முதல் உலகப் போரைச் சந்தித்த சுபேதார் ராமசாமியின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் அவருடைய பேரன்
முதல் உலகப் போரில் தரைப்படை வீரர்களுக்கு அபயம் அளித்தது பதுங்கு குழிதான். ஈராக்கின் மெசபடோமியா பகுதியில் ஆயிரக் கணக்கான பதுங்கு குழிகளில் பல்லாயிரக் கணக்கான வீரர்கள்! 110 பேர் கொண்ட கம்பெனி ஒன்றின் (படைப் பிரிவுகளில் ஒன்று) தளபதியான சுபேதார் ராமசாமி தனது வீரர்களிடம் எக்காரணம் கொண்டும் தனது சங்கேத சமிக்ஞை கிடைக்காமல் யாரும் தலையை வெளியே நீட்டக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தார்.
இரவு முழுக்கக் குழிக்குள்ளேயே கிடந்த ராமசாமியின் அருகில் பதுங்கியிருந்த அவர் நண்பருக்கு என்ன தோன்றியதோ, தன் தலையைச் சற்றே வெளியில் நீட்டி வீட்டார். நீட்டிய நொடியில் அவர் தலையைக் காணோம். ராமசாமி பதுங்கியிருந்த குழிக்குள் நண் பருடைய தலை விழுந்து கண்கள் மிரள, நாக்கு வெளியே வந்து துடித்தது. அந்தக் காலப் போர் வீரர்களிடம் ஒரே ஒரு தோல்பைதான் இருக்கும். அதில் இரண்டு பைகள். ஒன்றில் ரொட்டித் துண்டு. இன்னொன்றில் தண்ணீர்ப் புட்டி. துண்டாகி நின்ற தலையிலிருந்து வெட்டிவெட்டி இழுத்த அந்த நாக்கில், தன் இடுப்புக் குடுவையிலிருந்து தண்ணீரை எடுத்து விட்டார் ராமசாமி. அதோடு, துண்டித்து கிடந்தும் மிரண்டு ததும்பிய கண்களை மூடிவிட்டார்.
இப்படி மயிர்க்கூச்செறியும் முதல் உலகப் போர் சம்பவங்களை நினைவுகூருகிறார் ராதாகிருஷ்ணன். இவர் கோவை, பாப்பநாயக்கன்பாளையத் துக்காரர். இவரின் தாத்தாதான் ராமசாமி நாயக்கர். பிரிட்டிஷ் ராணுவத்தில் 1914 - 1919 உலகப் போர் காலகட்டம் உட்பட 16 ஆண்டு காலம் பணியாற்றியவர். வி ஸ்டார் விருது, ராணுவத்தில் பொதுச் சேவை விருது, கிரேட் வார் ஆஃப் சிவிலைசேஷன் விருது, விக்டோரியா நான்கு விருது, சிறந்த ராணுவப் பணிக்காகத் தங்கப் பதக்கம் விருது என பிரிட்டிஷ் அரசிடம் விருதுகளும் பதக்கங்களும் வாங்கிக்குவித்தவர். அப்பாவுக்குத் தப்பாத இவரது பிள்ளை பாலசுந்தரம் நாயுடுவும், பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றி இரண்டாம் உலகப் போரில் கலந்துகொண்டு பதக்கங்கள் குவித்தவர்.
நினைவுச் சின்னங்கள்
“இது தாத்தா போட்டிருந்த ராணுவ உடை. இதற்கு வயது 85. இது தாத்தா மெசபடோமியாவிலிருந்து யுத்தம் முடிந்த பிறகு கொண்டுவந்த ‘1917’ என்று ஆண்டு பொறிக்கப்பட்டிருக்கும் பாம் கேஸிங். அதாவது பீரங்கியில் குண்டு பொருத்துவதற்கான பாகம். இதை மெசபடோமியாவிலிருந்து கொண்டுவர விட மாட்டார்கள் என்பதால் பூந்தொட்டிபோல் பூச்செண்டு வைத்து, கொண்டுவந்தார். இது உலகப் போரில் தாத்தாவுக்கு பிரிட்டிஷ் ராணி வழங்கிய ‘ஸ்கோடோவ் ஹானர்’. இந்த வாளின் கைப்பிடியில் பிரிட்டிஷ் ராணியின் கிரீடம் பொறித்திருப்பதைப் பாருங்கள்!” என்றெல்லாம் தனது தாத்தாவின் போர் அடையாளங்களைக் கடைவிரித்து ராதாகிருஷ்ணன் உவகை பொங்கியபோது நம் முன் விரிந்தது வெறும் கதையல்ல; கோடிக் கணக்கான உயிர்களின் குருதி கொப்பளித்தோடிய வரலாறு.
மறைமுகச் சேவை
“எங்கள் தாத்தா சாகும்போது எனக்கு ஐந்து வயது. அவர் நினைவும், அவர் சொன்ன போர் அனுபவங்களும் என் மனதில் நிழலாகத்தான் இருக்கிறது. ஆனால், எங்கள் அப்பா பாலசுந்தரம் தன் அனுபவத்தையும், தாத்தாவின் அனுபவத்தையும் நிறைய சொல்லியிருக்கார். தாத்தா தரைப்படையென்றால், அப்பா கப்பற்படையில் பணியாற்றினார். தாத்தாவின் அப்பா கஸ்தூரிசாமி நாயக்கரும் ராணுவத்தில் இருந்தவர். சிறைக் காவலராகவும் இருந்திருக்கார். வ.உ.சி. கோவைச் சிறையில் இருந்தபோது ராகி வடைசுட்டு, கொள்ளுத் தாத்தாவிடம் கொடுத்து வ.உ.சி-க்கு ரகசியமாகக் கொடுக்கச் சொன்னவர் எங்கள் கொள்ளுப் பாட்டி. வேலைபார்த்தது பிரிட்டிஷ்காரர்களிடம் என்றாலும் தேசபக்தர்களுக்கு மறைமுக சேவை செய்திருக்கிறார்கள் அந்தக் காலத்தில்” என்று தன் குடும்ப வரலாறு சொன்னவர், தனது தாத்தாவின் முதல் உலகப் போர் அனுபவங்கள் சிலவற்றை மேலும் விவரித்தார்.
மார்ன் நதிக்கரைப் போர்
“பிரான்ஸ் நாட்டில், மார்ன் நதிக்கரையில் நடந்த சண்டையில் 1914 செப்டம்பர் மாதத்தில் நடந்த சண்டையில் சுமார் ஐந்து லட்சம் பேர் கொல்லப்பட்டது வரலாறு. அந்தச் சண்டைக்குச் சில நாட்கள் முன்பு அதே நதிக்கரையில் தனது சிப்பாய்களுடன் அணிவகுத்து வந்திருக்கிறார் தாத்தா. அங்கிருந்து சில மைல் தூரத்தில் ஆஸ்திரியா-ஜெர்மனியின் எதிரிப் படைகள் நிற்பது ஒற்றர்கள் மூலம் தகவல் அறிந்து, அதற்கு மேல் அசைந்தால் எதிரிகள் நாசம் செய்துவிடுவார்கள் என்று உணர்ந்து, அந்த நதியில் முன்னுக்கும் போகாமல் பின்னுக்கும் செல்லாமல் தண்ணீருக்குள்ளேயே படைவீரர்களுடன் நின்றிருக்கிறார். 3 நாட்கள் தண்ணீருக்குள் நின்றதால் பூட்ஸ்களுடன் கால்கள் ஊறிப் பெருத்துவிட்டன. அசையக்கூட முடியவில்லை. எதிரிப் படைகள் வேறு திசை நோக்கிச் சென்றுவிட்டதை அறிந்து, அருகில் இருந்த கிராம மக்கள் வந்து, உறைந்துபோய் நின்ற இவரது படைவீரர்களைத் தூக்கிக்கொண்டுபோய் மருந்திட்டு, சூடு ஏற்றி, சிகிச்சை செய்து, காப்பாற்றி அனுப்பியிருக்கிறார்கள்.”
குழந்தையின் விரல்
“1918-ல் போர் முடிவுக்கு வந்து எல்லோரும் அவரவர் தாய்நாட்டுக்குத் திரும்பலாம் என்று 1919-ல் உத்தரவு வந்திருக்கிறது. அதையடுத்து, மெசபடோமியாவில் வெவ்வேறு இடங்களில் நின்ற படைவீரர்களுக்கு ஒரு ஒன்றுகூடல் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதில் தாத்தாவும் கலந்துகொண்டிருக்கிறார். எல்லோருக்கும் சப்பாத்தியும் காலிபிளவர் மசாலா குழம்பும் பரிமாறப்பட்டிருக்கிறது. (இந்தக் கால புரோட்டாவைப் போல் அந்தக் காலத்தில் சப்பாத்தி தடிமனாக இருக்குமாம்.) அதைச் சாப்பிட்டுக்கொண்டிருந்த தாத்தாவின் கையில் ஒரு கறி அகப்பட்டிருக்கிறது. பார்த்தால் அது ஒரு குழந்தையின் சுண்டுவிரல். இந்த விஷயத்தை எல்லோ ருக்கும் தாத்தா சொல்ல, படைவீரர்கள் மத்தியில் பெருத்த அமளி. எல்லோரும் வெளியே வந்து அத்தனையையும் கொட்டினார்கள். விருந்து ஏற்பாடு செய்திருந்த முகாம் கொட்டகைகளைச் சூறையாடினார்கள். எங்காவது குண்டுவெடித்துக் குழந்தையின் விரல் சிதறி, அந்தக் குழம்பில் வந்து விழுந்ததா என்பது தெரியாது. ஆனால், ஒரு இடத்தில் ஒரு குழந்தையின் விரல் குழம்பில் சாதாரணமாகக் கிடந்தது என்றால், அந்தப் போரில் எத்தனை உயிர்கள் எப்படியெல்லாம் கொல்லப்பட்டிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள் என்று குடும்பத்தாரிடம் அடிக்கடி சொல்லுவாராம் தாத்தா.”
விடாது துரத்திய உலகப் போர் நினைவுகள்
“தாத்தா மரணப் படுக்கையில் கிடந்தபோது எதற்கோ தான் படுத்திருந்த கட்டிலைத் திசைமாற்றிப் போடச் சொல்லியிருக்கிறார். வயதானவர், படுக்கை யில் கிடப்பவர்தானே? என்ன தெரியப்போகிறது என்று கட்டிலை ஒரு அசை, அசைத்துவிட்டு ‘கட்டிலை நகர்த்திப்போட்டாச்சு’ என அவருக்குக் குடும்பத்தினர் சொல்லியிருக்கிறார்கள். உடனே அவர் கோபத்துடன் எழுந்து உட்கார்ந்து விட்டார். ‘யாரடா ஏமாத்தறீங்க? நான் பக்கிங்காம் பேலஸ் மேல நின்னு ஆயிரக் கணக்கான உயிர்கள் மாண்டு, உலகம் அழியறதைக் கண்ணு முன்னால பார்த்தவனாக்கும்!’ என்று ரோஷமாகக் கத்தியிருக்கிறார். முதல் உலகப் போரில் கொடூரமாகக் கொல்லப்பட்ட உயிர்களின் நினைவு அவருடைய மரணப் படுக்கை வரை நீடித்திருந்தது.”
- கா.சு. வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in
No comments:
Post a Comment