Monday, 10 November 2014

அரசுதான் செலவு செய்ய வேண்டும்

எதிர்காலத்துக்காகக் கட்டமைக்கும் நாடாக ஒரு காலத்தில் இருந்தது அமெரிக்கா. சில வேளைகளில் அரசாங்கம் நேரடியாகவே கட்டமைப்பு வேலைகளைச் செய்தது. பல்வேறு கட்டமைப்புத் திட்டங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழ்ந்தன.
பெரிய அளவிலான முதலீடு செய்வது அவசியம் என்றாலும், முதலீடு செய்வதற்கேற்ப பணம் குறைந்த வட்டிக்கு நிறையக் கிடைக்கிறது என்றாலும், அமெரிக்கர்கள் இப்போது முதலீடு செய்வதில்லை. அரசியல் செயலிழப்புதான் இதற்குக் காரணம் என்றோ வேறு ஏதோ ஒன்றையோ காரணமாகக் கூறாதீர்கள். முதலீடு செய்ய முடியாமல் முடங்கிப்போனதற்கு வாஷிங்டனிடம் உள்ள குறை ஏதும் காரணமல்ல; அமெரிக்கக் குடியரசுக் கட்சியை இப்போது ஆக்கிரமித்திருக்கும் பொருளாதார அழிவுச் சிந்தனைதான் காரணம்.
தேங்கிக்கிடக்கும் பணம்
வீடமைப்புத் துறையில் நிறுவனங்கள் நொறுங்கிப்போய் 7 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதிலிருந்து அமெரிக்காவில் சேமிப்பு குவிந்துகொண்டே வருகிறது. வேறு எதில் முதலீடு செய்வது என்று தெரியாமல் பணம் தேங்கத் தொடங்கிவிட்டது. புது வீடு வாங்கக் கடன்கள் வாங்குவது வழக்கத்தைவிட மிகமிகக் குறைவாகவே இருக்கிறது. பெருந்தொழில் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுகின்றன. ஆனாலும், பொருட்களை வாங்க நுகர்வோரிடம் ஆர்வம் இல்லையென்பதால், மேற்கொண்டு முதலீடு செய்யாமல் பணத்தை அப்படியே வைத்திருக்கின்றன; அல்லது தங்களுடைய நிறுவனப் பங்குகளை அதிக விலை கொடுத்து இதர பங்குதாரர்களிடமிருந்து வாங்கிக்கொள்கின்றன. வங்கிகளிடம் தேவைக்கும் அதிகமாக 2.7 டிரில்லியன் டாலர்கள் கையிருப்பாகக் குவிந்துள்ளன. இந்தப் பணத்தை அவை கடன் கேட்போருக்குக் கொடுக்காமல் சும்மாவே கையிருப்பில் வைத்துள்ளன.
விரும்பத் தக்க சேமிப்புக்கும் முதலீடு செய்ய விரும்பும் தொகைக்கும் உள்ள இடைவெளி அதிகமாக இருப்பதால், பொருளாதாரம் அழுந்தியே கிடக்கிறது. நீங்கள் செய்யும் செலவு என்னுடைய வருமானம், நான் செய்யும் செலவு உங்களுக்கு வருமானம் என்பதை மறந்துவிடக் கூடாது. எல்லோருமே செலவைக் குறைத்துக்கொள்வது என்று ஒரே சமயத்தில் நினைத்தால், எல்லோருடைய வருவாயும் ஒரே சமயத்தில் குறைந்துவிடுகிறது.
ஒரே தீர்வு
இந்த நிலையிலிருந்து விடுபட ஒரு தீர்வு இருக்கிறது. அது, பொதுநல நோக்கில் அரசு செய்ய வேண்டிய செலவு. அடித்தளக் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. நீர்வழிப் போக்குவரத்தையும் தரைவழிப் போக்குவரத்தையும் நாம் வளர்க்க வேண்டும். அமெரிக்க ஃபெடரல் (மத்திய) அரசு மிகக் குறைந்த வட்டியில் கடனைப் பெற்று இத்துறைகளில் செலவிடலாம். பணவீக்க உயர்வால் பாதிக்கப்படாத கடன் பத்திரங்களுக்கு இப்போது 0.4% வட்டிதான் கிடைக்கிறது. எனவே, சாலைகள் அமைக்க, கழிவுநீர்ப் பாதைகளைச் செப்பனிட குறைந்த வட்டிக்குக் கடன் பெற்று வேலைகளைத் தொடங்கலாம். ஆனால், நடப்பதென்னவோ தலைகீழாக இருக்கிறது. அதிபர் ஒபாமா பொருளாதார நடவடிக்கைகளுக்குச் சிறிது உத்வேகம் அளித்தபோது, சற்றே மீண்டதுபோலத் தெரிந்த நடவடிக்கைகள் - பொதுக் கட்டுமானங்கள் - சுணங்கிவிட்டன, ஏன்?
மாநில அரசுகளும் உள்ளாட்சி மன்றங்களும் தங்களுடைய வரவுசெலவில் பற்றாக்குறை அதிகமாகிவிடக் கூடாது என்பதற்காகச் செலவுகளைக் கணிசமாகக் குறைத்ததன் விளைவாகவே பொதுக் கட்டுமானங்களும் குறைந்துவிட்டன. வரவும் செலவும் சமமாக இருக்க வேண்டும் என்பது இந்த அரசுகளுக்கு எழுதப்படாத விதி. பொருளாதாரம் சுணங்கியிருப்பதால், அரசுகளுக்கு வரும் வருவாயும் குறைந்துவிட்டது. வருவாய் குறைந்துவிட்டதால் பல கட்டுமானங்களை ரத்துசெய்தன, அல்லது தள்ளிவைத்தன. இதனாலேயே சுணக்கம் அதிகமானது.
இப்படி நடந்திருக்கவே வேண்டியதில்லை. ஃபெடரல் அரசு மாகாணங்களுக்குத் தேவைப்படும் நிதியைத் தாராளமாக அனுமதித்திருக்கலாம். பொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு அளித்த ஊக்குவிப்புகளால் சில மாதங்களுக்குப் பொருளாதாரம் மீட்சியடைந்தது. நாடாளுமன்றத்தின் கட்டுப்பாடு குடியரசுக் கட்சியின் கைகளுக்கு வந்த பிறகு, இந்தச் செலவுகளையெல்லாம் அது நிறுத்திவிட்டது. எப்போதாவது அவர்கள் அரசு அதிகம் செலவு செய்ய வேண்டும் என்று பேசுவார்கள். ஆனால், உண்மையில் செலவு செய்ய முடியாமல் ஒபாமாவின் கையைப் பிடித்துவிடுவார்கள்.
அரசின் செலவு; மக்களின் வரவு
அரசாங்கம் அதிகம் செலவிடக் கூடாது என்ற சித்தாந்தத்தின் விளைவாகவே - ஆளும் கட்சி சாதித்துவிடக் கூடாது என்ற அசூயை காரணமாகவே, சமூகநலத் திட்டங்களைக் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். சுகாதாரத் திட்டங்களுக்குச் செலவிடுவதைக் குறையாகக் கருதினார்கள். ஏழைகளுக்கு எதற்கு மானியம், அதனால் ஒரு பலனும் சமுதாயத்துக்குக் கிடையாது என்று வெளிப்படையாகவே பேசினார்கள். இப்படி ஒவ்வொரு செலவினத்தையும் குறைகூறியவர்கள் அரசு எந்தச் செலவை செய்ய முற்பட்டாலும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கிவிட்டனர். அது அவசியமான செலவாக இருந்தாலும், பொருளாதார நிலைமை எப்படி இருந்தாலும் செலவழிக்கக் கூடாது என்று தடுத்துவருகின்றனர்.
வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக இருந்தபோதிலும், செலவைக் குறைக்க வேண்டும் அரசு என்றே வலியுறுத்தினர். அடித்தளக் கட்டமைப்புகளில் அரசு செலவைக் குறைக்க வேண்டும் என்றனர். இந்தப் போக்கைக் கண்டித்து ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ தலையங்கமே எழுதியது. தனியாரிடம் போகக்கூடிய நிதியை அரசு தன் வழியாகச் செலவிடும்போது, அது பொது பயன்பாட்டுக்கே வரும் என்று அது சுட்டிக்காட்டியது.
பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தக்கூடிய அடித்தளக் கட்டுமானங்களுக்குத் தனியார் துறையினர் செலவிட மாட்டார்கள். சாலைகள் அமைக்கவும் புதைசாக்கடைகள் கட்டவும் அவர்கள் முன்வர மாட்டார்கள். எல்லா வசதிகளையும் செய்துவைத்தால் பலனை அறுவடை செய்ய அவர்கள் தாராளமாக முன்வருவார்கள். அரசாங்கம் என்பது மோசமான நிர்வாகி, தனியார்துறைதான் சிறந்தது என்று இடைவிடாமல் ஓதும் பலருடைய காதுகளில் நம்முடைய நியாயவாதம் ஏறவே ஏறாது.
© தி நியூயார்க் டைம்ஸ்,
தமிழில்: சாரி

No comments:

Post a Comment