Monday, 17 November 2014

மின்சாரம் இல்லாத உலகுக்கு வாருங்கள்!

‘வாழ்க்கை என்பது மெய்மறந்த இன்பம்’ என்று ரால்ப் வால்டோ எமர்சன் தன்னுடைய ‘இயற்கையின் வழிமுறை’ என்ற கட்டுரையில் எழுதியிருக்கிறார். அமெரிக்காவில் பரவியிருக்கும் ஆழ்நிலைத் தியானம் தொடர்பானது அந்தக் கட்டுரை. வாழ்க்கை என்பதே மின்சாரம் போன்றது, நம்முடைய மனமும் இதயமும் அதற்குச் சான்று.
மேகத்திலிருந்து மின்னல் உருவாவதையும் அந்த மின்னல்தான் மின்சாரம் என்பதையும் பார்த்து வியந்திருக்கிறோம். இப்போது அதை நாமே தயாரித்து கம்பி வழியாகக் கடத்தி விளக்குகளை எரிக்கிறோம், மின்விசிறிகளைச் சுழற்றுகிறோம், குளிர்சாதனப்பெட்டியிலும் பயன்படுத்துகிறோம்.
தணிக்கை செய்யப்பட்ட வாழ்க்கை
வானம் காட்டும் வர்ணஜாலத்தைப் பார்க்க மறுத்து நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் சேவையைப் பெற்று இணையதளத்தில் நம்மை இழந்துவிடுகிறோம். வடிகட்டிய திரை வழியாக வாழ்க்கையைக் கழிக்கும்
போது, நம்முடைய வாழ்க்கையே நகல் வாழ்க்கையாகிவிடுகிறதா? உடலசைவும் குரலசைவும் இன்றி, தணிக்கையின்போது தாறுமாறாக வெட்டித்தள்ளப்பட்ட திரைப்படத்தைப் போல வாழ்க்கையே தொடர்ச்சியும் உயிரோட்டமும் இல்லாமல் வறண்டுவிடுகிறதா? நம்முடைய முதுகு கூன் மேலும் வளைகிறதா அல்லது நிமிர்கிறதா? இப்போது நம்முடைய எண்ணமெல்லாம் கூகுள் மூலம் நாம் தேடுவதைக் கண்டுபிடித்துவிட முடியுமா என்பதைச் சுற்றித்தான்; குயில் கூவுவதையும் காகம் கரைவதையும் கிளி பேசுவதையும் கேட்பதே குறைந்துவிட்டதல்லவா?
‘சிங்கிங் இன் த ரெய்ன்’ படத்தில் ஜீன் கெல்லி மழையில் நனைந்தபடி நடனமாடுவதை மற்றவர்களைப் போல நானும் விரும்பி ரசிக்கிறேன், மொசார்ட்டிலிருந்து ஃபெலினி வரையில் நாளின் எந்தப் பொழுதிலும் கேட்பதை விரும்புகிறேன். ஆனால், மின்சாரம் என்பது பிராங்கின்ஸ்டைனின் இயந்திர ராட்சசனைப் போல நம்மை அடிமைப்படுத்திவிட்டதா? வாடிக்கை யாளருக்கு என்ன தேவை என்று அறிந்து கொடுப் பதற்குப் பதிலாக, தன்னிடம் என்ன இருக்கிறது என்று கொடுத்து வாடிக்கையாளரை அடிமைப்படுத்தும் வியாபார உத்திக்கு நாம் அடிமையாகிவிட்டோமா? உங்களுடைய துறையைச் சேர்ந்த நிபுணர்கள் அனைவரிடமும் கேள்வி கேட்டுப் பதில் பெற மின்னஞ்சல் சரியான சாதனம். அதையே சிலர் தற்கொலைக்குச் சமமானது என்கின்றனர். தோள் மீது கை போட்டு, ஆதரவான குரலில் பேசி, சந்தேகங் களைப் போக்குவதற்கு அது ஈடாகிவிடுமா?
தவளைப் பாடல்
சக்கரங்கள் உராய்வில் தேயாமல் இருக்க மசகு எண்ணெய் போட வேண்டும். அளவுக்கு மீறினால் சக்கரங்கள் ஒன்றோடு ஒன்று பொருந்தாமல் வழுக்கிவிடும். எனவே, ஆண்டுக்கு 4 மாதங்கள் மின்சாரம் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத மலைப் பகுதியில் வசிக்கிறேன். அதனால், ஐம்பதாண்டு காலத்துக்கு முந்தைய வாழ்க்கைக்குச் சென்று திரும்புகிறேன். கோடைக் காலத்தில் வெயிலோடு ஒன்றி வாழ்வதைப் போன்ற எளிமை எதுவுமில்லை. பகல் நேரத்தில் அதிக சூரிய வெளிச்சம் இருக்கிறது. நிலாக் காலத்திலோ அண்டங்காக்கைகள், ஆந்தைகள், மஞ்சள் குருவிகள், நீர்ப்பறவைகள் ஆகியவற்றின் குரலைக் கேட்டு ஆனந்தமாகக் கழிக்கிறேன். தொலைக்காட்சியின் ஓசையும் தொலைபேசி அழைப்பும் குளிர்காலத் தொடக்கத்தில்தான் காதில் விழும். இலைகளின் சலசலப்பும், தவளைகளின் வசந்தகாலப் பாட்டுகளும், நாரைகளின் மீன் வேட்டையும் கண்கொள்ளாக் காட்சிகள்.
மின்சார வசதியுள்ள இடத்துக்கு வந்தவுடன் இந்த இன்பங்கள் தொடராது. வெர்மாண்ட் நகருக்கு வந்தால், குளிர்காலத்தில் மின்சாரத்தின் பயன்பாடு அவசியமாகிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் இப்போதெல்லாம் சூரியோதயத்தையோ சூரியன் மறைவதையோ நேரில் பார்ப்பதில்லை, திரையில்தான் காண்கிறார்கள். வடக்கொளியும் (நார்தர்ன் லைட்ஸ்), சப்தரிஷி மண்டலமும் பழைய கணக்கு வாய்ப்பாடுபோல வழக்கொழிந்துபோய்விட்டனவா? சூரியனிலிருந்து வரும் கதிர்கள், காந்த மண்டலத்தால் விலக்கப்பெற்று வண்ணவண்ணக் கோடுகளாக வர்ண ஜாலங்கள் காட்டுவதை (வடக்கொளி) பார்த்தால் செப்புக் காலத்துக்கே போய்விடுவோமே? நிஜங்களைப் பார்க்காமல் கணினியில் மூழ்கிவிட்டால் நம்முடைய மகிழ்ச்சி குறைந்துவிடுமா? படைப்பின் ரகசியங்களை இதுவரை பார்த்து அதிசயித்திராத வகையில் காண சைபர்ஸ்பேஸும் ஃபேஸ்புக்கும் உதவுவதை மறுக்க முடியாது.
எடிட் செய்யப்படும் இயற்கை
ஆனால், மேகம் என்பது மேகமாக இல்லை. வன விலங்குகள் ஆப்பிரிக்காவில் படம் பிடிக்கப் படுகின்றன. ஆனால், நியூயார்க்கில் எடிட் செய்யப்படுகின்றன. கேமராக்காரரின் தோளில் விழுந்த மழைத் துளியும் ஒளிரும் மரத்தண்டும் பார்வைக்கே வருவதில்லை. ஆன்லைனில் புழங்குபவருக்குக் கழுத்து இருக்கிறதா? எங்கோ, எந்த நாட்டிலோ நடைபெறும் இசை நிகழ்ச்சியையும் விளையாட்டுகளையும் தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்கிறோம்; கோடைக்காலத்தில் மலர்கள் பூத்துக்குலுங்கும் நந்தவனத்தில் மல்லாந்து படுத்து ஒரு குழந்தையை அரவணைத்துக்கொண்டிருக்கும்போது கிடைக்கும் இன்பத்துக்கு அது ஈடாகுமா? வெளியுலகில் நடப்பதை மட்டுமல்ல, நேரடி அனுபவங்களைக்கூட ரசிக்க முடியாமல் சைபர்ஸ்பேஸ் நம்மைத் தடுத்து விடுமா?
- © தி நியூயார்க் டைம்ஸ்

No comments:

Post a Comment