சமூக சீர்திருத்தக் கருத்துகளை கலைவடிவத்துக்கு மாற்றி எப்படி திரைப்படமாக்குவது என்று இந்திய இயக்குநர்களுக்கு வழிகாட்டிய இந்தி திரைப்பட இயக்குநர் வி.சாந்தாராம் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
மகாராஷ்டிர மாநிலம் கோல்ஹாபூரில் பிறந்தவர். இளம் வயதிலேயே சினிமா மீது அளவுகடந்த ஆர்வம் இருந்தது. நடிகனாகும் முயற்சி யிலும் ஈடுபட்டுவந்தார்.
பாபுராவின் சினிமா கம்பெ னியில் வேலைக்குச் சேர்ந் தார். சினிமா தயாரிப்பு, ஆய்வுக்கூட வேலை, ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் போன்ற நுட்பங்களை தெரிந்து கொண்டார். 1929-ல் நண்பர்களுடன் சேர்ந்து ‘பிரபாத் பிலிம் கம்பெனி’ தொடங்கினார்.
தாதா சாஹேப் பால்கே தயாரித்த ‘ராஜா ஹரிச்சந்திரா’ படத்தின் கதையை 1932-ல் ‘அயோத்யா கா ராஜா’ என்ற பெயரில் இயக்கினார். முதன் முதலில் பெண்களை நடிக்கவைத்தார்.
மவுனப் படக் காலத்திலேயே 6 படங்களை இயக்கினார். இந்தி, மராத்தி, தமிழில் 1934-ம் ஆண்டுமுதல் படம் எடுக்கத் தொடங்கினார். ‘அம்ரித் மந்தன்’ படம் மூலம் புகழ்பெற்றார்.
இவரது ‘அமர்ஜோதி’ திரைப்படம் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. பெண்கள் பிரச்சினைகள் குறித்து ‘துனியா ந மானே’, பாலியல் தொழிலில் இருந்து மீள நினைக்கும் பெண்ணின் வாழ்க்கையை ‘ஆத்மி’ (1939) ஆகிய படங்கள் எடுத்துக்காட்டியது. இந்து - முஸ்லிம் ஒற்றுமையை ‘படோஸி’ திரைப்படம் வலியுறுத்தியது.
1941-ல் பிரபாத் ஸ்டுடியோவை விட்டு விலகி ‘ராஜ்கமல் கலா மந்திர்’ என்ற திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கினார். அதன்மூலம் தயாரிக்கப்பட்ட ‘சகுந்தலை’, வர்த்தக ரீதியில் வெளிநாட்டில் திரையிடப்பட்ட முதல் திரைப்படம். இவரது ‘டாக்டர் கோட்னிஸ் கீ அமர் கஹானி’ திரைப்படம் சோஷலிச நாடுகளில் புகழ்பெற்றது.
1957-ல் இவரது ‘தோ ஆங்க்கே பாரஹ் ஹாத்’ திரைப்படம் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ‘வெள்ளிக் கரடி’ விருது பெற்றது. எம்.ஜி.ஆர். இந்த படத்தை தமிழில் ‘பல்லாண்டு வாழ்க’ என்ற பெயரிலும் இவரது ‘அப்னா தேஷ்’ படத்தை ‘நம் நாடு’ என்ற பெயரிலும் எடுத்தார்.
1959-ல் இவர் தயாரித்த ‘ஜனக் ஜனக் பாயல் பாஜே’ திரைப்படம், இந்தியாவின் முதல் கலர் படம் அவருக்கு பாராட்டுகளை அள்ளிக் குவித்தது.
சமூக முற்போக்குச் சிந்தனைகளை கலை வடிவத்துக்கேற்ப மாற்றி எவ்வாறு திரைப்படமாக்குவது என்பதை இந்திய இயக்குநர்களுக்குக் கற்றுக்கொடுத்த மாமேதை சாந்தாராம். வாழ்நாள் சாதனையாளர் விருது, 1985-ல் தாதா சாஹேப் பால்கே விருது, 1992-ல் பத்ம விபூஷண் உள்ளிட்ட பல விருதுகளை வென்றவர்.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகத் திறன் படைத்த இவர் ஏறக்குறைய 60 ஆண்டுகாலம் திரைப்படத் துறையில் கோலோச்சி வந்தவர். 89-வது வயதில் காலமானார்.
No comments:
Post a Comment