Monday, 17 November 2014

தைவானுக்கு சுதந்திரம் எப்போது?

தைவான் தொடர்பான செய்திகள் என்றாலே உண்மைக்கு மாறாக எழுதுவது என்பது சீன ஊடகங்களுக்கு வழக்கமாகிவிட்டது. தாங்கள் வெளியிடும் செய்திகளுக்கு ஆதாரங்களைச் சரிபார்ப்பது அவசியம் என்றுகூட அந்த ஊடகங்கள் கருதுவதில்லை.
ஆசிய பசிபிக் நாடுகளின் பொருளாதார உச்சி மாநாட்டின்போது, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான சந்திப்பு தொடர்பான செய்தியும் இதற்கு விதிவிலக்கல்ல. “தைவான் சுதந்திர நாடாவதை அமெரிக்கா ஆதரிக்காது” என்று அதிபர் ஒபாமா கூறியதாக, தாய்நாடு திரும்பிய தைவான் அதிபர் மா யிங் ஜியாவ் நிருபர்களிடம் கூறியிருக்கிறார். தைவானின் சுதந்திரம் குறித்து அமெரிக்கத் தரப்பில் ஏதும் கூறப்படாதிருந்த நிலையிலேயே இந்தப் புனைவு சேர்க்கப்பட்டிருக்கிறது.
“தைவானுக்கும் சீனாவுக்கும் இடையே உறவு மேம்பட்டுவருவது குறித்து அமெரிக்கா மகிழ்ச்சி அடைகிறது, தைவான் சுதந்திரம் பெறுவதை அது ஆதரிக்கவில்லை” என்று ஒபாமா கூறியதாக நிக்கி ஆசியன் ரெவ்யூவுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார் மா யிங் ஜியாவ். பராக் ஒபாமா அதிபராகப் பதவியேற்றது முதல் அவரோ, அவருடைய அரசோ, தைவான் சுதந்திரம் பெறுவதை விரும்பவில்லை என்று கூறவே இல்லை. 1998 ஜூனில் பில் கிளிண்டன் சீனாவுக்குச் சென்றபோது ‘3 இல்லைகள்’ கொள்கையை வெளியிட்டார்.
“தைவான் சுதந்திர நாடாவதை அமெரிக்கா ஆதரிக்கவில்லை. 2 சீனாக்கள் இருப்பதை ஆதரிக்கவில்லை, ஒரு தைவான் - ஒரு சீனா இருப்பதையும் ஆதரிக்கவில்லை” என்று கூறியிருந்தார். அதனால் சீன, அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு என்றாலே தைவானில் உள்ளவர்களுக்குக் கலக்கமாக இருக்கும்.
தைவான் சுதந்திரம் அடைவதற்கு ஆதரவில்லை என்ற கொள்கை 1971-ல் அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன் சீனாவுக்குச் சென்றது முதலே பின்பற்றப் பட்டுவருகிறது. ஆனால், இந்தக் கருத்தை அமெரிக்கா கடைசியாக அதிகாரபூர்வமாகத் தெரிவிப்பது 2007 பிப்ரவரியுடன் முடிந்துவிட்டது. ஆசிய ராணுவப் பாதுகாப்பு தொடர்பான அமெரிக்க நிபுணர் ஷிர்லே கான் இதைத் தெரிவிக்கிறார். உலகில் ஒரு சீனாதான் இருக்க முடியும் என்று சீனா கூறுவதற்கும் வாஷிங்டன் கூறுவதற்கும் அர்த்தமே வேறு என்கிறார் கான். கருத்து வேறுபாடுகளைப் பேசித் தீர்த்துக்கொள்வது, தைவான் மக்களுடைய ஒப்புதலைப் பெறுவது, இந்த முடிவை எட்டுவதற்காக மக்களைச் சீண்டாமல் இருப்பது, ஒருதலைப்பட்சமாக யாரும் முடிவெடுக்காமல் இருப்பது ஆகியவையே அமெரிக்காவின் நிலை என்கிறார் ஷிர்லே கான்.
தைவான் சுதந்திர நாடாவதற்கு அமெரிக்க அதிபர்கள் ஆதரவு இல்லை என்பதாகக் கூறப்பட்டாலும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண அவர்கள் விதிக்கும் வழிமுறைகளே வேறு. ஒபாமா கூறாததை தைவான் அதிபர் மா யிங் ஜியாவ் கூறுகிறார் என்றால், தைவான் சுதந்திர நாடாகத் தொடர்வதை சீனாவும், மா யிங் ஜியாவும் தடுக்கப் பார்க்கிறார்கள் என்றுதானே விளங்கிக்கொள்ள வேண்டும்!
- TAIPEI TIMES | தைவான் நாளிதழ் தலையங்கம்

No comments:

Post a Comment