முதலாம் உலகப் போர் நூற்றாண்டில் நமக்குத் தெரியாத சில தகவல்களை பி.பி.சி. தருகிறது…
உலகப் போர் என்றாலே ஐரோப்பிய நாடுகளின் போர்க்கள நெடுங்குழிகளில் நடந்த ரத்தக்களரிகள்தான் நம் நினைவுக்கு வரும். அதுதான் உண்மையும். இதுதவிர, உலகப் போர்குறித்து நமக்குத் தெரியாத எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. உலகப் போர் சீனா வரை ஊடுருவியது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆசியா, வடக்கு அமெரிக்கா, கரீபியத் தீவுகள், ஆஸ்திரேலியேசியா, ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளிலிருந்தும் வந்த வீரர்கள் இந்தப் போரில் ஈடுபட்டது உங்களுக்குத் தெரியுமா?
முதலாம் உலகப் போர் தொடர்பாக நீங்கள் அறிந்திராத, ஆச்சரியமளிக்கும் 12 தகவல்களை பி.பி.சி. வெளியிட்டிருக்கிறது.
1. பிரான்ஸில் வெடித்த குண்டுச் சத்தம் லண்டன் வரை கேட்டது
போர்க்களத்தின் நெடுங்குழிகளிலும் சகதியிலும் மூர்க்கமாகப் போர் நடந்துகொண்டிருந்தபோது, போர் வீரர்களின் கால்களுக்கு அடியில் வேறு வகையான போர் ஒன்று நடந்துகொண்டிருந்தது. கண்ணிவெடி புதைப்பவர்களின் குழு ஒன்று, எதிரிகளின் நெடுங்குழிகளில் கண்ணிவெடிகளைப் புதைத்து வைப்பதற்காக 100 அடி வரை குழி தோண்டியது. பெல்ஜியத்தில் உள்ள மெஸேன் ரிட்ஜ் என்ற பகுதியில் 19 சுரங்க வழிகளில் 4,08,233 கிலோ எடையுள்ள வெடிபொருட்கள் ஒரே நேரத்தில் வெடிக்கச் செய்யப்பட்டன. இதனால், ஜெர்மனியின் முன்வரிசைப் படையினரில் பெரும்பாலானோர் இறந்துபோனார்கள். 225 கிலோ மீட்டர் தொலைவில், பிரிட்டிஷ் பிரதமரின் இல்லம் இருந்த டௌனிங் தெரு வரை வெடிச் சத்தம் கேட்டிருக்கிறது.
2. மரண தண்டனையை எதிர்கொண்ட பத்திரிகையாளர்கள்
போரின் நடப்புகள்குறித்துச் செய்தி சேகரிப்பதற்காகச் சில பத்திரிகையாளர்கள் தங்கள் உயிரையே பணயம் வைத்தனர். போரின் தொடக்கத்தில் அதிகார மட்டத்திலிருந்து தகவல்கள் கசிவதைத் தடுக்கும் வகையில் பத்திரிகையாளர்களுக்கு அரசாங்கங்கள் தடைவிதித்தன. ராணுவத் தலைமையைப் பொறுத்தவரை, போர் குறித்துச் செய்திகள் வெளியிடுவதென்பது எதிரிகளுக்கு உதவுவதே. எனவே, பிடிபடும் பத்திரிகையாளர்கள் மரண தண்டனையை எதிர்கொண்டார்கள்.
3. பிரிட்டிஷ் படையினருக்கு ஒவ்வொரு வாரமும் வந்த கடிதங்களின் எண்ணிக்கை: 1.2 கோடி
பிரிட்டனிலிருந்து அனுப்பப்பட்ட கடிதம் பிரான்ஸில் உள்ள போர்முனையை அடைவதற்கு எடுத்துக்கொண்ட காலம் வெறும் இரண்டு நாட்கள்தான் என்பது நமக்கு வியப்பளிக்கிறதல்லவா? இந்தக் கடிதங்களின் பயணம் தொடங்கிய இடம் ரீஜெண்ட் பார்க் என்ற பணியகம்தான். போர்முனையில் உள்ள நெடுங்குழிகளை எட்டும் முன் இந்த இடத்தில்தான் கடிதங்கள் வகைவகையாகப் பிரிக்கப்பட்டன. போர் முடிவதற்குள் 200 கோடி கடிதங்களும் 11 கோடியே 40 லட்சம் பொதிகளும் போர்முனையில் இருந்த பிரிட்டிஷ் வீரர்களுக்குப் பட்டுவாடா செய்யப்பட்டன.
4. போர் பூசிய மஞ்சள்
ஒரு தலைமுறை ஆண்கள் போருக்குச் சென்றுவிட்டதால், வேலைகளைச் செய்ய வேண்டிய ஆண்கள் இல்லாததாலும், வறுமையின் காரணமாகவும், அதுவரை ஆண்கள் மட்டுமே செய்துவந்த வேலைகளைச் செய்யப் பெண்களும் பணிக்கப்பட்டனர். மோசமான பணிச் சூழல்களிலும், அபாயகரமான வேதிப்பொருள்களைக் கையாள வேண்டிய நிலையிலும் பெண்கள் நீண்ட நேரம் வேலைபார்த்தார்கள். டி.என்.டி. வெடிமருந்து தொழிற்சாலைகளில் வேலை பார்த்த பெண்கள் ‘மஞ்சள் பறவைகள்' என்று அழைக்கப்பட்டனர். நச்சு மஞ்சள்காமாலை காரணமாக அவர்களுடைய தோலின் நிறம் மஞ்சளானதால் அவர்களுக்கு இந்தப் பெயர்.
5. சீரமைப்பு அறுவைச் சிகிச்சையைத் தந்தது முதல் உலகப் போர்
முதல் உலகப் போரில் பலருடைய முகங்களிலும் காயமேற்படுவதற்கு முக்கியக் காரணம் குண்டுச் சிதறல்கள்தான். தோட்டாக்கள் நேராகத் துளைத்துச் செல்பவை. ஆனால், குண்டுச் சிதறல்களில் வெளிப்பட்ட உலோகச்சில்லுகளோ முகத்தையே அலங்கோலமாகக் கிழிக்கக்கூடியவையாக இருந்தன. ஹேரல்டு கிலஸ் என்ற அறுவைச் சிகிச்சை மருத்துவர் இதையெல்லாம் பார்த்து அதிர்ச்சியுற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளில் இறங் கினார். இதன் விளைவாக, முகச்சீரமைப்புத் துறையின் முன்னோடித் தொழில் நுட்பங்களை அவர் கொண்டுவந்தார்.
6. போரின் முடிவில் அநாமதேயமாக இறந்துபோன வில்ஃப்ரெட் ஓவன்
வில்ஃப்ரெட் ஓவன், முதல் உலகப் போர் காலகட்டத்தைச் சேர்ந்த, தற்போது பிரபலமடைந்த கவிஞர்களில் ஒருவர். போர் முடிவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு போரில் அவர் மரணமடைந்தார். கருணை, பயங்கரம் ஆகிய இரண்டும் கலந்த ஒரு பார்வையைப் போர் மீது கொண்டிருந்த சிலரில் அவரும் ஒருவர். ஆனாலும், முதலாம் உலகப் போர்குறித்த மிகவும் அசலான பார்வை ஓவனுடையது என்பதை 1960-களில்தான் இலக்கிய முகாம்களைச் சேர்ந்தவர்கள் முடிவுசெய்தனர். அதன் விளைவாக, போர் தொடர்பான இரண்டு பெரும் கவிதைத் தொகுப்புகளை - பெருமளவில் ஓவனின் கவிதைகளைக் கொண்டு வெளியிட்டனர்.
7. பிரிட்டனின் மிக இளம் வீரருக்கு வயது 12
முதல் உலகப் போரின்போது தன்னுடைய வயது 12 என்பதை மறைத்து, பொய்யான வயதைச் சொல்லி சிட்னி லூயிஸ் என்னும் சிறுவன் ராணுவத்தில் சேர்ந்தான். ஆர்வத்தின் காரணமாக, பெரியவர்களுடன் சேர்ந்துகொண்டு போரிட்ட சிறுவர்களில் அவனும் ஒருவன். தேசப்பற்றினால் உந்தப்பட்டும், மந்தமான தினசரி வாழ்க்கையிலிருந்து தப்பிக்கவும்தான் அந்தக் காலத்துச் சிறுவர்கள் அப்படிச் செய்தார்கள்.
8. கிட்டத்தட்ட பிரிட்டனில் பொருளாதாரச் சரிவையே ஏற்படுத்திவிட்டது முதல் உலகப் போர்
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பொருளாதார வல்லரசாக இருந்தது பிரிட்டன். எந்த நாடும் எதிர்கொள்ளாத அளவுக்குப் பொருளாதார இழப்பை முதலாம் உலகப் போர் பிரிட்டனுக்கு ஏற்படுத்தியது. எடுத்துக்காட்டாக, 1918, செப்டம்பர் மாதத்தின் ஒரு நாளில் மட்டும் சுடப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளுக்குச் செலவான தொகை அப்போதைய மதிப்பில் 4 லட்சம் பவுண்டுகள். ஆக, மற்ற செலவுகளையெல்லாம் கற்பனை செய்துபாருங்கள்!
9. முதல் உலகப் போரின் நன்மைகளில் ஒன்று ரத்த வங்கிகள்
போரில் பலத்த காயமுற்ற வீரர்களுக்கு ரத்தம் செலுத்திச் சிகிச்சை அளிப்பதை பிரிட்டிஷ் ராணுவம் ஆரம்பித்துவைத்தது. ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு என்று நேரடியாகவே ரத்தப் பரிமாற்றம் செய்யப்பட்டது. அமெரிக்க மருத்துவர் ஆஸ்வால்டு ராபர்ட்சன்தான் முதல் ரத்த வங்கியை நிறுவினார். ரத்தம் உறைவதையும், வீணாகப்போவதையும் தடுப்பதற்கு சோடியம் சைட்ரேட்டைப் பயன்படுத்தினார். ஐஸ் கட்டிகளின் அரவணைப்பில் 28 நாட்கள் வரை ரத்தம் பாதுகாக்கப்பட்டு, உயிர் காக்கும் நடவடிக்கைகளின்போது பயன்படுத்தப்பட்டன.
10. கண்ணை ஏமாற்றிய கப்பல்கள்
போரின்போது உணவையும் ராணுவத் தளவாடங்களையும் சுமந்துவந்த கப்பல்களை எதிரிகளின் நீர்மூழ்கி ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பது அத்தியாவசியமாக இருந்தது. நார்மன் வில்கின்சன் என்ற ஓவியர் வித்தியாசமான ஒரு யோசனையை முன்வைத்தார். கண்ணைக் கூசவைப்பது போன்ற வடிவங் களாலும், ஒன்றுக்கொன்று தீவிரமாக வேறுபடும் வண்ணங்களாலும் கப்பலுக்கு ஒரு மாயத்தோற்றத்தைக் கொடுப்பது என்பதுதான் அவரது யோசனை. உருமறைப்பு என்பதற்கு நேரெதிர் இது. கண்ணைப் பறிக்கும் உருமறைப்பு என்று அதற்குப் பெயரிடலாம். கப்பல்களை மறைப்பதற்குப் பதிலாக எதிரிகளைக் குழப்புவதற்கு இந்த உத்தி பயன்பட்டது.
11. காப்பாற்றிய குழிகள்
முன்வரிசையில் நின்றுகொண்டு சுடுவது என்பது பிரிட்டிஷ் வீரர்களைப் பொறுத்தவரையில் அபூர்வமான ஒன்று. நீளமாகக் குழிகள் வெட்டி, அவற்றிலேயே அவர்கள் நடமாடினார்கள். இது பெரும்பாலும் ஆபத்தைத் தவிர்க்கத்தான்.
12. போர்முனைக்குச் செல்ல ராணுவத் தளபதிகளுக்குத் தடை
முதலாம் உலகப் போரைப் பற்றி வழக்கமாகச் சொல்லப்படும் உவமைகளுள் ஒன்று இது- கழுதைகளின் தலைமையில் சிங்கங்கள் போரிட்ட போர். போரில் நேரடியாகச் சண்டையிட்ட தளபதிகள் பெரும்பாலும் கொல்லப்பட்டதால் போர் முனைக்குச் செல்லத் தடைவிதிக்கப்பட்டது. தளபதி என்ற கௌரவத்தைப் போரில் ஏற்படும் வீர மரணத்துக்காக விட்டுக்கொடுக்கப் பலரும் தயாராக இல்லை என்றும் சொல்லலாம்.
நன்றி: பி.பி.சி., தொகுப்பு: ஆசை
No comments:
Post a Comment