இந்தியாவின் தலைநகர் டெல்லியை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கக் கோரி மத்திய கலாச்சார அமைச்சகம் யுனெஸ்கோ அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளது. வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் யுனெஸ்கோவின் தேர்வுக் குழுவினர் டெல்லியை பார்வையிட உள்ளனர்.
பாரம்பரியம் மிக்க நகரம் டெல்லி என்பதற்கான ஆதாரங்கள் அடங்கிய விரிவான அறிக்கையை மத்திய கலாச்சார அமைச்சகம், டெல்லி சுற்றுலாக் கழகம், டெல்லி போக்குவரத்து மேம்பாட்டுக் கழகம், கலை மற்றும் கலாச்சார பாரம்பரியங்களுக்கான இந்திய அறக்கட்டளை அமைப்பு ஆகி யவை இணைந்து தயாரித்துள்ளன.
இந்த அறிக்கை யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களுக்கான தேர்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த அறிக்கையில் பழைய டெல்லியில் உள்ள ஷாஜஹானா பாத் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சி யின்போது கட்டப்பட்ட கலை யம்சம் மிக்க கட்டிடங்களை அதி காரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சுமார் 5000 ஆண்டுகால வரலாறு கொண்ட டெல்லியை 1638 முதல் 1648 வரை தலைநகராக மொகலாயப் பேரரசர் ஷாஜகான் பயன்படுத்தியதும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், யுனெஸ்கோ வின் தேர்வுக் குழுவினர் தங்களது பரிசீலனை பட்டியலில் டெல்லியை சேர்த்துள்ளனர். பரிசீலனைப் பட்டியலில் இருக்கும் டெல்லியை தேர்வுக் குழு பட்டியலில் சேர்க்க மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. தேர்வுக்குழுப் பட்டியலில் டெல்லி இடம்பெற்ற பிறகு யுனெஸ்கோவின் கலை மற்றும் கலாச்சாரத்துக்கான உலக ளாவிய கவுன்சில் உள்ளிட்ட அதிகாரம் பெற்ற குழுக்கள் ஆய்வு செய்யும். அதற்கான பணிகளை இந்திய அதிகாரிகள் முடுக்கிவிட் டுள்ளதால் வரும் 2015-ம் ஆண்டு டெல்லி உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
யுனெஸ்கோவின் பரிசீலனைப் பட்டியலில் 171 நாடுகளைச் சேர்ந்த 1598 இடங்கள் இடம் பெற்றுள்ளன.
பத்மநாபபுரம் அரண்மனை, டார்ஜிலிங் இமாலய மலை ரயில், நீலகிரி மலை ரயில், கால்கா சிம்லா மலை ரயில், தமிழகத்தின் ஸ்ரீரங்கம் கோயில் மற்றும் காரைக்குடி செட்டிநாடு நகரம் உட்பட இந்தியாவின் 46 இடங்கள் பரிசீலனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளவை.
தமிழக அதிகாரிகள் தீவிர முயற்சி எடுக்கும்பட்சத்தில் ஸ்ரீரங்கம் கோயிலையும் காரைக்குடி செட்டிநாடு நகரத்தையும் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக வரும் 2015-ம் ஆண்டு யுனெஸ்கோ அறிவிக்க வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment