புதுடெல்லியில் உள்ள விலங்குக் காட்சிச் சாலையில் சில மாதங்களுக்கு முன்பாக மசூத் எனும் 20 வயது இளைஞன் புலியின் வசிப்பிடத்துக்குள் விழுந்துவிட்டான். வெள்ளைப் புலி அவனை இழுத்துச் சென்றது. அதன் வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவி நிறைய பேரின் அனுதாபத்தைப் பெற்றன.
மசூத்தைப் புலி கடித்துக் கொன்றது என்பதற்கு நேர்மாறாக, மருத்துவ இதழ்களிலும் சமூக வலைத்தளங்களிலும் மாறுபட்ட கருத்துகள் விவாதிக்கப்பட்டன.
மருத்துவ ஆய்வு
புலி வேட்டையாடிய மனித உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு வருவது அரிது. அப்படியே வந்தாலும் பிரேதப் பரிசோதனையில் பெரிதாக எதையும் தெரிந்துகொள்ள முடிவதில்லை. புகழ்பெற்ற மருத்துவமனையான அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் (ஏ.ஐ.ஐ.எம்.எஸ்.) மசூத்தின் உடல் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
“புலி தாக்கி இறந்த உடல்கள் மிகவும் அரிதாகத்தான் பிரேதப் பரிசோதனைக்கு வந்துள்ளன. அவற்றை ஆவணப்படுத்தி வைப்பது அரிதான விஷயம். ஆனால், மசூத்தின் பிரேதப் பரிசோதனை வித்தியாசமானது. மசூத், காட்டுப் புலி தாக்கி இறந்திருந்தால் காயங்களின் தன்மையும் மரணமும் மாறுபட்டு இருந்திருக்கும்” என்கிறார் டில்லி விஞ்ஞானக் கழகத்தின் தடய அறிவியல் துறையின் துணைப் பேராசிரியர் டாக்டர் ஆதர்ஷ்குமார்.
பாதுகாப்பு தேடி
“மசூத்தின் உடலில் 27 காயங்கள் உள்ளன. புலி கொன்றதாகச் சொல்லிப் போலீஸார் காட்டிய வீடியோவைப் பார்த்தோம். அந்தப் புலி விலங்குக் காட்சிச் சாலையிலேயே பிறந்து வளர்ந்தது. அதற்கு வேட்டையாடும் திறன்கள் கிடையாது. அது ஆரம்பத்தில் அவனோடு விளையாட முயன்றது. மேலேயிருந்து மக்கள் அதன்மீது கற்களை வீசியதும், அது பயந்தது. ஒரு பாதுகாப்பான இடத்துக்குப் போவதற்காக அந்த இளைஞனை அது இழுத்துச் சென்றது” என்கிறார் ஆதர்ஷ்குமார்.
மசூத் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக அவனது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவனது மனநிலைக்கும் சம்பவத்துக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். வேட்டை தெரியா புலி தடுப்புகளைக் கடந்து புலி இருந்த பகுதிக்கு உள்ளே விழுந்துவிட்ட மசூத்தை, சில நிமிடங்களுக்குப் புலி ஒன்றும் செய்யவில்லை. சும்மா தட்டித்தான் பார்த்திருக்கிறது. அந்த இளைஞனுக்கு உதவுவதாக நினைத்துக்கொண்டு மேலேயிருந்து புலியின் மீது கற்களை விட்டு எறிந்து, அதை விரட்ட முயன்ற மக்களைப் பார்த்துத்தான் அது உறுமியது. மசூத்தைப் பார்த்து உறுமவில்லை என்பதை வீடியோவில் பார்க்க முடிகிறது.
விஜய் என்ற 200 கிலோ எடை உள்ள அந்த வெள்ளைப் புலி, டெல்லி விலங்குக் காட்சிச் சாலைக்குள்ளேயே பிறந்து வளர்ந்தது. காடு என்றால் என்ன என்றே அதற்குத் தெரியாது. வேட்டையாடித்தான் சாப்பிடவேண்டும் என்ற கட்டாயம் அதற்கு இல்லை. அதற்கு மணி அடித்தால் சோறு என்ற வகையில் இறைச்சி தரப்படுகிறது. மசூத்தைக் கடித்து அவனது சாவுக்குக் காரணமான அன்றைய தினத்தில்கூட, சம்பவத்துக்குச் சில மணி நேரம் கழித்து 10 கிலோ எருமை இறைச்சியை உணவாகச் சாப்பிட்டுள்ளதாக விலங்குக் காட்சிச் சாலை செய்திக் குறிப்பு சொல்கிறது.
தொடரும் விவாதம்
மனிதனை வேட்டையாடிய பல ஆட்கொல்லிப் புலிகளின் கதைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவையும்கூட வேட்டையாட முடியாதபடி வயதாகிவிட்டாலோ, பற்களில் பிரச்சினை போன்று வேட்டையாடும் உறுப்புகள் பழுதடைந்தாலோதான் மனிதனை வேட்டையாடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. ஏனென்றால், புலி வேட்டையாட மனிதன் எளிதான இலக்காக இருப்பதுதான் என்று உயிரியலாளர்கள் தெரிவிக்கின்றனர். மசூத்தைக் கொல்லும் எண்ணத்துடன் அந்தப் புலி அவனைக் கழுத்தில் கடித்து இழுத்துச் செல்லவில்லை. அது உண்ணவும் விரும்பவில்லை எனச் சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடக்கின்றன.
ஆனால், அதைக் கேட்கத்தான் மசூத் உயிரோடு இல்லை.
No comments:
Post a Comment