Wednesday, 12 November 2014

இது என்ன பறவை?

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் பலரது வீடுகளில் ‘ஏர் கன்' எனப்படும் குருவி சுடும் துப்பாக்கிகள் இருந்தன. சிறுவனாக இருந்த சாலிம் அலிக்கும் அப்படி ஒரு துப்பாக்கி பரிசாகக் கிடைத்திருந்தது. ஒரு நாள் தொண்டைப் பகுதியில் மஞ்சளாகவும் சற்றுப் புதுமையாகவும் இருந்த ஒரு குருவியை அவர் சுட்டார். அந்தக் குருவியை இதற்கு முன் அவர் பார்த்ததில்லை, புதிதாக இருந்தது.
என்ன வித்தியாசம்?
இதுவரை பார்த்த பறவைகளில் இருந்து மாறுபட்டிருக்கிறதே என்று அவருக்குத் தோன்றியது. அந்தக் குருவியை எடுத்துக்கொண்டு போய் தனது மாமாவிடம் என்ன பறவை என்று கேட்டார் சாலிம் அலி. அவரை வளர்த்த அவருடைய மாமா அமீருத்தின் தாயப்ஜிக்கு, பி.என்.எச்.எஸ். எனப்படும் பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்துடன் தொடர்பு இருந்தது. பறவைகள், உயிரினங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வது, இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதுதான் அந்த நிறுவனத்தின் வேலை. பம்பாய் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியில் அது அமைந்திருந்தது.
புதிய ஆர்வம்
சாலிம் அலியைப் பி.என்.எச்.எஸ். நிறுவனத்துக்கு அழைத்துச் சென்றார் அவருடைய மாமா. அந்நிறுவனத்தின் செயலாளர் டபிள்யு.எஸ். மில்லார்டை அவர்கள் சந்தித்தார்கள். சாலிம் அலி சுட்ட பறவை, சிட்டுக்குருவிக்கு உறவுப் பறவையான மஞ்சள் தொண்டைச் சிட்டு என்று அவர்தான் கூறினார்.
அருங்காட்சியகங்களில் வைத்திருப்பதைப் போல, அங்கு பதப்படுத்திப் பாதுகாக்கப்பட்டிருந்த பறவைகளை சாலிம் அலி அதன் பிறகு பார்த்தார். அந்தப் பறவைகள் சாலிம் அலியைக் கவர்ந்தன. பறவைகளைப் பற்றிப் படிக்க வேண்டும், தீவிரமாக அறிய வேண்டும் என்ற ஆர்வத்துக்கான விதை சாலிம் அலியின் மனதில் அங்கேதான் விழுந்தது.
பறவை ஆராய்ச்சி
வளர்ந்த பிறகு தொடர்ச்சியாகக் காடுகளில் தங்கிப் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்தார் சாலிம். எப்பொழுதும் கையில் ஒரு நோட்டுப் புத்தகம், பைனாகுலர் எனப்படும் இருநோக்கியைக் கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டு பறவைகளைத் தேடி நூற்றுக்கணக்கான கி.மீ. கால்நடையாகவே அவர் காடுகளுக்குள் அலைந்தார். அவரது பணி கடினமாகவும், ஆபத்து நிறைந்ததாகவும் இருந்தது.
மஞ்சள் தொண்டைச் சிட்டு பற்றி அறிந்துகொள்ளச் சென்ற அதே பி.என்.எச்.எஸ். நிறுவனத்தின் தலைவராகச் சாலிம் அலி பிற்காலத்தில் உயர்ந்தார்.
அனுபவித்துச் செய்யுங்கள்
மஞ்சள் தொண்டைச் சிட்டை சுட்டு வீழ்த்தியதை நினைவுபடுத்தும் வகையில், தனது வாழ்க்கை வரலாற்றை ‘சிட்டுக்குருவியின் வீழ்ச்சி' என்ற பெயரில் அவரே எழுதியுள்ளார். "ஒரு வேலையை உங்களால் மகிழ்ச்சியாக அனுபவித்துச் செய்ய முடிந்தால், அதன் மூலம் சிறந்த பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும்" என்று அவர் கூறியுள்ளார். இந்தக் கூற்றுக்கு அவரே சிறந்த உதாரணம். இந்தியப் பறவையியலுக்கு உலகப் பெருமையைத் தேடித் தந்தது அவருடைய பணி.
‘இந்தியப் பறவையியலின் தந்தை' என்று சாலிம் அலி போற்றப்படுகிறார்.
அவருக்குப் பிடித்தவை: மோட்டார் சைக்கிள், அல்ஃபோன்சா மாம்பழம், பறவைகள் (எப்படி விட முடியும்?).
சாலிம் அலியைக் கவுரவிக்கும் வகையில் லாடிடென்ஸ் எனும் பழந்தின்னி வவ்வால் வகைக்கு லாடிடென்ஸ் சாலிம் அலி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment