Wednesday, 2 July 2014

நேர்காணலில் காமெடியா பேசலாமா?

நம் நகைச்சுவை உணர்வு வேலைத் தேர்விற்குப் பயன்படுமா? அல்லது பாதகம் செய்யுமா? எந்த அளவிற்கு நம் நகைச்சுவையை அவிழ்த்துவிடலாம்? அது நம்மைக் கோமாளியாய்க் காட்டுமா அல்லது புத்திசாலியாகக் காட்டுமா?
நேர்காணல் என்றாலே ஒரு சீரியஸான விஷயம்; கேட்ட கேள்விக்கு மட்டும் சின்சியர் சிகாமணியாகப் பதில் சொல்லிவிடுவது நல்லது என்பதுதான் பொதுவான அபிப்பிராயம்.
நகைச்சுவையான கேள்வி பதில்களை சினிமாவில் தான் பார்த்திருக்கிறோம். அசட்டுத்தனமான கேள்விகளுக்குப் புத்திசாலித்தனமான பதில்கள் தருவது கதாநாயகர்களின் வேலை. எண்பதுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் தேசிய பிரச்சினை என்று இருந்தபோது எல்லா மொழி நாயகர்களும் இதைச் செய்திருக்கிறார்கள்.
வறுமையின் நிறம் சிவப்பு படத்தில், ‘நம் நாட்டின் உள்துறைத் துறை அமைச்சர் யார்?’ என்ற இண்டர்வியூ கேள்விக்கு , ‘யெஸ்டர்டே, டுடே ஆர் டுமாரோ?’ என்று ஹஸ்கி வாய்ஸில் கமல்ஹாசன் பதில் கேள்வியை நக்கலாகவும் கோபமாகவும் கேட்பார்.
‘ஆஸ்திரேலியாவில் ஓடும் நதி ஒன்றைச் சொல்லுங்க’ என்று கேட்டால் ‘சொன்னால் வேலை கொடுத்துடுவீங்களா?’ என்று பாலைவனச் சோலையில் ஜனகராஜ் கேட்பார்.
அதே போல ஒரு திரைப்படத்தில் இண்டர்வியூ நடக்கும்போதே மேலிட சிபாரிசு என்று போன் வரும். பின் வேலை கேட்டு வந்த விவேக் வாயில் வந்ததெல்லாம் பேசுவார்.
இன்று திறமையான ஆட்களைத் தேடி அலையும் கார்ப்பரேட் நேர்காணலில் அவர்கள் அசட்டுத்தனமான கேள்விகள் கேட்க மாட்டார்கள். காரணம் நேரத்திற்கு இங்கு விலையுண்டு. குறைந்த காலத்தில் சரியான ஆட்களைத் தேர்வு செய்யும் சவால் அவர்களுக்கு. தகுதிக்குச் சந்தேகமான ஆட்களை அழைப்பதிலோ, நேர்காணலில் அர்த்தமற்ற கேள்விகளில் நேரத்தை வீணடிப்பதிலோ எந்தப் பயனுமில்லை.
அதனால் சத்தான உரையாடல்கள்தான் நேர்காணலின் ஜீவநாடி. அதற்கு நகைச்சுவை நிச்சயம் உதவும். ஒரு கலகலப்பான உரையாடலை யார் வேண்டாம் என்று சொல்வார்கள்?
உங்கள் நகைச்சுவை உணர்வு எதை வெளிக்காட்டுகிறது என்பதைப் பொறுத்துத்தான் அது உங்களுக்கு உதவுகிறதா இல்லையா என்று சொல்ல முடியும்.
எல்லா நகைச்சுவையிலும் நாம் நம் உள் மனதை வெளிப்படுத்துகிறோம். நம் எதிர்மறை எண்ணங்களைச் சொல்வதற்கும் நகைச்சுவையை நாடுகிறோம். அதனால் உங்கள் நகைச்சுவை உங்கள் ஆளுமையைக் காட்டிக்கொடுக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் நகைச்சுவையில் என்ன உள்ளது என்று யோசியுங்கள்.
எனக்குத் தெரிந்த ஒருவர் கெட்ட செய்தி சொல்கையில்தான் வாயாரச் சிரித்து நகைச்சுவையுடன் சொல்வார். இன்னொரு நண்பர் எதைச் சொன்னாலும் எடக்கு பேசுவார், சிரிப்பு வரும், கூடவே கோபமும் வரும். என் பேராசிரியர் ஒருவர் சிரிக்கச் சிரிக்கக் கதை சொல்வார். கடைசியில் எல்லாக் கதைகளும் தோல்வியில்தான் முடியும். சிலர் ஆர்வக்கோளாறில் எதிராளி சிரிக்கிறார்கள் என்பதற்காகப் பிறர் ரகசியங்களையும் தேவையில்லாமல் போட்டு உடைப்பார்கள். சிலருக்குக் குத்தலும் கிண்டலும்தான் நகைச்சுவை உணர்வு.
உங்கள் நகைச்சுவை உங்களையும் பிறரையும் தாழ்த்திக் காட்டாமல் இருக்க வேண்டியது அவசியம். பிறர் மனம் புண்படாத நகைச்சுவை முக்கியம். எந்த ஒரு இனம், மதம், மொழி, ஊர், கலாச்சாரம் பற்றியும் குறிப்பிடாமல், குறிப்பிட்டாலும் காயப்படுத்தாமல் இருக்க வேண்டியது மிக முக்கியம்.
ஒரு முறை நேர்காணலில் ஒருவர் மிக சகஜமாகப் பேச ஆரம்பித்தவுடன், ‘அந்த கம்பனியில் ஏன் தாக்குப் பிடிக்க முடியலைன்னா எந்த முடிவும் அங்கே எடுக்க முடியாது சார். டிப்பிகல் மார்வாடி கம்பனி!’ என்றார். அந்தத் தேர்வுக் குழுவின் முக்கிய உறுப்பினர் மார்வாடி இனத்தைச் சேர்ந்தவர் என்று அறியாமல்.
நகைச்சுவையும் ஆழம் பார்த்துக் காலை விடும் செயல்தான். எதிராளி மன நிலை அறிந்து நிகழ்த்த வேண்டிய கலை இது.
ஆனால் எவ்வளவு இறுக்கமான மனிதரையும் ஒரு நல்ல நகைச்சுவை உருக்கிவிடும். தளர்த்திவிடும்.
ஒரு முறை ஒரு புரடக் ஷன் மேனேஜர் வேலைக்கு நேர்காணல் செய்யும்போது, “உங்களைச் சுருக்கமாக அறிமுகம் செய்து கொள்ளுங்கள்” என்றதற்கு, “அறிமுகம் ஓ.கே. சுருக்கமாக என்பது கஷ்டம். எனக்கும் என் தந்தையாரின் ஸ்கூட்டருக்கும் உள்ள வேற்றுமை இதுதான். அதற்கு ஸ்டார்டிங் பிராப்ளம், எனக்கு ஸ்டாப்பிங் பிராப்ளம்..!’ என்று சொல்லிவிட்டு ஒரு சுருக்க உரை நிகழ்த்தினார். இது தன் நகைச்சுவை உணர்வைச் சாமார்த்தியமாகக் காட்டிவிடும் செயல். நாங்கள் ரசித்ததோடு இல்லாமல் எல்லாச் சூழ்நிலையிலும் நிதானம் இழக்காமல் சிரித்தவாறு நிலையைக் கட்டுக்குள் கொண்டு வரும் திறனைக் கவனித்தோம். அவரை நாங்கள் பல கட்டு சோதனைகள் செய்தாலும் எங்களை முதலில் அவர் பக்கம் திரும்ப வைத்தது அவரின் நகைச்சுவைத் திறமைதான்.
நகைச்சுவை என்பது சீரியஸான வேலை. நகைச்சுவை நடிகர்களால் மிகச் சிறப்பான குணச்சித்திர வேடங்களைச் சுலபமாகச் செய்ய முடியும். அதனால் இயல்பான நகைச்சுவை இல்லாவிட்டால், வலிந்து முயல வேண்டாம்.
காரணம், தோல்வியுற்ற நகைச்சுவை உங்கள் தன்னம்பிக்கையைத் தின்றுவிடும். நீங்கள் நகைச்சுவையாகச் சொல்வதை யாராவது விளக்கச்சொன்னால் அது போன்ற அவமானம் எதுமில்லை.
நம் வாழ்க்கையின் துக்கத்தை மறைக்கும் தடுப்புதான் நகைச்சுவை என்கிறார் சிக்மண்ட் ஃப்ராய்ட். நம் வாழ்க்கையைப் பிறர் அறிவதும் நம் நகைச்சுவையை வைத்துத்தான்.
பெரும் முயற்சி செய்து வருவதல்ல நகைச்சுவை. அது இயல்பான செயல். அந்த இயல்பை சமயம் பார்த்துப் பயன்படுத்திக்கொள்வதும், வேண்டாம் என்கிற பொழுது நிறுத்தி வைப்பதும் நம் பகுப்பாய்வுத் திறன்.
நகைச்சுவையா இல்லையா என்பதைவிட இயல்பா இல்லையா என்பதுதான் கேள்வி. உங்கள் இயல்பில் நகைச்சுவை இருந்தால் தாராளமாகப் பயன்படுத்துங்கள்.
பிறர் உங்களை நினைவில் வைத்துக்கொள்ள உங்கள் நகைச்சுவை உதவும். அது ஒரு First Mover Advantage ஐக் கொடுக்கும். எதிராளியின் முழுக் கவனத்தையும் ஈர்க்க அது உதவும்.
நேர்காணலை உங்களுக்குச் சாதமாகத் தொடங்க நகைச்சுவை பயன்படும். ஆனால் நேர்காணல் முடிவு உங்களுக்குச் சாதகமாக நீங்கள் இன்னும் பல திறன்களை வெளிக்காட்ட வேண்டும்!

No comments:

Post a Comment