Tuesday, 18 November 2014

வாழ்நாள் சாதனைக்கான சி.கே.நாயுடு விருதுக்கு தேர்வு: வெங்சர்க்கார் நெகிழ்ச்சி

பிசிசிஐ உருவாக்கிய கர்னல் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதிற்கு இந்த ஆண்டு முன்னாள் வீரர் திலிப் வெங்சர்க்கார் தேர்வு செய்யப்பட்டார். இது தனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்று வெங்சர்க்கார் கூறியுள்ளார்.

திலிப் வெங்சர்க்கார் ஆடும் விதம் சி.கே.நாயுடுவை பிரதிபலிப்பது போல் இருந்ததால் வெங்சர்க்காரையும் செல்லமாக ‘கர்னல்’ என்றே கிரிக்கெட் அரங்கில் அழைத்தனர்,

“சி.கே.நாயுடு விருதுக்கு என்னைத் தேர்வு செய்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் ஆகும். இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய விருது என்றே நான் இதனை கருதுகிறேன்” என்றார் வெங்சர்க்கார்.

இந்திய அணியின் முதல் டெஸ்ட் கேப்டன் சி.கே.நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விருதுக்கான நபரைத் தேர்வு செய்யும் கமிட்டியில் ஊடகவியலாலர் சேகர் குப்தா, பிசிசிஐ இடைக்கால லைவர் ஷிவ்லால் யாதவ் மற்றும் செயலர் சஞ்சய் படேல் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

நவம்பர் 21-ஆம் தேதி மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் வெங்சர்க்கார் இந்த விருதைப் பெறுகிறார். இதே தினத்தில்தான் இந்திய அணி தனது கடினமான, நீண்ட ஆஸ்திரேலிய தொடருக்காக ஆஸ்திரேலியா புறப்பட்டுச் செல்கிறது.

இந்த விருதுக்காக வெங்சர்க்காருக்கு 25 லட்சத்திற்கான காசோலை வழங்கப்படும்.

58 வயதாகும் வெங்சர்க்கார், இந்த விருதைப் பெறும் 19-வது நபர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெங்சர்க்கரின் கிரிக்கெட் வாழ்வு:

1975-76-ஆம் ஆண்டு சீசனில் இரானி கோப்பைப் போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவின் பிஷன் பேடி, பிரசன்னா ஆகியோருக்கு எதிராக சில பல சிக்சர்களை அடித்து அசத்தி தேசிய அணித் தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்த்தார்.

இதனையடுத்து நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் தொடருக்கு அவர் அணியில் தேர்வு செய்யப்பட்டார். தொடக்கத்தில் அவர் சரியாக ஆடவில்லை. 14-வது இன்னிங்ஸில்தான் முதல் அரைசதம் கண்டார் என்று கூறப்படுவதுண்டு. 

ஆனால், அதன் பிறகு அபாரமான பல இன்னிங்ஸ்களை அவர் ஆடியுள்ளார். லார்ட்ஸ் மைதானத்தில் 3 சதங்களை எடுத்த ஒரே வெள்ளையர் அல்லாத வீரர் வெங்சர்க்கார்தான்.

இதில் 1986-ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் லார்ட்ஸில் எடுத்த 126 நாட் அவுட், இந்திய வெற்றிக்கு வழிவகை செய்தது. அப்போது சுனில் கவாஸ்கருக்குப் பிறகு 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய ஒரே வீரர் இவர்தான். 1986-87-ஆம் ஆண்டில் நம்பர் 1 பேட்ஸ்மென் என்று கருதப்பட்டவர்.

1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கபில் தலைமையில் இந்தியா வென்றபோது, காயத்தினால் இவரால் ஆட முடியாமல் போனது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது போட்டியில் மார்ஷல் பந்தில் அடிபட்டு வெளியேறினார். ஆனால் அதற்கு முன்பு 32 ரன்களில் 7 பவுண்டரிகளை விளாசி அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

10 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்த வெங்சர்க்கார், 129 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். ஆஸ்திரேலியாவில் இவர் ஆடிய சில ஒரு நாள் இன்னிங்ஸ்களை மறக்க முடியாது. குறிப்பாக 1985 ஆம் ஆண்டு கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்ற மினி உலகக் கோப்பையின் நியூசிலாந்துக்கு எதிராக எடுத்த அற்புதமான அரைசதத்தை மறக்க முடியுமா?

116 டெஸ்ட் போட்டிகளில் 42.13 என்ற சராசரியில் 6,868 ரன்கள் எடுத்துள்ளார் வெங்சர்க்கார். அதிக பட்ச ஸ்கோர் 166. மொத்தம் 17 சதங்கள் 35 அரைசதங்கள்.

129 ஒருநாள் போட்டிகளில் 3508 ரன்களை எடுத்துள்ளார். ஒரு சதம், 23 அரைசதம்.

No comments:

Post a Comment