மே ற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் எல்லையோர ஊர்களில் சிறுத்தை ஊருக்குள் நுழைவதும், அது சார்ந்த பிரச்சினைகளும் சமீபகாலத்தில் அதிகரித்துவிட்டன. ஆனால், சிறுத்தைகள் இப்படி ஊருக்குள் நுழைய யார், எது காரணம்? நமது செயல்பாடுகள் சிறுத்தைகள் வரவை எப்படி ஊக்குவிக்கின்றன?
இயற்கைச் சமன்பாடு
சிவந்த பொன்னிற உடல். மார்பு, வயிறு, கால்கள், வால் நுனி வெண் நிறம். கறுத்த சின்னச் சின்னப் புள்ளிகளின் ஊடே பெரும்புள்ளிகளுடன் சுழல் வேகத்தில் திரும்புவதில், பாய்வதில் தனித்துவம் மிக்கத் தொன்மையான விலங்குதான் சிறுத்தை.
காட்டில் புலிகளுக்கு அடுத்தபடியாகச் சிறுத்தைதான் ஆகிருதியான விலங்கு என்றாலும், தங்களது வாழிடங்களுக்கு அருகில் சிறுத்தைகள் வாழப் புலிகள் அனுமதிப்பதில்லை. தாவர உண்ணிகள் அதிகமுள்ள இடங்களில் சிறுத்தைகள் திரிவதைப் புலிகள் ஏற்பதில்லை. இயற்கைச் சமன்பாட்டில் யுகம் யுகமாய்த் தொடரும் படிநிலை வளர்ச்சியின் விளைவுதான் இது.
உணவு தேடல்
அடர்ந்த காடுகளில் மறைந்து வாழும் புலிகளைப் போல் வாழ்பவை அல்ல சிறுத்தைகள். திறந்த வெளி, பள்ளத்தாக்கு, பாறைகள் நிறைந்த சிறு குன்றுகள், மனிதக் குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள தரிசு நிலங்கள், முட்புதர்கள் போதும் சிறுத்தைகள் வாழ்வதற்கு.
பரந்த காடுகள் வாய்த்த பகுதிகளில் மான், மயில், கேளையாடு, பன்றி, குரங்கு, காட்டுக்கோழி, முயல் என்று கிடைத்ததைத் தின்று காலம் தள்ளியவை சிறுத்தைகள்.
எதிர்கொள்ளல்
வானம் பார்த்த பூமியில் சோளம், கம்பு, கேழ்வரகுக் காடுகளில் பதுங்கி வளர்ப்பு நாய், கோழி, ஆடுகளைச் சிறுத்தை கவ்விப் போகும் என்பது வேளாண் மக்கள் பகிர்ந்துகொண்ட பட்டறிவு. இதெல்லாம் வெறும் கதைகள்தான் என்று நினைத் திருந்தோம் ஒருகாலத்தில்.
காடழித்து நகரங்கள் மூர்க்கமாக எழுந்த பிறகு, காட்டிலிருந்து இரை தேடி மனிதக் குடியிருப்புகளுக்கு வரத் தொடங்கின சிறுத்தைகள். பத்தாண்டுகளுக்கு முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிகழ்ந்த 'சிறுத்தை - மனித எதிர்கொள்ளல்' (Leopard - man conflict) கடந்த மூன்று மாதங்களில் உச்சத்தை அடைந்துள்ளது. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
என்ன நடக்கிறது?
தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்திலும், குடியிருப்புப் பகுதிகளிலும் சிறுத்தைகள் நுழையும்போது, மனிதர்கள் பீதிக் குள்ளாவது அன்றாடம் நிகழ்கிறது. சிறுத்தை அடித்துத் தின்றது போக மீதம் வைத்த ஆடு, கன்று இறைச்சியில் நஞ்சு தடவி மறுபடியும் அவை தின்று சாகட்டும் என்கிற வன்மம் கொண்ட மனிதர்களும் மலைப் பகுதிகளில் இருப்பது கசப்பான உண்மை.
கூடலூரில் பாண்டியாறு டான்டீ தேயிலைத் தோட்டத்தில் செடிகளுக்கு இடையே பிறந்து இரண்டு வாரமான சிறுத்தைக் குட்டியை வனத் துறையினர் மீட்டிருக்கிறார்கள். தாய் சிறுத்தை என்னவாயிற்று என்ற கேள்விக்கு யாரிடத்திலும் பதிலில்லை!
சிறுத்தை வளர்ப்பு
ஈனும் குட்டிகளைக் கவனமாக வளர்க்கும் தேர்ந்த விலங்குகளில் சிறுத்தையும் ஒன்று. முழுப் பொறுப்புடன் தாய் குட்டிகளை வளர்க்கும். பிறந்து நான்கு மாதங்களில் குட்டிகளுக்கு வேட்டைப் பயிற்சி அளிக்கும், குட்டிகள் தாயின் வாலை இரை இலக்காக வைத்துப் பயிற்சி பெறும். வாலை நாற்புறமும் அசைத்துத் தாய் அலைக்கழிக்கும். இரை இலக்கை நுட்பமாய் அவதானிக்கும் குட்டிகளை, தனித்து வேட்டையாடத் தாய் அனுமதிக்கும்.
குரங்கும் சிறுத்தையும்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியான குண்டேரிப்பள்ளம், பெரும்பள்ளம், திம்பம் மலைப்பாதை போன்ற பகுதிகளில் இரண்டு மாதங்களில் மூன்று பேர் சிறுத்தைக்குப் பலியாகியுள்ளனர். திம்பம் மலைப் பாதையில் பயணிப்போர் மீந்த உணவைக் குரங்குகளுக்குப் போட்டுப் பழக்கப்படுத்தியுள்ளனர். எந்நேரமும் பாதை நெடுகிலும் மனிதர்களின் வருகைக்காகக் குரங்குகள் கையேந்திக் காத்திருக்கின்றன.
குரங்குகளைத் தேடி வரும் சிறுத்தைகள் மலைப் பாதையில் இரவு நேரத்தில் சிறுநீர் கழிக்கும் மனிதர்களைத் தாக்கியதால், சிலர் இறந்துள்ளனர். இதில் ஒருவர் வனத் துறையைச் சேர்ந்தவர். நீலகிரி மாவட்டம் பந்தலூர், ஊட்டியில் உள்ள தமிழகம் குடியிருப்பு, மஞ்சூர், கூடலூர், மேட்டுப்பாளையம் நகர் ஆகிய பகுதிகளில் சிறுத்தை - மனித எதிர்கொள்ளல் தீவிரமடைந்து வருவது பெரும் கவலை தரக்கூடியது. சிறுத்தைகள் மனிதக் குருதியிலுள்ள உப்புச் சுவையை ருசித்துப் பழகிவிட்டால், நிலைமை மேலும் மோசமாகும்.
இன்னொன்று எங்கே?
திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அமராவதி வனச் சரக எல்லைகளில் சிறுத்தை நடமாடுவதால் அமராவதி நகர், பெரும்பள்ளம், சாயப்பட்டறை பகுதிகளில் வசிக்கும் சுமார் 5 ஆயிரம் பேர் அச்சத்தில் உறைந்துள்ளனர். இப்படி நடமாடும் சிறுத்தை இரவு நேரங்களில் நாய், ஆடு, கோழிகளைப் பிடித்துச் செல்கிறது.
அருகில் உள்ள சைனிக் பள்ளியில் பயிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் பாதுகாப்பு கருதி வனத் துறை மூன்று கூண்டுகள் வைத்த பிறகு, சிறுத்தை கூண்டில் அகப்பட்டது. இதை நினைத்து நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள் வேறொரு சிறுத்தையின் நடமாட்டம் தென்பட்டது. வால்பாறையிலிருந்து சிறுத்தையைப் பிடிப்பதில் கைதேர்ந்த ஏழு பேர் கொண்ட குழு களத்தில் இறங்கிக் கூண்டுடன் காத்திருக்கிறார்கள்.
பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு சிறுத்தையைப் பிடித்து அடர்ந்த காட்டில் (?!) விடும்படி உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர். மேற்கு மலைத் தொடரில் சிறுத்தைகளின் எண்ணிக்கை பெருகிவிட்டதாகப் பலரும் கருதுகிறார்கள். உண்மையில் எண்ணிக்கையில் சொற்பமாகிவிட்ட சிறுத்தைகள், இயல்பாய் வாழும் சூழலை இழந்துவருவதையே இந்த நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இறைச்சிக் கழிவுகள்
அக்காமலை, அப்பர்பாரளை, தாய்முடி, வில்லோனி, வால்பாறையில் பகல் நேரத்திலும் சிறுத்தை நடமாடுகிறது. வால்பாறை நகரில் நள்ளிரவில் சாலையில் நடமாடிய சிறுத்தை. பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான செய்தி, அப்பகுதி மக்களிடையே பதற்றத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் சிறுத்தை களால் எட்டுப் பள்ளிக் குழந்தைகள் பலியாகியுள்ளனர், மனிதர்களாலும் 13 சிறுத்தைகள் கொல்லப்பட்டிருக்கின்றன. நான்கு கூண்டில் சிக்கின.
இப்பகுதி எங்கும் இறைச்சிக் கடைகள் உள்ளன, இறைச்சிக் கழிவுகள்: திறந்த வெளியில் கொட்டப்படுகின்றன. இதன் வாசத்தால் ஈர்க்கப்படும் சிறுத்தைகள், இப்பகுதிகளில் எளிதாக நுழைந்து விடுகின்றன என்று இயற்கை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். வெட்டவெளியில் கழிவுகளைக் கொட்ட வேண்டாமென வனத்துறையும் எச்சரித்துள்ளது.
யார் கையில்?
இப்படிப் பல்வேறு காரணங்களால் சிறுத்தைகள் ஊருக்குள் நுழைந்து, வளர்ப்பு விலங்குகளைப் பிடித்துச் செல்கின்றன. இந்தக் காரணங்களை மாற்றாமல் சிறுத்தை ஊருக்குள் வருவதைத் தடுக்க முடியாது. இதற்கு நேர்மாறாகச் சிறுத்தை மனிதக்கொல்லியாகிவிட்டது என்று மூடநம்பிக்கைகளைப் பரப்புவது பிரச்சினையை மேலும் குழப்பமாக்கும்.
மனிதர்கள் தங்கள் செயல்பாடுகளை அறிவுபூர்வமாக மாற்றிக்கொண்டால்தான், விலங்குகள் அவற்றின் இயல்பில் இருக்கும்.காடழித்து நாடாக்கியதால் காட்டுயிர்கள் அலைக்கழிக்கப்பட்டு மனிதர்கள் பெருகிவிட்ட தேசத்தில் சிறுத்தைகள் இனம் இன்னும் எத்தனை நாட்கள் உயிர் வாழும் என்பது நிச்சயமாய் நம் கையில்தான் உள்ளது.
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: kurinjisadhasivam@gmail.com
தொடர்புக்கு: kurinjisadhasivam@gmail.com
No comments:
Post a Comment