இந்தப் பறவையின் அலகு, கதிர் அறுக்கும் அரிவாளைப் போல நீண்டும் சற்று வளைந்தும் காணப்படும். அதனால் மக்கள் இதற்குச் சூட்டிய பெயர் அரிவாள் மூக்கன். இறக்கைகள் வெள்ளையாக இருப்பதால் வெள்ளை அரிவாள் மூக்கன்.
ஆங்கிலப் பெயர்: Black headed Ibis
அடையாளங்கள்: அரிவாள் மூக்கன்கள் கோழியைவிட பெரிய நீர்ப்பறவைகள். இதன் அலகும் தலையும் கழுத்தும் கறுப்பு நிறத்திலும், உடல் வெள்ளை நிறத்திலும் இருக்கும். மற்றப் பறவைகளுடன் சேர்ந்து கூடு அமைக்கும்.
உணவு: சதுப்பு நிலங்களிலும் ஆழம் குறைந்த நீர்நிலைகளிலும் நடந்தபடி அலகால் துழாவித் துழாவிப் புழுக்கள், தவளைகள், சிறு பூச்சிகள் போன்றவற்றைக் கொத்தித் தின்னும். சின்னச்சின்ன கூட்டமாக இரை தேடும்.
தனித்தன்மைகள்: தமிழ்நாட்டில் மூன்று வகை அரிவாள் மூக்கன்கள் தென்படுகின்றன. அரிவாள் மூக்கன்களில், குறிப்பாகச் சிறிய அரிவாள் மூக்கன் (Glossy Ibis) அந்தக் காலத்தில் அன்றில் என்று சங்க இலக்கியத்தில் புலவர்களால் பிரபலமாகப் பாடப்பட்டுள்ளது. குரல் எழுப்பும் தன்மை இதற்கு இல்லை.
தென்படும் இடங்கள்: வேடந்தாங்கல், கூந்தங்குளம், புதுவை ஊசுட்டேரி, கோடிக்கரை உள்ளிட்ட பறவை சரணாலயங்கள், ஏரிகளில் இதைப் பார்க்கலாம்.
No comments:
Post a Comment