‘நீங்களும் விஞ்ஞானி ஆகலாம். மக்கள் அறிவியல், ஆராய்ச்சித் திட்டங்களில் பங்காற்றலாம்' என்று கடந்த வாரம் பார்த்திருந்தோம். நம் நாட்டில் செயல்பட்டு வரும் காட்டுயிர்-சுற்றுச்சூழல் சார்ந்த முக்கிய மக்கள் அறிவியல் திட்டங்களைப் பற்றிப் பார்ப்போம்.
சீசன் வாட்ச் (Seasonwatch)
தாவரத்தின் வாழ்க்கைமுறையை ஆவணப்படுத்துவதன் மூலம் காலநிலை மாற்றத்தைப் (Climate change) புரிந்துகொள்ள முயலும் திட்டம். ஒரு தாவரம் இளந்தளிர், பூத்தல், காய், கனி தருதல் போன்றவை எந்த வாரத்தில், மாதத்தில் தோற்றுவிக்கின்றன என்பதை அவதானித்து இணையத்தில் ஆவணப்படுத்துவதே இத்திட்டம்.
உதாரணமாக வேப்பம்பூ சித்திரையில் பூக்கும். ஆனால் ஒவ்வோர் ஆண்டும் வேப்பமரம் சித்திரையில் சரியாகக் குறிப்பிட்ட தேதியில்தான் பூக்கிறதா, அல்லது சற்று முன்போ - தாமதமாகவோ பூக்கிறதா என்பதை அறிய, அது பூக்கும் நாளை/வாரத்தைத் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு ஆவணப்படுத்த வேண்டும்.
ஒரு வேளை தாமதமாகப் பூத்தால் தட்ப வெப்ப நிலை, மழையளவு போன்ற காரணிகளுக்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறதா என ஆராய்ந்து அறிய முடியும். மாத்ருபூமி மலையாளத் தினசரியின் SEED திட்டதின் கீழ் தற்போது கேரளாவிலிருந்து பல பள்ளி மாணவர்கள் இத்திட்டத்துக்குப் பங்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் அறிய: www.seasonwatch.in
மைக்ரண்ட் வாட்ச் (Migrantwatch)
நாடு விட்டு நாடு வலசை போகும் விருந்தாளிப் பறவைகள் குறிப்பிட்ட ஓரிடத்துக்கு வருவது எப்போது? அங்கிருந்து அவை மீண்டும் எப்போது திரும்பிப் போகின்றன? இதை அறியும் முயற்சியில் பத்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மக்கள் அறிவியல் திட்டம் இது. சரி, இதைத் தெரிந்துகொள்வதால் என்ன லாபம்? வலசை வரும் பறவைகள் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வந்து சேரும் நாட்களை ஆண்டாண்டு காலமாகக் கண்காணிப்பதன் மூலம், புறச் சூழலில் ஏற்படும் காலநிலை மாற்றங்களைக் கணிக்க முடியும். காலநிலை மாற்றத்தால் வலசைப் பறவைகளின் வலசைப் பயணமும் பாதிக்கப்படும். என்றாலும், இந்தியத் துணைக்கண்டத்தில் இது பற்றிய புரிதல்கள் இன்னும் தெளிவாக இல்லை. இதைப் பற்றிக் கூடுதலாக அறிந்துகொள்ளவே இத்திட்டம் தொடங்கப்பட்டது.
மேலும் அறிய: www.migrantwatch.in
ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (Great Backyard Bird Count - GBBC)
இந்நிகழ்ச்சி உலகம் முழுவதும் பிப்ரவரி மாதம் 13 முதல் 16-ம் தேதிவரை நடைபெறும். இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
உலகம் முழுவதும் உள்ள பறவைகளை ஒரே நேரத்தில் ஒவ்வோர் ஆண்டும் கணக்கிடுவதால், பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களை ஆண்டுதோறும் கண்காணிக்க முடியும். ஓரிடத்தில் அவற்றின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை வைத்து அதற்கான காரணங்களைக் கண்டறியவும் முடியும். வரும் ஆண்டு தமிழகத்தில் பொங்கல் நாள் பறவைகள் கணக்கெடுப்பு (Pongal Bird Count) நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக விரிவாக அறிய: <http://uyiri.wordpress.com/2014/02/10/gbbc/>
மேலும் அறிய: www.birdcount.in
இபேர்டு (eBird)
நாம் ஓரிடத்தில் பார்க்கும் பறவைகளின் பட்டியலை இந்த இணையதளத்தில் சேகரித்து வைத்துக்கொள்ளலாம். பலர் இவ்வாறு தங்களது அவதானிப்புகளைச் சமர்ப்பித்தால், பறவைகளின் பரவலையும், எண்ணிக்கையையும் இணையதளத் தொகுப்பு மூலம் அறிய முடியும். இதன்மூலம் பறவை நோக்குவோரும், பறவை ஆராய்ச்சியாளர்களும், சாதாரண மக்களும் பயனடைவார்கள். Migrantwatch, GBBC முதலிய திட்டங்களில் eBird இணையதளம் மூலமாகவே பறவைப் பட்டியலை, அவதானிப்பை உள்ளீடு செய்யலாம்.
மேலும் அறிய: www.ebird.org
இந்தியா பயோடைவர்சிட்டி போர்ட்டல் (India Biodiversity Portal)
இந்தியாவில் உள்ள அனைத்து உயிரினங்களைப் பற்றிய தகவல்களை ஓரே இடத்தில் சேகரிக்கும் திட்டம். உதாரணமாக ஒரு வண்ணத்துப்பூச்சி அல்லது ஒரு தாவரத்தைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் ஒரே பக்கத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருப்பதால், அனைவரும் இத்தகவல்களைப் பார்த்து அறிந்து பயன்பெறலாம். இந்த வலைவாசலில் உறுப்பினராக இருக்கும் பல அறிஞர்களிடமும் உயிரினங்களைப் பற்றிய சந்தேகங்களைக் கேட்டறிந்து கொள்ளலாம். உதாரணமாக நாம் காணும் ஏதோ ஒரு தாவரத்தின் பெயரோ, தகவலோ தெரியவில்லை என்றால், அத்தாவரத்தின் படத்தை இந்த வலைவாசலில் உள்ளீடு செய்தால், அதில் இணைந்துள்ள தாவரவியலாளர்கள் அத்தாவரத்தை அடையாளம் காண உதவுவார்கள்.
அண்மையில் இந்த வலைவாசல் நடத்திய ‘மரம் பார்ப்போம் மரம் காப்போம்' (Neighbourhood Tree Campaign) எனும் மரங்கள் கணக்கெடுப்பில் பலர் கலந்துகொண்டு அவரவர் வீடுகளில், தெருக்களில் உள்ள மரங்களின் வகை, எண்ணிக்கை, இருப்பிடத்தைப் பட்டியலிட்டு இந்த வலைவாசலில் உள்ளீடு செய்தார்கள்.
மேலும் அறிய www.indiabiodiversity.org மற்றும்
ஹார்ன்பில் வாட்ச் (Hornbill Watch)
இருவாச்சி ஓர் அழகான பறவை. இவை பெரும்பாலும் அத்திப் பழங்களையே உண்டு வாழ்கின்றன. மிகப்பெரிய மரங்களில் கூடு கட்டும். இந்தியாவில் 9 வகை இருவாச்சிப் பறவைகள் உள்ளன. இறக்கைகளுக்காகவும், மண்டையோட்டுக்காகவும் இவை கள்ள வேட்டையாடப்படுவதாலும், வாழிட அழிப்பாலும், மிகப்பெரிய மரங்களை வெட்டிச் சாய்ப்பதாலும், இவை ஆபத்துக்கு உள்ளாகி உள்ளன. இவற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தை விளக்கவும், இவற்றின் பரவலை ஆவணப்படுத்தவும் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. நம்மிடம் உள்ள இந்திய இருவாச்சிகளின் படத்தை இந்த இணையத்தில் பதிவேற்றலாம்.
மேலும் அறிய: http://www.hornbills.in/
கன்சர்வேஷன் இந்தியா (Conservation India)
அழகிய நிலவமைப்பையும், காட்டுயிர்களையும் பல கோணங்களில் படம்பிடித்துக் கொண்டிருக்காமல், இயற்கையான வாழிடங்களையும், சுற்றுச்சூழலையும் சீரழிக்கும் காட்சிகளையும் ஆவணப்படுத்தலாம். அந்த வாழிடத்துக்கும், அங்கு வாழும் உயிரினங்களும் நன்மை புரியும் வகையில் இயற்கைப் பாதுகாப்பு ஒளிப்படங்களை இந்த இணையதளத்துக்கு அனுப்பி வைக்கலாம். உதாரணமாக ஏதேனும் ஒரு காட்டுப் பகுதிக்கு நாம் செல்லும்போது, அங்குக் கள்ள வேட்டையில் ஈடுபட்டிருப்பவர்களின் படத்தையோ, மரவெட்டிகளின் படத்தையோ எடுத்து அது பற்றி விளக்கங்களை அளித்து இந்த இணையத்தில் பதிப்பிக்கலாம்.
மேலும் அறிய: www.conservationindia.org
நன்றி
கடந்த ஐந்து மாதங்களாகக் காட்டுயிர், சுற்றுச்சூழல் சார்ந்த எனது அனுபவங்களையும், கருத்துகளையும் இந்தப் பகுதியில் பகிர்ந்து வந்தேன். இந்தப் பகுதியுடன் இத்தொடர் நிறைவடைகிறது. பல்லுயிர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பேணல் குறித்துத் தமிழில் மேலும் அறிந்துகொள்ள விரும்புபவர்கள் ம. கிருஷ்ணன், சு. தியடோர் பாஸ்கரன், ச. முகமது அலி உள்ளிட்டோரது படைப்புகளைத் தேடிப் படிக்கவும். காட்டுயிர் சார்ந்த எனது மற்றப் படைப்புகளை இந்த வலைப்பூவில் வாசிக்கலாம்: http://uyiri.wordpress.com
(நிறைவடைந்தது)
கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: jegan@ncf-india.org
கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: jegan@ncf-india.org
No comments:
Post a Comment