தனித் தமிழ் இயக்கம், சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் போன்ற பல்வேறு இயக்கங்கள் தமிழை உலக அளவில் கொண்டுசென்றதைவிட அதிகமாக, தமிழை உலக அரங்கில் ஒலிக்கவைத்த தமிழர் டாக்டர் மால்கம் ஆதிசேஷையா.
மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு பாரீஸில் நடந்தபோது, அப்போதைய யுனெஸ்கோவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த டாக்டர் ஆதிசேஷையா “என் சொந்த மொழியான தமிழில் பேச என்னை அனுமதிக்க வேண்டும்” என்று அந்த மாநாட்டைத் தொடக்கிவைத்து, “விரிந்து பரந்த இந்த ஆதிக்கத்துக்கு (தமிழர் நாகரிகத்துக்கு) ஒரு தனிச்சிறப்பு உண்டு. அது, அதன் பூரண சமாதான இயல்பு ஆகும். அநேகமாக சரித்திரத்தில் வேறு எந்த நாகரிகமும் கத்தியின்றி, ரத்தமின்றி, வாணிபம், கலாச்சாரம் இவை மூலமாகவே, தனது செல்வாக்கை இவ்வளவு தூரம் பரப்பியதில்லை. ஆங்காங்கு உள்ள பண்பாடுகளோடு தமிழ்ப் பண்பாடு நன்கு ஒன்றிணைந்தது. மனம் திறந்து நிறைந்த இந்த சர்வதேசத் தொடர்பின் அஸ்திவாரம், கடல் கடந்த வாணிபம் மாத்திரமல்ல - தமிழரின் ஆழ்ந்த இதயபூர்வமான மனிதாபிமானம் என்றே கூற வேண்டும்” என்று பேசினார். இப்படிப் பேசியதோடு மட்டுமல்லாமல், அந்த மாநாட்டில் தமிழ் அறிஞர்கள் வைத்த மிக முக்கியமான கோரிக்கையான ‘உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்’ தொடங்கவும் யுனெஸ்கோ மூலம் அவர் உதவி செய்தார்.
உலக மொழிகளில் திருக்குறள்
திருக்குறளை ஆங்கிலத்திலும் பின்னர் பிரெஞ்சு, சீன, ஸ்பானிஷ், ரஷ்ய, அரேபிய மொழிகளிலும் யுனெஸ்கோ உதவியால் மொழிபெயர்க்க வைத்தார். தனது அலுவல் மொழிகளில் மட்டுமே மாதப் பத்திரிகை நடத்திவந்த யுனெஸ்கோ நிறுவன இதழை, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் கொண்டுவரச் செய்தார். தமிழகத்தில் உள்ள பழமையான கோயில்களைப் புனரமைத்தல், அஜந்தா, எல்லோரா ஓவியங்களை ஆர்ட் ஆல்பமாக வெளியிடுதல் ஆகியனவும் அவர் ஆற்றிய முக்கியமான பணிகளுள் ஒன்று. சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியபோது, தமிழ்த் துறை விரிவுரையாளர்களுக்கும் மற்ற துறை விரிவுரையாளர்களைப் போன்ற ஊதியமும், பல்கலைக்கழக ஊழியர்களுக்காகப் பாலவாக்கம் வீட்டு வசதித் திட்டம் போன்றவையும் மால்கம் ஆதிசேஷையாவின் பங்களிப்பே.
உலக வங்கியின் கதவுகளைத் திறந்தவர்
யுனெஸ்கோ உறுப்பு நாடுகளின் உள்கட்டமைப்பு, கல்வி, தொழில்நுட்பம், கலாச்சார வளர்ச்சிக்கு அப்போது போதுமான நிதி இல்லை. யுனெஸ்கோவின் தொழில்நுட்ப உதவித் துறை இயக்குநராக இருந்த மால்கம் ஆதிசேஷையா, உறுப்பு நாடுகளுக்குக் கல்விக் கடன் அளிக்குமாறு உலக வங்கியை வேண்டினார். ஆனால், உள்கட்டமைப்பு, தொழில் வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்குக் கடனுதவி அளித்துவந்த உலக வங்கி, ‘கல்விக்காகக் கடன் அளிப்பது என்பது தனது பணியில்லை’ என்று இதற்குச் சம்மதிக்கவில்லை. ‘வறுமை ஒழியவும், பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் மக்களுக்குக் கல்வி அவசியம்; அதற்கு உலக வங்கி உதவி செய்ய வேண்டும்’ என்பதை வலியுறுத்தி, உலக வங்கியை இணங்கவைத்து யுனெஸ்கோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய வைத்தார். இன்றைக்கு, தொழில்நுட்பக் கல்விக்கூடத்தின் கட்டிடத்திலிருந்து தொடக்கக் கல்வி பாடத்திட்டம் தயாரிப்பது வரை அனைத்துக்கும் யுனெஸ்கோ உதவி செய்யத் தயாராக இருக்கிறது என்றால், அதற்கு 1964-ம் ஆண்டு மால்கம் ஆதிசேஷையா போட்ட அடித்தளம் மிக முக்கியமான காரணம்.
தேசிய வயதுவந்தோர் எழுத்தறிவுத் திட்டம்
ஆதிசேஷையா ராஜ்ய சபா உறுப்பினராக இருந்தபோது, அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் ஆதிசேஷையாவிடம், “1960-ல் பதினான்கு வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வியைச் சட்டமாக்கினோம். ஆனால், கடந்த இரண்டு தலைமுறைகளாக நம்மால் 100% எழுத்தறிவை எட்ட முடியவில்லையே” என்று வருத்தப்பட்டார். இரண்டு தலைமுறைகளாக எழுத்தறிவு பெறாத வயது வந்தோரையும் எழுதப் படிக்க வைக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு, உடனடியாக ஒரு திட்டத்தைப் பிரதமர் மொரார்ஜி தேசாயிடம் முன்வைத்தார் ஆதிசேஷையா. அத்திட்டத்தின் அடிப்படையிலேயே ‘தேசிய வயதுவந்தோர் எழுத்தறிவுத் திட்டம்’1978-ல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு எடுத்துக்காட்டாக முதன்முதலாக கேரளாவில் உள்ள எர்ணாகுளம் மாவட்டம் முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக 1990-ம் ஆண்டு பிப்ரவரி 4-ல் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் இந்தியா முழுவதும் மிகப் பெரிய கல்விப் புரட்சியை ஏற்படுத்தியது. இன்றைய தொலைதூரக் கல்வித் திட்டம், அறிவொளி இயக்கம், பருவத் தேர்வுத் திட்டம் எல்லாம் அவர் உருவாக்கிய கல்வித் திட்டங்களே.
1972-ம் ஆண்டு ஆதிசேஷையாவைத் தமிழகத் திட்டக்குழு உறுப்பினராக்கினார் அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி. கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான 12 ஆண்டு கால (1972-1984) திட்ட நகலைத் தயாரிக்கும் பணி ஆதிசேஷையாவிடம் அளிக்கப்பட்டது. பத்தாண்டுகளுக்கான திட்ட நகலை ‘ஓர் கற்கும் சமூகத்தை நோக்கி’ என்ற பெயரில் புத்தகமாக அவர் வெளியிட்டு, பிற திட்டக்குழு உறுப்பினர்களிடம் அளித்தார். இதைக் கண்டு பதைபதைத்த அந்தக் குழு உறுப்பினர்கள், “திட்ட ஆய்வை ரகசியமாக வைத்துக்கொள்ளாமல் இப்படிப் புத்தகமாக ஆக்கியிருக்கிறீர்களே, முதல்வர் என்ன சொல்வாரோ?” என்று கேட்டார்கள். அவர்களிடம், “மக்களுக்காகத்தானே திட்டம், அதனை ஏன் ரகசியமாக வைக்க வேண்டும்?” என்றார் ஆதிசேஷையா. பின்னர், திட்டக்குழுத் தலைவரான அப்போதைய முதல்வரிடம் அதை அளித்தார். அவர் அதைப் பார்த்துவிட்டு, “இது மிகவும் போற்றுதலுக்குரிய பணி. குழுவின் எல்லா உறுப்பினர்களும் இவ்வாறே செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றார்.
1947 முதல் 1990 வரை பதவியில் இருந்த இந்தியப் பிரதமர்கள், தமிழக முதல்வர்கள் அனைவரும் ஆதிசேஷையாவின் கல்வி, பொருளாதார ஆலோசனையைப் பெற்றார்கள் என்பதும், தமிழர் பண்பாட்டின் பெருமையை யுனெஸ்கோ மூலம் உலக நாடுகளுக்கு எடுத்துச்சென்றவர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
- ஆ. அறிவழகன், ‘வெள்ளந்தி மனிதர்கள்’ நூலின் ஆசிரியர்.
தொடர்புக்கு: aazhagan@rediffmail.com
No comments:
Post a Comment