Monday, 3 November 2014

தொழிலாளர்கள் இல்லாத வளர்ச்சியா?

ஒப்பந்தத் தொழிலாளர் முறை, நலச் சட்டங்களில் திருத்தம் - யாருக்கான அரசு இது?
மோடி அரசு பதவியேற்றதிலிருந்து தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும், சில சட்டங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை முதலாளிகள் தரப்பிலிருந்து தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. தொழில்துறை சார்ந்த திட்டங்கள், சலுகைகள் போன்றவற்றை மோடி அரசு ஒவ்வொரு முறையும் அறிவிக்கும்போதெல்லாம் தொழிலாளர் நலச் சட்டங்களில் சீர்திருத்தம் என்ற பெயரில் முதலாளிகளுக்கு ஆதரவான திருத்தங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்தியத் தொழிலாளி வர்க்கம் தொடர்ச்சியாக மேற்கொண்ட போராட்டங்களின் விளைவாகத் தோன்றியவைதான் கீழ்க்கண்ட சட்டங்கள்: தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம்-1923, இந்தியத் தொழிற்சங்கச் சட்டம்-1926, சம்பளப் பட்டுவாடாச் சட்டம்-1926, தொழிற்சாலை வேலைவாய்ப்பு மற்றும் நிலையாணைச் சட்டம்-1946, தொழிற்தாவாச் சட்டம்-1947, தொழிற்சாலைச் சட்டம்-1948, மோட்டார் போக்குவரத்துத் தொழிலாளர் சட்டம்-1961, பணிக்கொடைச் சட்டம்-1972. இது தவிர, போனஸ் பட்டுவாடாச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சட்டப் பிரிவையும் அமல்படுத்தாதபோது, அவற்றைக் களஆய்வு செய்து, தட்டிக்கேட்கத் தொழிலாளர் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது. விரைவான தொழில் வளர்ச்சிக்கு அது இடையூறாக இருக்கிறது என்ற பெயரில், அத்தகைய ஆய்வுகள்குறித்த பிரிவுகளைத் தற்போது மத்திய அரசு நீக்கியிருக்கிறது.
பிரிட்டிஷ் ஆட்சியின்போது…
19-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழில் புரட்சி காரணமாகப் பொருள் உற்பத்தி பன்மடங்கானது. இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உற்பத்தியில் ஈடுபட்டதால் உற்பத்தி வேகம் கூடி, உற்பத்தியின் அளவும் கூடியது. உற்பத்தியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும், உற்பத்தி அளவுக்கேற்ப ஊதியம் உயர வேண்டும் என்று குரல்கொடுக்க ஆரம்பித்தனர். பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டிலிருந்த இந்தியத் தொழிலாளி வர்க்கமும் ஊதிய உயர்வு கோரிக் குரல் எழுப்ப ஆரம்பித்தது.
இந்தியாவில் தொழிலாளர்கள் போராட்டம் நெடிய வரலாறு கொண்டது. 1823-ல் பல்லக்கு தூக்குவோர் வேலைநிறுத்தம், 1862-ல் கல்கத்தா மாட்டு வண்டி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம், 1866-ல் பம்பாய் முனிசிபல் கார்ப்பரேஷ‌ன் இறைச்சி விற்பவர் வேலைநிறுத்தம், 1891-ல் கோவை நூற்பாலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், 1895-ல் வங்கத்தில் பட்ஜ்-பட்ஜ் சணல் ஆலையில் வேலைநிறுத்தம் (மிகப் பெரிய கலவரத்தில் முடிந்தது), 1907-ல் கிழக்கிந்திய ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தம், 1921-ல் நவம்பர் 17 முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம் என்று பல்வேறு தொழிலாளர் போராட்டங்களை இந்தியா கண்டிருக்கிறது.
சம்பளப் பட்டுவாடாச் சட்டம்
இத்தகைய பல எழுச்சி மிக்க போராட்டங்களால் நிர்ப்பந்திக்கப்பட்ட பிரிட்டிஷ் அரசு, வேலைக்கேற்ற ஊதியமும், முறைப்படி குறிப்பிட்ட காலத்தில் ஊதியம் வழங்கப்படாத முறைகேட்டைப் பற்றியும் ஆய்வுசெய்து அறிக்கை கொடுக்க 1929-ல் ராயல் கமிஷ‌ன் ஒன்றை அமைத்தது. அந்த கமிஷ‌ன் தனது அறிக்கையை 1933-ல் சமர்ப்பித்தது. அதைத் தொடர்ந்து 1936-ல் சம்பளப் பட்டுவாடாச் சட்டம் இயற்றப்பட்டது. இன்றளவும் மாவட்டந்தோறும் சம்பளப் பட்டுவாடாச் சட்டப்படி நிர்வாகம் செயல்பட வில்லை என்கிற தாவாக்கள் தொழிலாளர் துறை அலுவலர்களிடம் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்தச் சட்டத்தைத் தொடர்ந்து, இயற்றப்பட்ட 1947-ம் வருடத்திய தொழில் தாவாச் சட்டம்தான் இன்றளவும் நிரந்தரப் பணிநீக்கத்திலிருந்து சிறிதள வாவது தொழிலாளர்களைக் காப்பாற்ற உதவிக் கொண்டிருக்கிறது. சர்வாதிகாரம், ஏகாதிபத்தியம் என வர்ணிக்கப்பட்ட ஆங்கிலேயர்களால் இயற்றப்பட்ட இத்தகைய தொழிலாளர் நலச் சட்டங்களில் தொழிலாளர்கள் நலனும், முதலாளிகள் நலனும் சம அளவில் கருத்தில் கொள்ளப்பட்டு ஷ‌ரத்துக்கள் அமைந்திருந்தன. ஆனால், சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆன நிலையிலும் இந்திய முதலாளிகள் வர்க்கம் இத்தகைய சட்டங்களைப் பின்பற்றாத நிலை தொடர்வதும், சட்டங்களையே ஒட்டு மொத்தமாக நீக்கிவிட வேண்டும் என வேண்டுகோள் வைப்பதும் வேதனைக்குரியது.
இரண்டு கோரிக்கைகள்
கடந்த 30 ஆண்டு காலத்தில் ஏறக்குறைய 15 அகில இந்திய வேலைநிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன. இதில் இடதுசாரிகள் மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சி சார்ந்து செயல்பட்டுவரும் ஐ.என்.டி.யு.சி., பாஜக சார்ந்து செயல்பட்டுவரும் பி.எம்.எஸ். உள்ளிட்டவையும் பங்கெடுத்திருக்கின்றன. ஏறக்குறைய 15 வேலை நிறுத்தங்களின் போதும் முன்வைக்கப்பட்ட முக்கிய மான இரண்டு கோரிக்கைகள் இவைதான்: (1) தனியார் மயத்தை அனுமதிக்கக் கூடாது. (2) தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தக் கூடாது.
2001-ல் தமிழகத்தில் சுமார் 1.5 லட்சம் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து, ஒரே நாளில் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள். அப்போது தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம்கூடத் தலையிட்டுப் பணிநீக்கத்தை விலக்கிக்கொள்ள வலி யுறுத்தியது. ஆனால், தொழில் தாவாச் சட்டத்தின் கீழ் முன்னறிவிப்பு கொடுத்து மேற்கொள்ளும் சட்டபூர்வ வேலைநிறுத்தம் என்கிற உரிமை அரசு ஊழியர்களுக்கு இல்லை என்று சொல்லப்பட்டு, இன்றளவும் சீராய்வு செய்யப்பட வேண்டிய தீர்ப்பாக அது உள்ளது.
பணிநிரந்தரம் எனும் எட்டாக்கனி
தொழிற்சாலைகள் பலவற்றில் ஒப்பந்த முறை என்பது அதிகரித்து, தொழிலாளர்கள் பணிநிரந்தரம் என்பதே எட்டாக் கனியாக மாறியிருக்கிறது. பலமுறை நீதிமன்றங்கள் தலையிட்ட பின்னரும், நெய்வேலியில் ஒப்பந்தத் தொழிலாளர் முறை என்பது தொடர்ந்து
கொண்டுதான் இருக்கிறது. விவசாயத்தற்கொலை, வறட்சி, வறுமை காரணமாகப் பிற மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்து வரும் தொழிலாளர்கள் ஒப்பந்தப் பணியில் பல தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இத்தகைய புலம் பெயர்ந்த தொழிலாளர் களின் நலம் பேணுவதற்காகத் தனியாகச் சட்டம் இருந்தபோதிலும் அதைக் கண்காணிக்கும் அதிகார அமைப்பு யாரென்று அறியாமல் இவர்களின் உழைப்பு சுரண்டப் பட்டுக் கொண்டிருக்கிறது.
இயந்திரமயமாக்கல்
ஒருபுறம் இயந்திரமயமாக்கல் என்ற வகையில் தொழிலாளர் எண்ணிக்கையைத் தொழில் நிறு வனங்கள் குறைத்திருக்கின்றன. இன்னொரு புறம் நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டு, ஒப்பந்தத் தொழிலாளர்களை வைத்துப் பல்வேறு பணிகளைச் செய்துகொண்டு, சட்ட வரம்பிலிருந்து எளிதாகப் பல நிறுவனங்கள் வெளியில் வந்துவிடுகின்றன.
தொழிலாளர் தரப்புப் பிரச்சினைகளைக் கேட்டறிந்து நலச் சட்டங்களில் தேவையான திருத்தங்களுக்கான பரிந்துரைகள் செய்வதற்காக 1966-ல் பி.பி. கஜேந்திர கட்கர் தலைமையிலும், 2002-ல் ரவீந்திர வர்மா தலை மையிலும் தொழிலாளர் ஆணையங்கள் நிறுவப்பட்டன. இதில் 2-வது தொழிலாளர் ஆணையம் முன் கருத்து சொல்லும் கூட்டத்தில் கலந்துகொண்டபோது பெரும் பான்மையான தாவாக்களை ‘சமரச முறிவு’ என்ற பெயரில் தொழிலாளர் நீதிமன்றத்துக்குத் தள்ளாமல், சட்டமீறல் செய்யும் முதலாளிகள் / நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறையே நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் கூடுதல் அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தைத் தொழிற்சங்கங்கள் தரப்பில் முன்வைத்தோம். அந்த ஆணையத்தின் பரிந்துரைகள் என்னவாயிற்று என்பது தெரியவில்லை.
சட்டங்களின்படி நிறுவனங்கள் செயல்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் அதிகார அமைப்பு இல்லா விட்டால், முதலாளிகள் வர்க்கம் சர்வாதிகாரம் பெற்றவையாகி, தொழிலாளர் வாழ்வுரிமை என்பது கேள்விக்குறியாகிவிடும்.
- எஸ். சம்பத்,
போக்குவரத்துத் தொழிற்சங்க மாநில நிர்வாகி,
தொடர்பு: dss1961@gmail.com

No comments:

Post a Comment