உங்கள் கையெழுத்து அழகாக இல்லையே என்று நீங்கள் வருத்தப்பட்டதுண்டா? மகாத்மா காந்திஜிக்கும் தன் கையெழுத்து அழகாக இல்லையே என்ற குறை இருந்ததாம். அதற்காகப் பலமுறை வருத்தப்பட்டதுண்டாம். தென் ஆப்பிரிக்கா செல்லும் வரை கையெழுத்து குறித்தோ, அது படிப்பின் ஒரு பகுதியென்றோ என அவர் எண்ணியது இல்லை. தென் ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்த வக்கீல்கள் அழகாக எழுதுவதைக் கண்டதும் காந்திஜிக்கு இப்படி ஒரு எண்ணம் வந்திருக்கிறது.
இதுபற்றி காந்திஜி என்ன சொன்னார் தெரியுமா?
“என் கையெழுத்தைக் கண்டு எனக்கு வெட்கமாகிவிட்டது. அவர்களின் கையெழுத்து அத்தனை அழகாக இருந்தது. தொடக்கத்திலேயே நாமும் நம் கையெழுத்தை அழகாக எழுதப் பழகிக் கொள்ளவில்லையே என்று வருத்தப்பட்டேன். கையெழுத்தைத் திருத்த முயன்றேன். ஆனால் காலம் கடந்துவிட்டது. என்னுடைய இந்த உதாரணத்தைக் கண்டாவது மற்றவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மோசமான கையெழுத்து அரைகுறைப் படிப்புக்கு அடையாளம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கையெழுத்தும்கூடப் படிப்பின் ஒரு பகுதிதான் என்று உணர வேண்டும்” என்று கூறியிருக்கிறார் காந்திஜி.
அப்படியென்றால் கையெழுத்தை எப்படிச் சரி செய்வது? அதற்கும் காந்திஜி வழி சொல்லியிருக்கிறார்.
“இந்தப் பிரச்சினையைத் தீர்க்கக் குழந்தைகள் முதலில் பூ, பறவை போன்ற ஓவியங்களை வரைய வேண்டும். இதைக் கற்றுக்கொண்ட பின்பு எழுத்துக்களை எழுத ஆரம்பித்தால், கையெழுத்து அழகாக அமையும்” என்று சொல்லியிருக்கிறார் காந்திஜி.
ஆகவே, கையெழுத்தை அழகாக எழுதுங்கள். இல்லையென்றால் எழுதப் பழகுங்கள்.
No comments:
Post a Comment