஸபெத்தின் படம் பொறிக்கப் பட்டுள்ளது. இந்த நாணயத்தை பாரீஸிலுள்ள மோன்னெய் டீ பாரிஸ் நிறுவனத்தைச் சார்ந்த ஜாக்குயின் ஜிம்மெனஸ் என்பவர் வடிவமைத்துள்ளார்.
3. ஆ) ராஜஸ்தான். ஜூன் 30 அன்று ஒட்டகத்தை மாநில விலங்காக ராஜஸ்தான் அறிவித்தது. ஒட்டகங்களின் எண்ணிக்கையைப் பாதுகாக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒட்டகம் ராஜஸ்தான் மாநிலத்தில் பலருக்கு வாழ்வாதாரம் தரும் விலங்காக உள்ளது. ஆனால் இறைச்சிக்காகக் கொல்லப்படுவதும் பிற மாநிலங்களுக்குக் கடத்தப் படுவதும் அதிகரித்திருப்பதால் ராஜஸ்தானில் ஒட்டகங்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. 1997-ல் ஒட்டகங்களின் எண்ணிக்கை 6,68,000 ஆக இருந்தது. இது குறைந்து 2003-ல் 4,98,000 ஆகிவிட்டது.
4. இ) உயிரியல். அண்டார்டிகாவில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கை தொடர்பான முக்கியமான விவரங் களைச் சேகரிக்க இவரது ஆய்வு உதவியுள்ளது. அமெரிக்காவில் உள்ள மினசோட்டா பல்கலைக்கழகத்தில் மரபியல், செல் உயிரியல் மேம்பாட்டுத் துறையில் இவர் பேராசிரியராக உள்ளார். 1971-72 ஆண்டுகளில் அண்டார்டிகாவில் இவர் நடத்திய தேடல்களின் மூலம் முக்கிய விவரங்களைத் திரட்டியுள்ளார். 25 ஆண்டுகளுக்கும் மேலாகக் கல்வித் துறையில் இருக்கும் இவர் இதுவரை 100க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவரது பெயர் சூட்டப்பட்டிருக்கும் சின்ஹா மலையை கூகுளில் பார்க்க முடியும்.
No comments:
Post a Comment