கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள் இன்று (நவம்பர் 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
நாகர்கோவில் ஒழுகினசேரி யில் பிறந்தவர். வறுமையால் 4-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போனார். காலையில் டென்னிஸ் பந்து பொறுக்கிப் போடும் வேலை. பகலில் மளிகைக் கடையில் பொட்டலம் மடிக்கும் வேலை. மாலையில் நாடகக் கொட்ட கையில் சோளப்பொரி, கடலை மிட்டாய், முறுக்கு விற்பனை.
நாடக மேடை அவரை ஈர்த்தது. மகனின் ஆர்வத்தைக் கண்ட தந்தை அந்த ஊரில் நாடகம் போட வந்த ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்த்துவிட்டார். பல நாடக கம்பெனிகளில் பணியாற்றினார். நாடகத்தில் வில்லுப்பாட்டு போன்ற பல சோதனை முயற்சிகளை மேற்கொண்டவர்.
பல நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார். திரையுலகில் கொடிகட்டிப் பறந்தபோதும் நாடகம் மீதான ஈர்ப்பு குறையவில்லை. மற்றவர்களுக்கு உதவுவதற்காகவே பலமுறை நாடகம் போட்டிருக்கிறார்.
இவரது திரையுலக வாழ்வைத் தொடங்கிவைத்த படம் ‘சதிலீலாவதி’. ஆனால், அதன் பிறகு இவர் நடித்த ‘மேனகா’ முதலில் வெளிவந்தது. முதல் படத்திலேயே தனக்கான காட்சிகளை எழுதினார். நகைச்சுவைக்கு என்று தனி ட்ராக் எழுதிய முதல் படைப்பாளி.
நடிகை பத்மினி, உடுமலை நாராயண கவியை அறிமுகம் செய்தது இவர்தான். பாலையாவின் நடிப்பை பாராட்டி தன் விலை உயர்ந்த காரை பரிசளித்தார். காந்தியடிகளின் தீவிர பக்தர். அவரது நினைவைப் போற்றும் வகையில் தன் ஊரில் சொந்த செலவில் நினைவுத் தூண் எழுப்பினார்.
சார்லி சாப்ளினுடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு, ‘சாப்ளினை ஆயிரம் துண்டு போட்டாலும் அதில் ஒரு துண்டுக்குகூட நான் ஈடாக மாட்டேன்’ என்று தன்னடக்கத்துடன் கூறினார். இவரது கிந்தனார் காலட்சேபம் மிகவும் பிரபலம்.
தமிழ் சினிமா வரலாற்றில் நகைச்சுவையை பாடல்களாகவும் அமைக்க முடியும் என்பதை நிரூபித்தவர். சொந்தக் குரலில் பல பாடல்களைப் பாடியுள்ளார். சில படங்களை இயக்கியுள்ளார். அண்ணாவுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இவர், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஒரு டாக்டரைப் பற்றி புகழ்ந்து பேசினார். கடைசியில், ‘இவ்வளவு நல்ல டாக்டரை சட்டசபைக்கு அனுப்பினால் உங்களுக்கு யார் வைத்தியம் பாப்பாங்க? அதனால் அவரை இங்கேயே வைத்துக்கொண்டு அண்ணாவுக்கு ஓட்டு போட்டு சட்டசபைக்கு அனுப்பிவையுங்கள்’ என்றார்.
குறுகிய காலத்தில் சுமார் 150 திரைப்படங்களில் நடித்தவர். 1947-ல் சென்னை திருவல்லிக்கேணி நடராஜா கல்விக் கழகம் சார்பில் இவருக்கு ‘கலைவாணர்’ பட்டம் வழங்கப்பட்டது.
கலைவாணருக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஆழ்ந்த நட்பு இருந்தது. உதவி என்று கேட்டு யார் வந்தாலும் அள்ளிக் கொடுத்த வள்ளல் இவர்.
நகைச்சுவையில் புரட்சியை ஏற்படுத்திய இவரது நினைவாக சென்னையில் உள்ள அரசு அரங்கத்துக்கு ‘கலைவாணர் அரங்கம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நகைச்சுவை மூலம் மக்களின் சிந்தனையைத் தூண்டி, இன்றும் மக்களின் மனங்களில் வாழும் என்.எஸ்.கே. 49 வயதில் காலமானார்.
No comments:
Post a Comment