Friday, 21 November 2014

குளங்களைக் கரைசேர்ப்போம்!

இந்தியாவின் முக்கியமான நீர் ஆதாரங்களான குளங்களின் இன்றைய நிலை மிகவும் கவலைக்குரியது
குளம் மற்றும் ஏரிகள் அமைந்துள்ள இடங்களில் வீடு மற்றும் பிற கட்டிடங்கள் கட்டுவதற்கு எக்காரணம் கொண்டும் அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செப்டம்பர் 6, 2014 அன்று ஒரு முக்கியமான தீர்ப்பைக் கூறியுள்ளது.
இந்தியாவில் ஆற்றுப் பாசனமும் கிணற்றுப் பாசனமும் ஏற்படுத்தப்படுவதற்கு முன்னால், விவசாயம் மற்றும் இதர பயன்பாடுகளுக்காக ஏரிகளும் குளங்களும் பயன்படுத்தப்பட்டுவந்திருக்கின்றன. குளமும் ஏரிகளும் அளவில் ஆறுகளைவிடச் சிறியனவாக இருப்பதால், இவற்றை எளிதாக நிர்வாகம் செய்ய முடியும். பராமரிப்புச் செலவும் குறைவு. குளங்களின்மூலம் பயிர்ச் சாகுபடி செய்யப்படும் பரப்பு சிறியதாக இருப்பதால், நீர்ப்பகிர்வும் மேலாண்மையும் செய்வது எளிது.
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறு, குறு விவசாயிகளின் முக்கியமான நீர் ஆதாரம் குளங்கள். சிறிய அளவிலான குளங்கள் மூலம் மழைநீரைச் சேமித்து வைத்து, நீர் வளத்தைப் பெருக்க முடியும். இத்தனை சிறப்புகள் மிக்க குளங்களை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருகிறோம் என்பதுதான் மிகப் பெரிய துயரம்!
கடந்த 30 ஆண்டுகளில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் ஐரோப்பியப் பொருளாதாரக் குழுமங்களின் உதவியுடன் குளங்களைச் சீர்ப்படுத்தி, அவற்றின் பயன்பாட்டை அதிகரிப்பதற்குப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2004-05-ல் சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில், குளங்களைச் சரிசெய்து உபயோகத்துக்குக் கொண்டுவரக்கூடிய ஒரு புத்துயிர்த் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனாலும், குளங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகும் நிலைதான் தொடர்கிறது!
காணாமல் போகும் குளங்கள்
பெரும்பாலான குளங்களும் ஏரிகளும் அமைந்திருந்த இடங்களில் இன்று அரசு மற்றும் இதர கட்டிடங்கள் கட்டப்பட்டுவிட்டன. இன்னும் சில இடங்களில் குளங்கள் சாக்கடை நீரோடைகளாவும், நகராட்சியின் குப்பைக் கிடங்குகளாகவும் மாற்றப்பட்டுவிட்டன. மத்திய நீர்வளத்துக்கான நிலைக் குழுவால் 2012-13-ல்
சமர்ப்பிக்கப்பட்ட 16-வது அறிக்கை, பெரும்பாலான ஏரிகளும் குளங்களும் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. ‘இது வெட்கக் கேடான விஷயமல்லவா?’ என்றும் அந்த அறிக்கை கேள்வி எழுப்பியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் ஒரு ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 1 லட்சம் சிறிய நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளால் அழிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநிலத்தின் வருவாய்த் துறையின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
தலைநகரிலும் இதே கதை!
டெல்லியில் உள்ள 1,012 நீர்நிலைகளில், ஏறக்குறைய 168 நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது.
குளங்களும் நீர்நிலைகளும் ஆக்கிரமிக்கப்படுவதால், மழைக் காலங்களில் நீரைச் சேமித்துப் பூமிக்குள் அனுப்ப முடியாமல் போகிறது. இதன் காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நகரங்கள் தத்தளிக்கின்றன.
மத்திய நீர்வளத் துறையால் வெளியிடப்பட்ட மூன்றாவது குறு நீர்ப்பாசனக் கணக்கெடுப்பு அறிக்கையின்படி (2000-01), இந்தியாவிலுள்ள குளம் மற்றும் சிறிய நீர்நிலைகளின் எண்ணிக்கை 5.56 லட்சம். இவற்றில் 85,000 குளங்கள் ஆக்கிரமிப்பாலும், பராமரிப்பின்மையாலும் தற்போது உபயோகத்தில் இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏறக்குறைய 10 லட்சம் ஹெக்டேர் நீர்ப்பாசனப் பரப்பளவை நாம் இழந்துவிட்டோம்.
தொடர் ஆக்கிரமிப்புகள், பராமரிப்பின்மை போன்ற காரணங்களால், இந்த நீர்நிலைகள் மூலம் பயன்பெறும் பாசனப் பரப்பளவு குறைந்துகொண்டே வருகிறது. 1950-களில் மொத்த நீர்ப்பாசனப் பரப்பில் ஏறக்குறைய 40 முதல் 50% வரை குளங்கள் மூலமாக மட்டும் பல்வேறு மாநிலங்களில் பாசன வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது. 1960-61-ல், இந்தியாவில் குளங்கள் மூலம் நீர்ப்பாசனம் பெற்ற மொத்தப் பரப்பளவு ஏறக்குறைய 46.30 லட்சம் ஹெக்டேர்கள். தற்போது (2010-11) அதன் அளவு, பாதிக்கும் கீழ் குறைந்துவிட்டது. அதாவது, 20.40 லட்சம் ஹெக்டேர்களாக!
தவிக்கும் தமிழகம்
ஏறக்குறைய 39,000 குளங்கள் மற்றும் ஏரிகளைத் தன் வசம் கொண்டுள்ள தமிழகத்தில், 1960-61-ல்இவற்றின் மூலம் நீர்ப்பாசனம் பெற்ற பரப்பளவு ஏறக்குறைய 9.36 லட்சம் ஹெக்டேர்கள். ஆனால், இந்தப் பரப்பளவு தொடர்ந்து குறைந்து 2011-12-ல் 5.28 லட்சம் ஹெக்டேர்களாகக் குறைந்துவிட்டது. மழையின் அளவு குறைந்ததே இதற்குக் காரணம் எனச் சிலர் பொத்தாம் பொதுவாகக் கூறுகிறார்கள். உண்மை அதுவல்ல! அரசுத் துறையினால் வெளியிடப்படும் புள்ளிவிவரப்படி, தமிழகத்திலோ, இந்தியா முழுவதுமோ ஆண்டின் மொத்த மழையளவில் கடந்த 30 ஆண்டுகளில் பெரும் குறைவு ஏற்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் நல்ல மழை பொழிந்த ஆண்டுகளில்கூட, குளங்கள் மூலமாகப் பயன்பெறும் பாசனப்பரப்பு அதிகரிக்கவில்லை. அப்படியென்றால், குறைந்துவரும் குளத்துப் பாசனப் பரப்புக்கு, மழை அல்லாத மற்ற காரணங்கள் முக்கியமானவை என்பது தெளிவாகிறது.
செய்ய வேண்டியது என்ன?
தண்ணீருக்காகத் தினமும் தெருச்சண்டையில் ஆரம்பித்து, மாநிலங்களுக்கு இடையேயான சண்டைகள் வரை அரங்கேறிக்கொண்டிருக்கும் நம் நாட்டில், குளங்களைப் பராமரித்துப் பாதுகாக்கவில்லையென்றால், நாம் பல்வேறு சிக்கல்களை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும். இன்று இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கிணறுகள், ஆழ்துளைக்கிணறுகள் மூலமாக விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவைகள் பூர்த்திசெய்யப்
பட்டுவருகின்றன. ஆனால், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீரைச் சேமிக்காமல் போனால், கிணறுகள் நீர்விருத்தி இல்லாமல் வறண்டுபோகும். நம் நாட்டில் மொத்தமுள்ள 5,824 வட்டங்களில், 1,494 வட்டங்களில் நிலத்தடி நீரின் அளவு தொடர்ந்து உறிஞ்சப்பட்டு, அனுமதிக்கப்பட்ட எல்லையைத் தாண்டிவிட்டதாக மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது. மேலும், நிலத்தடி நீரை உபயோகப்படுத்துவதற்கு ஆகும் செலவு பன்மடங்கு அதிமாக உள்ளதால், கிராமத்தில் வாழும் ஏழைகளால் அவற்றை எளிதாகப் பெற முடியாது. எனவேதான், குளங்களையும் ஏரிகளையும் காப்பாற்றி உத்வேகம் கொடுப்பதற்குப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.
தற்போது குளங்களையும் ஏரிகளையும் பராமரிப்பதற்காக அரசால் நிர்வகிக்கப்படும் தனிப்பட்ட துறை எந்த மாநிலத்திலும் இருப்பதாகத் தெரியவில்லை. குளங்களைப் பாதுகாக்க வேண்டிய பொதுப்பணித் துறையும் நீர்ப்பாசனத் துறையும் மாற்றாந்தாய் மனதோடு குளங்களைப் பார்க்கின்றன. எனவே, குளங்கள் மூலமாக ஏற்படும் நேரடி மற்றும் மறைமுக நன்மைகளைக் கருத்தில் கொண்டு, குளங்கள் மற்றும் சிறிய நீர்நிலைகளுக்காக ஒரு தனி அமைச்சகம் ஒன்றை மத்திய அரசு நிறுவி, அதற்குப் போதுமான நிதி ஒதுக்க வேண்டியது அவசியமாகிறது. மதுரை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பின்பற்றி, நீர்நிலைகள் அமைந்துள்ள இடங்களை ஆக்கிரமிப்பவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கக் கூடிய ஒரு சட்ட வரைவு ஏற்படுத்தப்பட வேண்டும்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் குளங்களை மேலாண்மை செய்வதற்காக விவசாயிகளால் ஏற்படுத்தப்
பட்ட ‘குடிமராமத்து’ என்ற அமைப்பு, இன்று பல்வேறு காரணங்களால் மிகவும் வலுவிழந்து காணப்படுகிறது. இவற்றை வலுப்பெறச் செய்து, குளங்களை நிர்வாகம் செய்யும் முழுப் பொறுப்பையும் அவர்களிடம் கொடுப்பதற்குச் சட்டம் இயற்ற வேண்டியது அவசியம். உலக நீர்தினம் ஆண்டுதோறும் கொண்டாடுவதுபோல, குளங்களின் மகத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகக் சிறிய நீர்நிலைகள் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட வேண்டும்.
‘நீரின்றி அமையாது உலகு’ என்பதற்கேற்ப, நாம் யாரும் நீரின்றி வாழ முடியாது. இதற்கு எந்தவித மாற்றுப் பொருளும் இதுவரையில் கிடையாது. எனவே, குளங்களைப் பாதுகாத்து நீரைச் சேமித்து நம் சந்ததியினரும், அவர்களுக்குப் பிறகு வரப்போகும் சந்ததியினரும் வாழ வழிவகுப்போம்.
- அ. நாராயணமூர்த்தி, பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், பொருளியல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, அழகப்பா பல்கலைக்கழகம்.
தொடர்புக்கு: na_narayana@hotmail.com

No comments:

Post a Comment