Wednesday, 12 November 2014

150வது ஆண்டு விழா - எத்தனை கோடி இன்பம் வைத்தாய் ஈடன் கார்டன்ஸ்!

கிரிக்கெட் வரலாற்றில் மூன்று மைதானங்கள்தான் மற்ற எல்லா மைதானங்களை விடவும் அதிக அங்கீகாரமும் கவுரவமும் பெற்றுள்ளன. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் (எம்.சி.ஜி), இங்கிலாந்தின் லார்ட்ஸ் மற்றும் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ். இந்தியாவின் பெருமைமிக்க மைதானமான ஈடன் கார்டன்ஸூக்கு இந்த வருடத்தோடு 150 வயது. அதற்குச் சிறப்பு சேர்ப்பதற்காகத்தான் இந்தியா, இலங்கை இடையிலான ஒருநாள் போட்டி நாளை (வியாழன்) இங்கு நடக்கிறது.
மைதானமான பூந்தோட்டம்
ஒரு பூந்தோட்டம், ஆடுகளமாக மாற்றப்பட்டதுதான் ஈடன் கார்டன்ஸ். 1836 முதல் 1842 வரை இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஆக்லாண்ட் பிரபுவின் தங்கைகள் எமிலி மற்றும் ஃபேனி ஈடன் ஆகிய இருவரும் அழகான பூங்கா ஒன்றை அமைத்தார்கள். ஆக்லாண்ட் சர்க்கஸ் கார்டன்ஸ் என்று முதலில் அதற்குப் பெயரிடப்பட்டது.
பின்னர் 1854-ல் ஆக்லாண்டின் குடும்பப் பெயரான ஈடன் என்ற பெயரை இணைத்து ஈடன் கார்டன்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1864-ல் தோட்டத்தின் கிழக்குப் பகுதி நீட்டிக்கப்பட்டது. அந்த வருடத்தின் ஏப்ரல் மாதத்தில், அங்கு கல்கத்தா கிரிக்கெட் கிளப் அலுவலகம் அமைக்கப்பட்டு அந்தப் பகுதியை மைதானமாகப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது.
முதல் டெஸ்ட் போட்டி, 1934-ல் நடந்தது. இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடந்த 4 நாள் டெஸ்ட் மேட்ச், டிராவில் முடிந்தது. 1961-62-ல் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் மேட்சில்தான் இந்திய அணி இங்கு முதல் வெற்றியை ருசித்தது. கடைசி டெஸ்ட் மேட்ச், 2013-ல் நடந்தது. அது, சச்சினின் 199-வது டெஸ்ட். சென்னை போலவே கொல்கத்தாவும் சச்சினுக்கு மறக்கமுடியாத மைதானம்.
1993 ஹீரோ கோப்பை அரையிறுதிப் போட்டியின் கடைசி ஓவரில் சச்சின் மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து (வெற்றிக்கு ஆறு ரன்கள் தேவை) நம்பமுடியாத வெற்றியைப் பெற்றுத் தந்தார். புகழ்பெற்ற 2001 டெஸ்ட் மேட்சின் இறுதி நாளில், சச்சின் 3 விக்கெட்டுகள் (மூன்றும் எல்பிடபிள்யூ) எடுத்ததும் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
மண்டேலாவை வரவேற்ற ஈடன்
67,000 ரசிகர்கள் கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் வகையில் 2011 உலகக்கோப்பையின்போது மைதானம் மாற்றியமைக்கப்பட்டது. அதற்கு முன்பு இதன் கொள்ளளவு - ஒரு லட்சத்து பத்தாயிரம்! டெஸ்ட் மேட்சாக இருந்தாலும்கூட ஈடன் கார்டன் ‘ஹவுஸ் ஃபுல்லாகவே’ இருக்கும். மைதானம் நிறைந்த ஈடன் கார்டன்ஸ், ஒரு கண்கொள்ளாக் காட்சி!
1984 வரை இங்கு பல முக்கியமான கால்பந்துப் போட்டிகளும் நடந்துள்ளன. அதன்பிறகு, சால்ட் லேக் மைதானம், கால்பந்து போட்டிக்கென பிரத்யேகமாகக் கட்டப்பட்டதால் இப்போது கிரிக்கெட் போட்டிகள் மட்டும் நடந்து வருகின்றன. 1977-ல் இங்கு நடந்த காட்சிப் போட்டி ஒன்றில், கால்பந்து பிதாமகன் பீலே ஆடியிருக்கிறார். 1990-ல் இந்தியாவுக்கு வந்த நெல்சன் மண்டேலாவுக்கு ஈடன் கார்டன்ஸில் வைத்துதான் வரவேற்பு அளிக்கப்பட்டது. அன்றும் ஒருலட்சம் பேர் கூடியதுதான் இந்த மைதானத்தின் சிறப்பம்சம். அடுத்தவருடம், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 22 வருடங்கள் கழித்து சர்வதேச கிரிக்கெட் ஆட வந்தபோது இங்கு தான் முதல் மேட்சை ஆடினார்கள். இந்தியாவும் தென் ஆப்பிரிக்க அணியும் ஆடிய முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியும் அதுதான். தன் முதல் மேட்சிலேயே டொனால்ட் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
வன்முறையும் வரலாறும்
ஈடன் கார்டன்ஸூக்குப் பெருமை சேர்க்கும் அதே ரசிகர்கள்தான் பலமுறை வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளார்கள். 1946-ல் ஆஸ்திரேலியன் சர்வீஸஸ் லெவன் அணியுடனான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியைச் சேர்ந்த முஸ்டாக் அலி தேர்வு செய்யப்படவில்லை. இதைக் கேள்விப்பட்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள், ’நோ முஸ்டாக், நோ டெஸ்ட்’ என்று முழக்கமிட்டார்கள். பெவிலியனுக்குள் நுழைந்து தேர்வுக்குழுத் தலைவர் குமார் ஸ்ரீ துலீப்சிங்ஜி-யின் சட்டையைப் பிடித்து உலுக்கினார்கள்.
நிலைமை மோசமடையவே, அணித் தேர்வு மாற்றப்பட்டது. பிறகு, முஸ்டாக் அலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்கிற தகவல் கிடைத்தபிறகுதான் ரசிகர்கள் அமைதி ஆனார்கள். 1980-ல் இங்கு நடந்த கால்பந்து போட்டி ஒன்றில் நெரிசல் அதிகமாகி, 16 பேர் இறக்க நேர்ந்தது. 1996 உலகக்கோப்பை அரையிறுதியில் ரசிகர்களின் வன்முறையால் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
1999-ல் பாகிஸ்தானுடனான டெஸ்ட் மேட்சில், நான்காவது இன்னிங்ஸில் இந்திய அணி 279 ரன்கள் அடிக்கவேண்டும். 143/2 என ஸ்கோர் இருந்த நிலையில், ரன் எடுக்கும்போது சச்சின், ஷோயிப் அக்தருடன் மோதியதால், எதிர்பாராத விதத்தில் ரன் அவுட் ஆனார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் ஆக்ரோஷமாகி, அடுத்த சில நிமிடங்களில் பவுண்டரி ஓரமாக ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த அக்தர்மீது பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டார்கள்.
பிறகு, சச்சின் மைதானத்துக்குள் வந்து ரசிகர்களைச் சமாதானப்படுத்தினார். மீண்டும் ஆட்டம் தொடங்கினாலும் 67 நிமிட தாமதம், ரசிகர்களின் வன்முறை போன்றவற்றால் பதற்றமடைந்த இந்திய வீரர்கள் விக்கெட்டுகளைப் பறிகொடுக்கத் தொடங்கினார்கள். 4 விக்கெட்டுகள் கைவசமுள்ள நிலையில் 65 ரன்கள் தேவை என்று அடுத்தநாள் மேட்ச் தொடர்ந்தபோதும் இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழக்க, ரசிகர்கள் மீண்டும் பொறுமை இழந்தார்கள். கற்கள், பாட்டில்கள், பழங்களை மைதானத்தில் வீசி எறிந்தார்கள். இதனால் 3 மணி நேரம் ஆட்டம்தடைபட்டது. பிறகு ரசிகர்கள் மைதானத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். இறுதியில் காவலர்கள்,அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் டெஸ்ட் மேட்ச் நடந்து முடிந்தது. 46 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் ஜெயித்தது.
காவலர்களால் அடித்து உதைக்கப்பட்டும், வெளியேற்றப்பட்டும் அவமானப்பட்ட ரசிகர்களுக்கு ஈடன் கார்டன்ஸ் அடுத்த இரண்டு வருடங்கள் கழித்து மறக்கமுடியாத அனுபவத்தைத் தந்தது. 2001-ல் நடை பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் மேட்ச் அது. தோற்கும் நிலையில், பாலோ ஆன் ஆகி மீண்டும் ஆடிக்கொண்டிருந்தது இந்திய அணி. எங்கே இந்தமுறையும் ரசிகர்கள் உணர்ச்சி வசப்பட்டுவிடுவார்களோ என்று எண்ணிக்கொண்டிருந்த சமயத்தில், ஓர் அதிசயம் நிகழ்ந்தது.
லஷ்மண் 281 ரன்களும் திராவிட் 180 ரன்களும் எடுத்து டெஸ்ட் மேட்சின் போக்கையே தலைகீழாகத் திருப்பி, கடைசி நாளில், ஆஸ்திரேலியா அணிக்குத் தாங்கமுடியாத தோல்வியைத் தந்தார்கள். அந்த டெஸ்டின் நான்காம் மற்றும் ஐந்தாம் நாள்களில் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள். சரித்திரத்தில் இடம்பிடித்த டெஸ்ட் மேட்ச், ஈடன் கார்டன்ஸில் நடந்ததுதான் எத்தனைப் பொருத்தம்!
அதிக ரன்கள்
வி.வி.எஸ்.லஷ்மண்
ஈடன் கார்டன்ஸில் அசாருதீன் 7 டெஸ்டுகளில் 5 செஞ்சுரியும், லஷ்மண் 10 டெஸ்டுகளில் 5 செஞ்சுரியும் அடித்துள்ளார்கள். இங்கு, லஷ்மண் அதிக டெஸ்ட் ரன்கள் (1217) எடுத்துள்ளார். ஈடன் கார்டன்ஸின் 150-வது ஆண்டுவிழாவை ஒட்டி, முன்னாள் வங்காள அணி கேப்டன் ராஜூ முகர்ஜி எழுதியுள்ள 'Eden Gardens - Legends and Romance', என்கிற நூலும் ‘Eternal Eden என்கிற ஆவணப்படமும் வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment