Tuesday, 18 November 2014

நீங்களும் விஞ்ஞானிதான்!

சூரியன் தலை நீட்டிப் பார்க்காத அதிகாலை வேளை. தியாகராஜனும், தேவாவும், ஆப்ரஹாமும் சென்னையின் தென் பகுதியில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிக்கு அப்போதே வந்துவிட்டார்கள். பிறகு பள்ளிக்கரணையின் வெவ்வேறு பகுதிகளுக்குப் பிரிந்து சென்று பறவைகளைக் கணக்கெடுக்க ஆரம்பித்தனர். சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு அவர்களுக்குப் பயிற்சியளித்து, இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் திருநாரணனுடன் சேர்ந்து, அன்று அவர்கள் பார்த்த பறவைகளின் பட்டியலை eBird இணையதளத்தில் பதிவேற்றினார்கள்.
அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. காலையில் அந்த வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பியதும் அவர்களுடைய வீட்டுப்பாடங்களை எழுதவோ, படிக்கவோ வேண்டும். ஆம், அவர்கள் அனைவரும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிக்கும் மாணவர்கள்; பறவை ஆராய்ச்சியாளர்கள் அல்ல. சென்னையைச் சேர்ந்த இயற்கை அறக்கட்டளை (The Nature Trust) எனும் குழுவின் உறுப்பினர்கள். இவர்கள் இப்படி உருப்படியாகப் பொழுதைக் கழித்து ஓர் இடத்திலிருக்கும் பறவைகளின் வகைகளையும், எண்ணிக்கையையும் பட்டியலிடுவது, ஆராய்ச்சியாளர்களும் பறவையியலாளர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கிறது. ஏனென்றால், ஆராய்ச்சியாளர்கள் எல்லா இடங்களுக்கும் எல்லா நேரத்திலும் சென்று, இது போன்ற பணிகளைச் செய்வது முடியாத காரியம். ஆகவே, இது போன்ற இயற்கை ஆர்வலர்களின் பணி அவர்களுக்குப் பேருதவி புரிகிறது.
மக்கள் அறிவியல்
காட்டுயிர்களை, இயற்கையான வாழிடங்களைப் பாதுகாப்பதிலும், அது தொடர்பாக நடைபெறும் அறிவியல் ஆராய்ச்சிகளிலும் சாதாரண மக்கள் பங்களிக்க முடியுமா என்று கேட்டால், நிச்சயமாக முடியும். சொல்லப் போனால் பல அறிவியல் ஆராய்ச்சிகளிலும், பல்லுயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் மக்களின் பங்களிப்பு பெரிதும் அவசியம். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் இது போன்ற பங்களிப்புகள் தற்போது பெருகிவருகின்றன. இதுபோல அறிவியல் ஆராய்ச்சிக்குச் சாதாரண மக்கள் உதவும் திட்டங்களுக்கு மக்கள் அறிவியல் (Citizen science) என்று பெயர்.
புறஉலகைப் போற்றுதல், சுற்றுச்சூழல் சீரழியாமல் பாதுகாத்தல், காட்டுயிர்களைப் பேணுதல், வாழிடங் களை மதித்தல், நேர்மையான - பொறுப்பான முறையில் இயற்கையை ரசித்து அனுபவித்தல் ஆகியவற்றைப் பற்றிய புரிதலைப் பொதுமக்களுக்கும், இளைய தலைமுறைக்கும் சுற்றுச்சூழல் கல்வி (Environmental Education) அல்லது இயற்கைக் கல்வியின் (Nature Education) மூலம் எடுத்துரைக்க முடியும்.
இருந்தாலும், வகுப்பில் பாடமாக ஒன்றைப் படிப்பதைவிட தாமாகவே இவற்றின் அவசியத்தை உணர்ந்தால், ஒருவரின் மனதில் இவற்றைப் பற்றிய புரிதல் ஆழமாகவும் எளிதாகவும் பதியும். ஒரு முறை இப்படி உணர்ந்துவிட்டால் இயற்கைப் பாதுகாப்பிலும், சுற்றுச் சூழலைப் பேணுவதிலும் விருப்பம் ஏற்பட்டு வாழ்நாள் முழுவதும் அது சார்ந்த நற்செயல்களையும், நற்பண்புகளையும் ஒருவர் கடைபிடிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
பிளாஸ்டிக் எமன்
உதாரணமாக, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்காமல் துணிப்பையை எடுத்துச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள இளைய தலைமுறையிடம் வலியுறுத்துவது, ஒரு வேளை அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். அப்படி வெறுமனே வலியுறுத்திக்கொண்டு மட்டும் இருக்காமல், பெற்றோர்களே முன்னுதாரணமாக இருந்து இதைக் கடைபிடித்தால், அவர்களைப் பார்த்து வாரிசுகள் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதிகம்.
பிளாஸ்டிக் குப்பை குவிந்து கிடக்கும் அசிங்கமான காட்சியை வீடியோவாக, ஒளிப்படங்களாகக் காட்டும்போது இது குறித்த புரிதல் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. அல்லது பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடக்கும் இடங்களுக்கு நேரடியாக அழைத்துச் சென்று காண்பித்தால், அக்காட்சி அவர்களின் உணர்வைத் தூண்டிச் சுற்றுச்சூழலுக்குப் பாதகமான செயல்களைச் செய்யாமல் இருக்க வழியமைக்கும்.
இயற்கை புரிதல்
அதுபோலக் காட்டுயிர்களையும் அவற்றின் இயற்கையான வாழிடங்களையும் பற்றி வகுப்பிலோ, கருத்தரங்குகளிலோ பல மணி நேரம் சொல்லிக் கொடுப்பதைக் காட்டிலும், அவை வாழும் இடங்களுக்கே அழைத்துச் சென்று காட்டுவது நல்லது. ஏனென்றால், படிப்பதைக் காட்டிலும் நேரடி அனுபவத்தில் கிடைக்கும் பட்டறிவே சிறந்தது. இதற்காக வெகு தொலைவு பயணம் செய்துதான் காட்டுயிர்களைப் பார்க்கவேண்டும் என்பதில்லை.
நம் வீட்டில் இருக்கும் சிலந்தி, பல்லி, வீட்டைச் சுற்றித் திரியும் பல வகைப் பறவைகள், அணில், பல வகை அழகிய தாவரங்கள், மரங்களைப் பார்த்து ரசிக்கலாம். நகரத்தில் வசித்தாலும் அங்கும் இயற்கையாகச் சுற்றித் திரியும் (வளர்ப்பு உயிரினங்கள் அல்லாத) பல உயிரினங்களும், பல வகை மரங்களும், செடி கொடிகளும் இருக்கவே செய்கின்றன.
ஆராய்ச்சியில் பங்களிக்கலாம்
இப்படிப் புறஉலகின் மேல் ஆர்வத்தைத் தூண்ட, கரிசனம் காட்ட மற்றொரு வழி சாதாரண மக்களையும், மாணவர்களையும், இயற்கை ஆர்வலர்களையும் அறிவியல் ஆராய்ச்சியில், அதாவது மக்கள் அறிவியல் திட்டங்களில் பங்குபெற வைப்பது. இதனால் புறஉலகைப் பற்றிய புரிதலும், இயற்கையின் விந்தைகளை நேரிடையாகப் பார்த்து அனுபவிக்கும் வாய்ப்பும், மற்றொரு புறம் இது தொடர்பாக நடக்கும் ஆராய்ச்சிகளுக்கு நேரிடையாகப் பங்களிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
மக்கள் அறிவியல் திட்டங்களின் தலையாய நோக்கங்களில் ஒன்று, இத்திட்டங்களில் பங்குபெறுவோர் வெறும் தகவல் சேகரிக்கும் வேலையைச் செய்பவர்களாக இல்லாமல் அதை ஏன் செய்ய வேண்டும் என்கிற அறிவியல் பின்னணியைத் தெரிந்துகொள்வதும், அதைப் பற்றிய அறிவைப் பெருக்கிக்கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டுவதும், ஒரு பொறுப்பான இயற்கை ஆர்வலருக்கான பண்பை வளர்ப்பதற்காகவும்தான்.
வளர்ந்த நாடுகளில் மக்கள் அறிவியல் திட்டங்களும், அதற்கு மக்கள் பங்களிப்பும் அதிகம். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இப்போதுதான் இவை தொடங்கப்பட்டுவருகின்றன. அதிக மக்கள்தொகையுள்ள நாடுகளில், அறியப்படாத அறிவியல் தகவல்கள் பலவற்றைப் பெருமளவு சேகரிக்க இது போன்ற திட்டங்கள் உதவும். அத்துடன் இத்திட்டங்களின் மூலம் சுற்றுச்சூழல் பேணல், இயற்கை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை பலருக்கும் ஊட்ட முடியும்.
நம் நலனுக்காக
சாதாரண மக்களின் உதவியுடன் இதுபோன்ற மக்கள் அறிவியல் திட்டங்கள் செயல்படுத்தப்படுவது, நாம் அனைவரும் வாழும் இப்பூவுலகின் நலனுக்காகவே. ஆகவே இதற்குப் பங்களிப்பவர்கள் நேர்மையாக இருந்து, உண்மையான தகவலையே அளிப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் இத்திட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆகவே, இது போன்ற திட்டங்களுக்குப் பங்களிப்பவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியம்.
பல்லுயிர் பாதுகாப்புக்கும், சுற்றுச்சூழல் பேணலுக்கும் இயற்கை ஆர்வலர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மட்டுமே பங்களிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கைப் பாதுகாப்பு, புறஉலகின் பால் கரிசனம் போன்றவை இந்தப் பூமியில் வாழும் ஒவ்வொருவருக்கும் அவசியம் இருக்க வேண்டிய பண்புகள். அதற்கான வாய்ப்பை மக்கள் அறிவியல் திட்டங்கள் அனைவருக்கும் அளிக்கின்றன.
கட்டுரையாளர், 
காட்டுயிர் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: jegan@ncf-india.org

No comments:

Post a Comment