சிகாகோ நகரமே பரபரப்பாக இருந்தது. 635 அடி (50 மாடி) உயரம் கொண்ட லியோ பர்னட் கட்டிடத்திலிருந்து 588 அடி உயரம் கொண்ட மரினா வெஸ்ட் டவருக்கு இணைக்கப்பட்ட கேபிள் வயர் மீது நடக்க ஆரம்பித்தார் நிக் வாலெண்டா! உயிருக்கு உத்திரவாதம் இல்லாத இந்தச் சாதனை முயற்சியில் பாதுகாப்புக் கவசமோ, வலைகளோ பயன்படுத்தப்படவில்லை.
என்ன நிகழுமோ என்ற கவலையில் மக்கள் திகிலுடன் பார்த்துக்கொண்டிருக்க, 454 அடி தூரத்தை 6 நிமிடங்கள், 52 நொடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார்! பிறகு மரினா ஈஸ்ட் டவருக்கு 94 அடி தூரத்தை, கண்களைக் கட்டிக் கொண்டு 1 நிமிடம் 17 நொடிகளில் கடந்து மற்றோர் உலக சாதனை நிகழ்த்திவிட்டார்!
ஏன் இந்த ஆபத்தான விளையாட்டு?
“கனவுகளைத் துரத்திக்கொண்டிருப்பவர்களுக்கு உத்வேகம் அளிக்கத்தான்.
ஒருபோதும் உங்கள் கனவுகளை விட்டுக் கொடுக்காதீர்கள்!’’ என்கிறார் நிக் வாலண்டா.
யார் இந்த நிக்?
35 வயதான நிக் வாலண்டா பிறந்தது அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடாவில். 7 தலைமுறைகளாக சர்க்கஸில் ஈடுபட்டு வரும் குடும்பம். யாரும் கற்றுக்கொடுக்காமலே இரண்டு வயதிலேயே கயிற்றில் நடக்க ஆரம்பித்துவிட்டார் நிக். நான்கு வயதில் பிறர் உதவியின்றி நடக்க ஆரம்பித்தவர், சர்க்கஸ்களிலும் பங்கேற்றார். படிப்பும் சர்க்கஸுமாக நிக்கின் வாழ்க்கை சுவாரஸ்யமாகக் கழிந்தது. 13 வயதில் கயிற்றில் நடக்கும் வித்தையைப் பொதுமக்களிடம் செய்துகாட்ட ஆரம்பித்தார்.
“பள்ளிப் படிப்பை முடித்தவுடன் சர்க்கஸா, படிப்பா என்று முடிவெடுக்கும் சுதந்திரத்தை என் பெற்றோர் கொடுத்தனர். டாக்டர் ஆகும் முடிவில் கல்லூரிக்குச் சென்றேன். ஆனால் சர்க்கஸில்தான் என் எதிர்காலம் என்று தோன்றியது. உடனே கல்லூரியிலிருந்து வெளிவந்தேன்.
எங்கள் சர்க்கஸ் கம்பெனியில் பல புதுமைகளைக் கொண்டு வந்தேன். அதேநேரம் என்னையும் வளர்த்துக்கொண்டேன்.’’
ரோல் மாடல் யார்?
“என்னுடைய ரோல் மாடல் என் தாத்தா கார்ல் வாலண்டாதான்! அவர் மிகப் பெரிய கலைஞர். ஒரு சாதனை முயற்சியில் அவர் மரணமடைந்தார். இதுபோன்ற பல மரணங்களை எங்கள் குடும்பம் சந்தித்திருக்கிறது.’’
மரணங்களைக் கண்டு பயமில்லையா?
“எனக்கும் முதுமையடைந்த பிறகு மரணத்தைச் சந்திக்கவே விருப்பம். அதற்காக அற்புதமாகக் கிடைத்த இந்த மனித வாழ்க்கையை வீணாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. மரணத்தைக் கண்டு பயமில்லை. அதேநேரம் என்னுடைய செயல்களில் கவனமாக இருக்கிறேன். அப்பொழுதுதானே நான் அடுத்தடுத்த சாதனைகளை நிகழ்த்த முடியும்?’’
முக்கியமான சாதனைகள் சில…
# 2001-ம் ஆண்டு 5 மாதங்கள் கடுமையான பயிற்சி செய்து, கேபிள் மீது 8 பேர் கொண்ட மனித பிரமிடை உருவாக்கி 6 நிமிடங்கள் நின்றதுதான் முதல் சாதனை. இது கின்னஸ் சாதனையாகவும் மாறியது. இதன் மூலம் தாத்தா கார்ல் வாலண்டாவின் கனவை நிறைவேற்றினார் நிக்.
# 2011-ம் ஆண்டு 250 அடி உயரத்தில் ஹெலிகாப்டரில் பறக்க ஆரம்பித்தார். முதலில் இரண்டு கைகளால் ஹெலிகாப்டரைப் பிடித்துக்கொண்டு பறந்தார். பிறகு ஒரு கை, ஒரு கால், இரண்டு கால்கள் என்று பறந்தார். கடைசியில் பற்களால் பிடித்தபடி பறந்து மொத்தம் 6 உலக சாதனைகளை நிகழ்த்தினார்.
# 2012. நொடிக்கு சுமார் 22.5 லட்சம் லிட்டர் தண்ணீர் ஆர்ப்பரித்து விழும் நயாகரா அருவி மீது கேபிள் வயரில் நடந்து சாதனை செய்தார். கீழே ஆக்ரோஷமான அருவி, குளிர்ந்த காற்று, அருவியின் மையப்பகுதியில் பனிமூட்டம்… 1,800 அடி உயரத்தில் 26 நிமிடங்கள் நடந்து நிக் இறங்கியபோது, லட்சக்கணக்கான மக்கள் பிரமாதமான வரவேற்பை அளித்தனர்.
# 2013. கிராண்ட் கேன்யன் பள்ளத்தாக்கில் கேபிள் மூலம் கயிற்றில் நடந்தார். கொலரோடா நதி கீழே ஓடிக்கொண்டிருக்க, 1500 அடி உயரத்தில் நடந்து சாதனை படைத்தார் நிக்.
# 2014. சிகாகோவில் கண்களைக் கட்டியபடி கயிற்றில் நடந்தது நிக்கின் 9-வது உலக சாதனை!
குடும்பம்?
“என் மனைவியும் சர்க்கஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். அவரும் குழந்தைகளும் என்னைப் புரிந்து வைத்திருக்கிறார்கள். நிம்மதியான வாழ்க்கை இல்லாவிட்டால் இதுபோன்ற சாதனைகளைச் செய்ய முடியாது. கயிற்றில் ஒருமுறை நடந்துகொண்டிருந்தபோதுதான், கீழே நின்றுகொண்டிருந்த எரெண்ட்ராவிடம் என்னைத் திருமணம் செய்துகொள்கிறாயா என்று கேட்டேன். அடுத்தது என்ன?
“மச்சு பிச்சு, ஈபிள் டவர், பிரமிடுகளில் ஏதாவது நிகழ்த்தவேண்டும் என்று மூளைக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது.’’
ஆசைக்கு அளவே இல்லையா?
’’மிகச் சிறிய வயதிலேயே நான் கனவு காண ஆரம்பித்துவிட்டேன். அதை வேகமாகச் செயல்படுத்தியும் விட்டேன். என் துறையில் நான் உச்சபட்ச சாதனைகளைப் படைத்துவிட்டேன் என்பது உண்மைதான். ஆனாலும் போதும் என்று என்னால் சும்மா இருந்துவிட முடியவில்லை. அடுத்தடுத்து சாதித்துக்கொண்டிருப்பதில்தான் வாழ்க்கையின் சுவாரஸ்யமே அடங்கியிருக்கிறது!’’
உலகம் முழுவதும் பல கோடி மக்கள் நிக்கின் விசிறிகளாக இருக்கிறார்கள். “எப்போதும் எல்லோருக்கும் நான் சொல்வது இந்த மூன்று வார்த்தை களைத்தான் : நெவர் கிவ் அப்! அடிக்கடி உங்களுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள். நிச்சயம் உங்கள் லட்சியம் நிறைவேறும். ஏனென்றால் நானும் அதைத்தான் அடிக்கடி சொல்லிக்கொள்கிறேன்!’’
No comments:
Post a Comment