Wednesday, 12 November 2014

ஹா – ஹாங்காங் 2

பிரிட்டன் - சீன உறவை மேலும் சீரழிக்கும் வகையில் 1839 ஜூலை மாதத்தில் நடந்தது ஒரு சம்பவம். ஹாங்காங் துறைமுகத்தில் வந்து இறங்கியது ஒரு பிரிட்டிஷ் கப்பல். இதன் பயணிகள் சிலர் கோலூன் அருகிலிருந்த ஒரு ஆலயத்தை அழித்தனர். மதவெறி!
அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்ற லின் வெயிக்ஸ’ என்ற சீனனைக் கொன்று விட்டனர். 'சம்பந்தப்பட்ட மாலுமியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்' என்றது சீன அரசு. 'இறந்தவனின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு என்றால் ஓ.கே. ஆனால் மாலுமியை ஒப்படைக்க முடியாது' என்றது பிரிட்டன். 'அப்படியானால் இனி பிரிட்டனுக்கும் சீனாவுக்கும் வியாபாரம் கிடையாது' என்றார் லின் – இவர் சீனச் சக்ரவர்த்தியால் நியமிக்கப்பட்ட விசேஷ அதிகாரி.
அதற்கு அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் 16 பிரிட்டிஷ் யுத்தக் கப்பல்கள் காண்ட்டன் துறைமுகத்தை அடைத்துக் கொண்டு நின்றன. பிரிட்டிஷ் கப்பல்கள் எங்கு காணப்பட்டாலும் அதை சீனர்கள் தாக்கலாம் என்று உத்தரவு கொடுத்தார் சீனச் சக்ரவர்த்தி. தொடங்கியது 'அபினி யுத்தம்'. அதாவது ‘ஓபியம் வார்’. 1842ல் பல ஆற்றங்கரைப் பகுதிகள் பிரிட்டனின் வசமானது. அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் சீனாவினால் பிரிட்டனை எதிர்கொள்ள முடியவில்லை.
பிரிட்டனின் ராட்சதப் படை சீனாவின் சில சிறிய தீவுகளைத் தன் வசமாக்கிக் கொண்டதும், சீனச் சக்ரவர்த்தி நடுங்கத் தொடங்கினார். அவர் சிந்தனை வேறு கோணத்தில் பாய்ந்தது. “எல்லாம் இந்த ‘லின்’னால் வந்தது. ராஜதந்திரம் இல்லாமல் நடந்து கொண்டுவிட்டான்’’. லின் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இவர் இடத்துக்கு சீ ஷான் என்பவர் நியமிக்கப்பட்டார்.
பிரிட்டனிடம் சமாதானப்பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. மூன்று முக்கிய நிபந்தனைகள் நிறைவேறினால்தான் யுத்தம் நிற்கும் என்றது பிரிட்டன். தங்கள் வியாபாரிகளின் அபினியைப் பறித்ததற்காக அறுபது லட்சம் சீன டாலர்கள் அபராதம் அளிக்க வேண்டும். எந்தவித நிபந்தனையுமின்றி காண்ட்டன் துறைமுகத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
மூன்றாவது நிபந்தனை? “ஹாங்காங்கை எங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும்”. சீன சமாதானத் தூதுவன் சீ ஷான் பிரிட்டிஷாரின் நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொண்டு விட, பிரிட்டனும் தாற்காலிகமாக யுத்தத்தை நிறுத்தியது. ஆனால் சீனாவின் தலைமை அரசாங்கம் நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொள்ள மறுத்தது. 'அறுபது லட்சம் சீன டாலரா? ஹாங்காங்கை தாரைவார்ப்பதா? சான்ஸே கிடையாது” என்றது.
மீண்டும் தொடங்கியது போர். காண்ட்டன், ஷாங்காய், அமாய் ஆகிய துறைமுக நகரங்களை பிரிட்டனால் எளிதில் கைப்பற்ற முடிந்தது. அடுத்து நான்கிங் நகரையும் பிரிட்டன் முற்றுகையிடத் தொடங்க, சீன அரசு மீண்டும் வெள்ளைக் கொடியைப் பறக்கவிட்டது. அதை சமாதானக்கொடி என்பதை விட அடிமை சாஸனம் என்றே கூறிவிடலாம். அப்படித்தான் அமைந்தது 1842 ஆகஸ்டு 29 அன்று இருதரப்பிலும் கையெழுத்திடப்பட்ட நான்ஜிங் உடன்படிக்கை.
210 லட்சம் டாலர் நஷ்ட ஈடு தர சம்மதித்தது சீனா. கூடவே ஹாங்காங்கையும்! ஐந்து துறைமுகப் பட்டினங்களில் பிரிட்டிஷார் பகிரங்க வியாபாரம் செய்யலாம். ஆக எல்லாமே ஒருதரப்பாகவே நடந்து முடிந்தது. வெற்றிக்கு அடையாளமாக ஹாங்காங் தீவை எடுத்துக் கொண்ட பிரிட்டன், அந்தத் தீவின் தெற்குப் புறமுள்ள கோலுன் தீபகற்பத்தையும் கொசுறாக எடுத்துக் கொண்டது. பின்னர் ஒரு சமரச ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி சீனா ஹாங்காங்கை முழுவதுமாக தாரை வார்க்க வேண்டாம். 99 வருடங்களுக்குக் குத்தகை விட்டால் போதும்!
பிற்காலத்தில் ஹாங்காங் எப்படியெல்லாம் வளரப் போகிறது என்பதை அப்போது இரு தரப்புமே அறிந்திருக்கவில்லை! 1984 டிசம்பர் 13 அன்று சீன – பிரிட்டிஷ் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. தொடக்கத்தில் ஹாங்காங்கில் உள்ள சீனர்கள் சீன சட்டத்தின்படியும், பிறர் பிரிட்டிஷ் சட்டத்தின்படியும் நடத்தப்படுவார்கள் என்று கூறியது பிரிட்டன். ஆனால் காலப்போக்கில் அனைவருக்குமே ஆங்கிலேயர்களின் சட்டம்தான் - இதில் நிர்வாக வசதியும் இருந்தது என்பதுடன் ஹாங்காங்கில் வசித்த சீன மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதும் முக்கியம்.
இந்தக் காலகட்டத்தில் ஹாங்காங் செழித்து வளர்ந்தது. ஒரு துறைமுகமாக அது வணிகத்தில் மிளிர்ந்தது. ‘’எங்கள் மணிமகுடத்தில் மின்னும் மாணிக்கக்கல் ஹாங்காங்’’ என்று பிரிட்டன் பெருமிதப்பட்டுக் கொண்டது. காலச் சக்கரம் தன் பணியைச் செய்தது. குத்தகைக் காலம் முடியும் காலம் நெருங்கியது. தான் சொன்ன சொல்லை பிரிட்டன் காப்பாற்றுமா? அப்படிக் காப்பாற்றவில்லையென்றால் சீனா பிரிட்டனுடன் போரிடுமா? பிரிட்டன் ஹாங்காங்கை மீண்டும் சீனாவுக்கே அளிக்க ஒத்துக் கொண்டது.
ஆனால் குத்தகைக் காலம் முடிந்தவுடன் - அதாவது 1997 ஜூன் 30ம் தேதி - டக்கென்று ஹாங்காங் கைமாறிவிடுவது சாத்தியமா? இதில் ஏற்படக்கூடிய சிக்கல்களை முன்பே யோசித்து தீர்வு கண்டால் நல்லதுதானே?இப்படி ஒரு ஞானோதயம் சீனா, பிரிட்டன் ஆகிய இரு நாடுகளுக்குமே ஏற்பட, அவர்கள் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுதிட்டார்கள். இதன்படி குத்தகைக் காலம் முடிந்ததும் சீனாவின் ‘சிறப்பான நிர்வாக கேந்திரமாக’ ஹாங்காங் விளங்கும்.
சீனா ஹாங்காங்கின்மீது கணிசமான கட்டுப்பாட்டைச் செலுத்தலாம். ஆனால் வெளியுறவுக் கொள்கை, ராணுவம் ஆகிய இரண்டு விஷயங்களையும் ஹாங்காங்கின் இடத்துக்கே விட்டுவிட வேண்டும். சீனாவில் சோஷலிஸ அமைப்புதான் என்றாலும் ஹாங்காங்கில் இப்போது நிலவும் சந்தைப் பொருளாதாரம் அப்படியே தொடரும்.இந்த ஒப்பந்தம் 1997லிருந்து அடுத்த ஐம்பது வருடங்களுக்குச் செல்லுபடியாகும்.

No comments:

Post a Comment