1. பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்த போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவைத் தயாரித்த நாடு எது?
அ) இந்தியா
ஆ) ஜப்பான்
இ) அமெரிக்கா
ஈ) ரஷ்யா
2. போரின்போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த சர்வதேச உச்சி மாநாடு எந்த நாட்டில் நடத்தப்பட்டது?
அ) இங்கிலாந்து
ஆ) ஜெர்மனி
இ) இஸ்ரேல்
ஈ) நார்வே
3. சமீபத்தில் இந்திய சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
அ) மணீந்தர் சிங்
ஆ) துஷார் மேத்தா
இ) ரஞ்சித் குமார்
ஈ) எல். நாகேஸ்வர் ராவ்
4. இந்தியாவில் பெண்களின் பாதுகாப்புக்காக கௌரவி என்னும் பெயர் கொண்ட ஒன் ஸ்டாப் கிரைசி சென்டர் முதன்முதலில் எங்குத் தொடங்கப்பட்டுள்ளது?
அ) டெல்லி
ஆ) மும்பை
இ) கொல்கத்தா
ஈ) போபால்
விடைகள்:
1. ஈ) ரஷ்யா. நாட்டின் பெரிய போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யாவை 14.06.2014 அன்று பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்தக் கப்பலைத் தயாரித்த நாடு ரஷ்யா. இதன் விலை 15 ஆயிரம் கோடிக்கும் மேல்; நீளம் 284 மீட்டர்; அகலம் 60 மீட்டர். இது 22 தளங்களைக் கொண்டது. இதில் 1600 பேர் செல்ல முடியும். 45 நாட்களுக்குக் கடலிலேயே தங்கியிருக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 2013 நவம்பர் 16 அன்று கடற்படையில் இணைக்கப்பட்டது. சோதனைகளுக்குப் பின்னர் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
2. அ) இங்கிலாந்து. இந்த உச்சி மாநாடு லண்டன் நகரில் அமைந்துள்ள எக்ஸெல் லண்டன் மையத்தில் நடைபெற்றது. ஜூன் 10-13 ஆகிய நான்கு நாட்கள் இந்த மாநாடு நடத்தப்பட்டது. இம்மாநாட்டை ஹாலிவுட் நடிகை ஆஞ்சலினா ஜூலியும் இங்கிலாந்து வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹாக்கும் தொடங்கிவைத்தனர். போரால் பாதிக்கப்பட்ட பெண்களின் நல்வாழ்வுக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பாலியல் வன்முறை தொடர்பான சாட்சியங்களைப் பெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டன. 140 நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட அரசு அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
3. இ) ரஞ்சித் குமார். இந்திய மூத்த வழக்கறிஞரான ரஞ்சித் குமார் 2014 ஜூன் 7 அன்று இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். இவர் அரசியலமைப்புச் சட்டத்தில் நிபுணத்துவம் கொண்டவராகக் கருதப்படுகிறார். இவர் குஜராத் மாநில அரசின் சட்ட ஆலோசகராகச் செயல்பட்டுவந்தவர். அம்மாநில அரசின் பல வழக்குகளில் வாதாடியுள்ளார். இந்தியாவின் முதன்மை சட்ட அதிகாரி அட்டார்னி ஜெனரல். அதற்கு அடுத்தபடியாக சொலிசிட்டர் ஜெனரல் பதவி உள்ளது. ஆனால் அட்டார்னி ஜெனரல் பதவி அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 76-ன் கீழ் நியமிக்கப்படுகிறது. ஆனால் சொலிசிட்டர் ஜெனரலோ கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களோ அப்படி நியமிக்கப்படுகிறவர்கள் அல்ல. இவை சட்டரீதியான ஒப்புதல் பெற்ற பதவிகள் மட்டுமே. இந்தப் பதவி 3 ஆண்டுகள் மட்டுமே ஆயுள் கொண்டது. இவர் தவிர 6 கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
4. ஈ) போபால். பெண்களின் மீது ஏவப்படும் வன்முறைகளுக்குத் தீர்வு அளிப்பதற்காக இந்த ஒன் ஸ்டாப் கிரைஸிஸ் சென்டர் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் தொடங்கப்பட்டுள்ளது. 2014 ஜூன் 16 அன்று பாலிவுட் நடிகர் அமீர் கான் இதைத் தொடங்கிவைத்தார். இந்த மையத்தில் பெண்களுக்குத் தேவைப்படும் மருத்துவ, சட்ட உதவிகள் வழங்கப்படும். வரதட்சணைப் பிரச்சினை, பாலியல் வன்முறை உள்ளிட்ட அனைத்து விதமான பெண்களின் சிக்கல்களுக்கும் ஒரே கூரையின் கீழ் தீர்வு அளிக்கும் பொருட்டு இதைத் தொடங்கியுள்ளது மத்தியப் பிரதேச மாநில அரசு. மத்திய அரசின் உதவியுடன் மாநிலம் முழுவதும் இதைப் போன்ற மையங்களைத் திறக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment