டெல்லி- ஆக்ரா இடையே வியாழக்கிழமை “செமி புல்லட்” பயணிகள் ரயில் மணிக்கு 160 கி.மீட்டர் வேகத்தில் கடந்து புதிய தேசிய சாதனை படைத்தது.
டெல்லியில் இருந்து மத்தியப்பிரதேச தலைநகர் போபாலுக்கு இயக்கப்படும் சதாப்தி ரயில்தான் இந்தியாவின் அதிவேக ரயிலாக உள்ளது. இந்த ரயில் மணிக்கு 150 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது.
வரும் 8-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட உள்ள ரயில்வே பட்ஜெட்டில் அதிவேக புல்லட் ரயில்களை இயக்குவது தொடர்பான அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னோட்டமாக டெல்லி-ஆக்ரா இடையே அதிவேக “செமி புல்லட்” ரயில் வியாழக்கிழமை சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டது. எலெக்ட்ரிக் லோகோமோட்டிவ் 5400 எச்.பி. இன்ஜின் பொருத்தப்பட்ட இந்த ரயில் மின் வழித்தடத்தில் மணிக்கு 160 கி.மீட்டர் வேகத்தில் சீறிப் பாய்ந்தது.
டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து காலை 11.15 மணிக்கு 10 பெட்டிகளுடன் புறப்பட்ட ரயில், 200 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஆக்ராவை 90 நிமிடங்களில் சென்றடைந்தது.
இதன்மூலம் டெல்லி- ஆக்ரா இடையேயான பயண நேரம் சுமார் 30 நிமிடங்கள் குறைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் 16 இடங்களில் வேகக் கட்டுப்பாடு பகுதிகள், வளைவுகள் உள்ளன. “செமி புல்லட்” ரயிலுக்காக அந்தப் பகுதிகளில் தண்டவாளங்கள் மேம்படுத்தப்பட்டன. 27 இடங்களில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டன.
மேலும் “செமி புல்லட்” ரயில் வியாழக்கிழமை கடந்து சென்றபோது அனைத்து ரயில்வே கிராசிங்குகளிலும் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
முதல் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வரும் நவம்பர் முதல் இதே வழித்தடத்தில் இதே வேகத்தில் “செமி புல்லட்” ரயில் சேவை தொடங்கப்படும் என்று டெல்லி பிரிவு துணை பிராந்திய மேலாளர் அனுராக் சாச்சன் தெரிவித்தார்.
“இதேபோல் டெல்லி-சண்டிகர், டெல்லி- கான்பூர் இடையே அதிவேக புல்லட் ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் ஏற்கனவே அதிவேக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே தண்டவாளங் களை மேம்படுத்த பெரிய அளவில் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை” என்று அனுராக் சாச்சன் மேலும் கூறினார்.
அதிவேக புல்லட் ரயில்கள்
இத்தாலியின் ஏ.ஜி.வி. இட்டாலோ என்ற புல்லட் ரயில் மணிக்கு 574 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. இதேபோல் சீனாவின் ஹார்மோனி சி.ஆர்.எச். 380ஏ புல்லட் ரயில் மணிக்கு 486 கி.மீட்டர் வேகத்திலும் ஜெர்மனியின் சீமன்ஸ் வலாரோ மணிக்கு 400 கி.மீட்டர் வேகத்திலும் ஜப்பானின் ஷின்கான்சன் புல்லட் ரயில் மணிக்கு 320 கி.மீட்டர் வேகத்திலும் சீறிப் பாய்கின்றன.
இந்த புல்லட் ரயில்களை போன்று இந்தியாவிலும் அதிவேக புல்லட் ரயில்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
.
.
No comments:
Post a Comment