பாய்மரக் கப்பல் என்று சொன்னால் உங்கள் ஞாபகத்துக்கு வருவது என்ன? முக்கோண அளவில் துணி பறப்பதும். அலையில் ஆடிஆடி கப்பல் அசைந்து வருவதும் ஞாபகத்துக்கு வரும். இது சாதாரண பாய்மரக் கப்பல். ஆனால் மிகப் பெரிய பாய்மரக் கப்பல்கள் உலகில் இருப்பது தெரியுமா? வின்ட் சர்ப் (Wind Surf), க்ளப் மெட் 2 (Club Med 2) என்று இரண்டு மிகப்பெரிய பாய்மரக் கப்பல்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இந்த இரண்டுமே பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவை. 1989-ல் க்ளப் மெட் 1 என்ற கப்பல் தயாரானது. இதைத் தொடர்ந்து 1996-ல் க்ளப் மெட் 2 என்னும் பெயரில் மற்றொரு கப்பல் தயாரானது. இதில் க்ளப் மெட் 2 அதே பெயரில் பயணிகள் கப்பலாகத் தொடர்ந்து பயணிக்கிறது. ஆனால் க்ளப் மெட் 1 என்ற கப்பல் 1998-ல் வின்ட்ஸ்டார் பயணிகள் கப்பல் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. அதன் பின்னர் இது வின்ட் சர்ப் என்னும் பெயரில் இயங்குகிறது. இந்த இரண்டு பயணிகள் கப்பல்களும் உலகின் நீளமான பாய்மரக் கப்பல்கள். புழக்கத்தில் உள்ள இந்தக் கப்பல்கள் உலகின் நீளமான பாய்மரக் கப்பல்கள் என கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளன.
க்ளப் மெட் 2 கப்பலின் நீளம் 187 மீட்டர் (613 அடி). வின்ட்ஸ்டார் கப்பலின் நீளம் 194 மீட்டர். அதாவது சென்னையில் உள்ள எல்.ஐ.சி. பில்டிங்கைவிட 3 மடங்குக்கு மேல் பெரியது. இவற்றில் 5 அலுமினியக் கொடிக்கம்பங்கள் உள்ளன. இதில் 2,800 சதுர மீட்டர் பரப்பு கொண்ட பாலியெஸ்டர் பாய்கள் உள்ளன. இந்தப் பாய்மரக் கப்பல்களை மோட்டாரில் மட்டுமே இயக்க முடியும். கம்ப்யூட்டர் உதவியுடன் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். ஒவ்வொரு கப்பலிலும் தலா 400 பேர் பயணம் செய்யலாம்.
வின்ட் சர்ப் கப்பல் 1990-ல் பிரான்ஸில் முதலில் பரிசோதித்து பார்க்கப்பட்டது. கப்பலில் எட்டு தளங்கள் உள்ளன. இதன் உயரம் 80 மீட்டர். 1998 வரை பிரான்ஸில் உள்ள வாலிஸ் மற்றும் ஃபுடுனா தீவுப் பகுதிகளில் மட்டுமே இது இயக்கப்பட்டது. பின்னர் வின்ட்ஸ்டார் நிறுவனத்திற்கு விற்கப்பட்ட பின்னர் பகாமஸின் தலைநகரமான நஸ்ஸௌ வரை இது இயங்கத் தொடங்கியது.
வின்ட் சர்ப் கப்பலை கட்டிய அதே நிறுவனம்தான் க்ளப் மெட் 2 கப்பலையும் உருவாக்கியது. இதுவும் வாலிஸ் மற்றும் ஃபுடுனாவில் தான் பதிவுசெய்யப்பட்டது. இது மத்திய தரைக்கடலிலும் அட்ரியாடி தீவுக்கும் பயணப்படும். குளிர் காலத்தில் கரிபியன் கடலுக்கும் பயணம் செல்லும். இந்தக் கப்பலின் வேகம் 10 முதல் 15 நாட்டிகல் மைல்.
No comments:
Post a Comment