1998-ம் ஆண்டு வெங்காய விலை ஏற்றத்தினால் டெல்லி தேர்தலில் தோற்ற பிஜேபி, சென்ற மாதம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவோம் என்ற முழக்கத்துடன் மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத் துவதற்கான கொள்கைகளும், திட்டங்களும் பட்ஜெட் 2014-15-ல் இருக்குமா?
நேற்று, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த பத்து ஆண்டுகளில் இருவேறு திசையில் சென்றதை பார்த்தோம். முதல் ஐந்தாண்டுகளில் வளர்ச்சி உயர்ந்தும், அடுத்த ஐந்தாண்டுகளில் வளர்ச்சி குறைந்தும் காணப்பட்டது. இதற்கு நேர்மாறாக பணவீக்கம் இருந்தது. 2003-08 ஆகிய ஐந்தாண்டுகளில் வளர்ச்சி 8.4% இருந்தது, பணவீக்கமானது 5.5% இருந்தது; இதற்கு மாறாக 2008-13 ஆகிய ஐந்தாண்டுகளில் வளர்ச்சி 6.7% ஆகக் குறைந்து, பணவீக்கம் 7.5%ஆக உயர்ந்தது. உற்பத்தி வளர்ச்சி அதிகமாக இருந்தபோது குறைந்த பணவீக்கமும், உற்பத்தி வளர்ச்சி குறைவாக இருந்த போது அதிக பணவீக்கமும் இருந்துள்ளது. கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் மொத்த வியாபார விலையேற்றதை விட நுகர்வோர் விலையேற்றம் அதிகமாகவும், அதைவிட உணவுப் பொருட்கள் விலையேற்றம் அதிகமாகவும் இருந்தது. இந்த போக்கு இனிமேலும் தொடரும்.
விலையேற்றத்திற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று பொருளின் தேவை அதிகரிப்பது, மற்றொன்று, பொருளின் உற்பத்தி/அளிப்பு குறைவது. பொருளாதாரத்தில் தேவை அதிகரிப்பதற்கு ஒன்று பண அளிப்பு அதிகமாகி இருக்கவேண்டும், அல்லது மக்களின் வருவாய் பெருகியிருக்கவேண்டும். இந்த வகை தேவையை கட்டுபடுத்த ரிசர்வ் வங்கி பண அளிப்பை குறைத்து, வட்டிவிகிதத்தை உயர்த்தும். கடந்த சில ஆண்டுகளாக இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. இருந்தாலும் பணவீக்கம் குறைந்த பாடில்லை. மாறாக வட்டி விகிதம் உயர்ந்து முதலீடுகள் குறைந்து உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.
ஆனால் உற்பத்தி குறைந் திருக்கிறது, குறிப்பாக விவசாய உற்பத்தி குறைந்திருக்கிறது என்பது தெளிவு, கூடவே தொழில் உற்பத்தியும் குறைந்துள்ளது. எனவே தற்போதுள்ள பணவீக்கத்திற்கு உற்பத்தி சுணக்கம் தான் காரணம் என்று நிச்சயமாக சொல்ல முடியும். இதுமட்டுமல்லாமல், உணவு தானியங்களின் ஆதார விலையை ஆண்டுதோறும் உயர்த்தி, பெரிய அளவில் உணவு தானியங்களை அரசு கிடங்குகளில் சேகரித்து, வெளிச்சந்தை விலைகளை உயர்த்தி உள்ளன. இதுவும் உணவு விலையேற்றத்துக்கு முக்கிய காரணம் என்று கூறுகின்றனர்.
உணவு விலையேற்றத்திற்கு மற்றொரு காரணமும் உண்டு. இந்திய உணவு தானியங்களின் உற்பத்தியை உயர்த்தியதே தவிர, இப்போது மக்களால் அதிகம் நுகரப்படும் பழங்கள், காய்கள், இறைச்சி, பால் போன்றவற்றின் உற்பத்தியை உயர்த்தாமல், அவற்றின் விலைகளை வேகமாக உயர்ந்ததும் முக்கிய காரணம்.
உற்பத்தியை உயர்த்த வட்டி விகிதத்தை குறைத்தால் மட்டும் போதாது, முதலீட்டை உயர்த்த, விவசாய உற்பத்தியை உயர்த்த நடவடிக்கைகள் தேவை. எல் நினோ தாக்கம் இருப்பதால், உணவு உற்பத்தி குறையும், இதனால் உணவு விலையேற்றம் பன்மடங்காகும். இப்படி பணவீக்கத்தை தொடர்ந்து அதிக உயரத்திற்கு எடுத்தும் செல்லும் சூழல் இருக்க, இப்போது பெட்ரோல், டீசல், எரிவாயு, மண்ணெண்ணெய் விலைகள் உயர்த்தப்படுகின்றன. பணவீக்கம் உடனடியாக குறையும் வாய்ப்புகள் அரிதாகிவிட்டன. பணவீக்கம் உற்பத்தி குறைவினால் ஏற்பட்டால் அதனை குறுகியக் காலத்தில் சரி செய்ய முடியாது. உற்பத்தி என்பது நீண்ட காலம் பிடிக்கும் செயல்பாடு.
இது தெரிந்தும், ஆட்சிக்கு வந்தால் பணவீக்கத்தை உடனடியாக குறைப்போம் என்று அரசியல் கட்சிகளும் நம்மிடம் வாக்கு கேட்கின்றன, நாமும் கொடுக்கிறோம், பிரச்சினைக்கு உடனடி தீர்வுதான் இல்லை. ஏற்றுமதியை தடுப்பார்கள், உள்நாட்டில் பொருள் அளிப்பு உயர்ந்து விலை குறையும் என்று, இறக்குமதியை ஊக்குவிப்பார்கள், பதுக்கலை ஒழிப்போம் என்று கோஷம் போடுவார்கள், ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவர், ஆனால், பணவீக்கம் உயர்ந்துகொண்டே போகும். பட்ஜெட்டில் என்ன மாயாஜாலம் நடக்கிறது என்பதை பார்ப்போம்.
No comments:
Post a Comment