சட்டீஸ்கர் அரசு நடத்திய கருத்தடை முகாமில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்களில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அறுவை சிகிச்சை செய்து கொண்ட சுமார் 10 பெண்கள் உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்தடை சிகிச்சை செய்த 4 மருத்துவர்களை சட்டீஸ்கர் அரசு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
சட்டீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் என்ற பகுதியில் உள்ள நெமிசந்த் ஜெயின் புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கடந்த 8-ஆம் தேதி மாநில சுகாதாரத்துறை சார்பில் பெண்களுக்கான கருத்தடை முகாம் நடத்தப்பட்டது.
இதில், அந்த பகுதியைச் சேர்ந்த பல பெண்கள் கலந்துக்கொண்டதில், 83 பெண்களுக்கு கருத்தடைக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பெற்ற பெண்கள் அனைவரும் ஒரு நாள் ஓய்வுக்கு பின்னர் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில், சிகிச்சைப் பெற்ற பெண்களில் சிலர் தொடர் வாந்தி, மயக்கும், வயிற்று வலியால் அவதிப்பட்டு சுமார் 60 பேர் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மருத்துவமனைகளில் ஆங்காங்கே அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே, அதில் 8 பெண்கள் திடீரென அடுத்த இரண்டு நாட்களில் உயிரிழந்தனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் சித்தார்த் கோமல் பர்தேசி கூறுகையில், "கருத்தடைக்கு பின்னர் தாங்க முடியாத வலி மற்றும் உபாதைகள் காரணமாக சுமார் 60 பெண்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.இதில் உடல்நிலை மோசமடைந்த நிலையில் பிலாஸ்பூர் சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 8 பெண்கள் திடீரென உயிரிழந்தனர். அவர்கள் அனைவருமே 32 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
மேலும், மருத்துவமனைகளின் சிகிச்சைப் பெற்று வரும் குறைந்தது 10 பேரின் உடல்நிலை மோசமானதாக உள்ளது" என்றார். இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தவும் சிகிச்சையில் கோளாறு ஏற்பட காரணமாக இருந்த அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் சட்டீஸ்கர் அரசு உத்தரவிட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொற்றுக் கோளாறு ஏற்பட்டதே இந்த அசம்பாவிதத்துக்கு காரணம் என்று மாநில சுகாதாரத் துறை துணைத் தலைவர் அமர் சிங் தெரிவித்தார்.
மேலும், "விரிவான பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னர் முறையான காரணம் தெரியவரும் என்ற அவர், உயிரிழந்த பெண்களின் குடும்பத்துக்கு அரசு தலா ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளது" என்றார்.
முன்னதாக கடந்த 2011 முதல் 2013 வரை சட்டீஸ்கர் மாநிலத்தில் அரசு நடத்திய கண் பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு சிகிச்சை பெற்ற 44 பேர் பார்வை இழந்தனர். அதே போல 2012-ஆம் ஆண்டிலும் இந்த மாநிலத்தில் 4 பேருக்கு தவறான சிகிச்சை முறையால் பார்வை பறிபோனது கவனிக்கத்தக்கது.
No comments:
Post a Comment